Maalaimalaar.com மார்ச் 02, 2012'

கல்யாணப் பரிசு' படத்தின் மூலம் நட்சத்திர(superstar) அந்தஸ்து பெற்றார், சரோஜாதேவி

தமிழ்ப்பட உலகில் மாபெரும் மாற்றத்துக்கு வழிவகுத்த ஸ்ரீதரின் 'கல்யாணப் பரிசு' படத்தில் அற்புதமாக நடித்து, நட்சத்திர அந்தஸ்து பெற்றார், சரோஜாதேவி.

அதுவரை கதை- வசன ஆசிரியராக மட்டுமே இருந்த ஸ்ரீதர், இப்படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். கேமரா மூலம் கதை சொல்லும் உத்தியைக் கையாண்டு வெற்றி பெற்றார்.பின்னணி பாடகர் ஏ.எம். ராஜா இப்படத்தில்தான் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்.பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் எல்லாப் பாடல்களும் அருமையாக அமைந்தன.கே.ஏ.தங்கவேலு - எம். சரோஜா `காமெடி' மிகப்பிரமாதமாக இருந்தது.

இவற்றுடன், ஸ்ரீதர் படைத்த பாஸ்கர், வசந்தி என்ற கதாபாத்திரங்களுக்கு ஜெமினி கணேசனும், சரோஜாதேவியும் உயிர் கொடுத்தனர்.9-4-1959-ல் வெளிவந்த 'கல்யாணப் பரிசு', தமிழ்ப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.சரோஜாதேவி நடித்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று 'கல்யாணப்பரிசு.' தான் வெறும் அழகுப் பதுமை அல்ல, மிகச்சிறந்த நடிகை என்பதை, இப்படத்தின் மூலம் அவர் நிரூபித்தார்.இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு புத்தகத்தில் சரோஜாதேவி எழுதியிருப்பதாவது:-

கல்யாணப்பரிசு' படத்தில் நானும் ஜெமினியும் நடித்த `வாடிக்கை மறந்ததும் ஏனோ' என்ற பாடல் காட்சியில் நான் சைக்கிள் ஓட்ட வேண்டும். அதுவரை எனக்கு சைக்கிள் ஓட்டிய அனுபவம் இல்லை! இந்தப்பாடல் காட்சிக்காகவே, சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன்.நான் கல்லூரிக்கு புறப்படும்போது, 'அம்மா போயிட்டு வர்றேன்' என்று, மாடியில் இருக்கும் ஜெமினிகணேசனுக்கு கேட்கும் விதத்தில் இரண்டு முறை உரத்த குரலில் கூறிவிட்டுப் புறப்படுவேன் இந்தக் காட்சிக்கு கல்லூரி மாணவ- மாணவிகளிடையே பெரிய வரவேற்பு!கல்யாணப்பரிசு, புதுமையான - அருமையான படம். அதனால் பெரிய வெற்றி பெற்றது.'இவ்வாறு சரோஜாதேவி குறிப்பிட்டுள்ளார்.கல்யாணப்பரிசு மூலம் பெரும் புகழ் பெற்ற சரோஜா தேவியை, ஏராளமான பட அதிபர்கள் ஏக காலத்தில் அணுகி, தங்கள் படத்தில் நடிக்க அழைத்தனர்.எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோருடன் ஒரே சமயத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன.தங்கள் படத்தில் சரோஜாதேவி நடித்தே தீரவேண்டும் என்று விரும்பிய சில பட அதிபர்கள், ஹீரோக்களுக்கு கொடுக்கும் சம்பளத்தைவிட அதிக சம்பளத்தை சரோஜாதேவிக்குக் கொடுக்க முன்வந்தனர்.

ஒரு காலகட்டத்தில், அன்றைய சூப்பர் ஸ்டார்களைவிட அதிக சம்பளம் பெற்ற ஒரே நடிகையாக சரோஜாதேவி விளங்கினார்.இந்த சமயத்தில், ஜெமினியின் 'இரும்புத்திரை' படத்தில் நடிக்க, சரோஜாதேவிக்கு அழைப்பு வந்தது.இதுபற்றி சரோஜாதேவி கூறியிருப்பதாவது:- 'ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன் என் தாயாரை சந்தித்து, தான் எடுக்கப்போகும் இரும்புத்திரை என்ற படத்தில் வைஜயந்திமாலாவுக்கு தங்கையாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்ய வந்து இருப்பதாகக் கூறினார்.அந்தப்படம் தமிழிலும், இந்தியிலும் தயாராக இருந்தது. தமிழில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், இந்தியில் திலீப் குமாரும் ஹீரோ. நடிகைகளில் மாற்றம் இல்லை. வைஜயந்தி மாலா, அவருடைய தாயார் வசுந்தராதேவி, நான் ஆகியோர் இரண்டு மொழிகளிலும் நடிக்க இருப்பதாக வாசன் கூறினார்.

ஜெமினி நிறுவனம் பெரிய நிறுவனம். வாசன் போன்றவர்கள் தங்கள் படத்தில் நடிக்க அழைப்பதே பெரிய விஷயம். என்றாலும் எனக்குக் கொடுக்கப்பட்ட வேடம் (வைஜயந்தி மாலாவின் தங்கை) சிறிதாக இருந்ததால், என்னை நடிக்க வைக்க என் தாயார் விரும்பவில்லை.இப்போதெல்லாம் ஒரு நடிகை ஒரு குறிப்பிட்ட வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டால், உடனே வேறு நடிகையை போட்டுவிடுவார்கள்.

ஆனால், இரும்புத்திரையில் நான்தான் அந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதில் வாசன் உறுதியாக இருந்தார். அந்தப் பாத்திரத்தின் சிறப்பை எடுத்துக் கூறினார். எனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சொன்னார். 'இதன் இந்திப் பதிப்பில் திலீப்குமார் நடிக்கிறார். அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதால், நீங்கள் அகில இந்திய புகழ் பெறுவீர்கள்' என்று எடுத்துக் கூறினார்.இதனால், நான் நடிக்கச் சம்மதித்தேன். அவர் சொன்னபடியே, இரும்புத் திரையின் இந்திப் பதிப்பான 'பைகாம்' படத்தின் மூலம் அகில இந்தியப் புகழ் பெற்றேன்.'இவ்வாறு சரோஜாதேவி கூறியுள்ளார்

இடைவிடாத படப்பிடிப்பு: தாமதமாக வந்தாலும் கோபப்படமாட்டார் எம்.ஜி.ஆர்'- சரோஜாதேவி வெளியிட்ட தகவல்

 dfg'ஒரே சமயத்தில் பல படங்களில் நடிக்க நேரிட்டதால், சில சமயம் படப்பிடிப்புக்கு தாமதமாக வருவேன். அப்போதெல்லாம், கோபப்படாமல் அன்பு காட்டியவர் எம்.ஜி.ஆர்' என்று சரோஜாதேவி கூறியுள்ளார். 'நாடோடி மன்னன்', 'கல்யாணப் பரிசு' ஆகிய படங்களின் மகத்தான வெற்றிக்குப்பின், சரோஜாதேவி ஏராளமான படங்களில் நடிக்க வேண்டி இருந்தது.ஒரு படத்தின் படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்தில் முடியாமல் அதிக நேரம் நீடித்தால், அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல கால தாமதம் ஆகும்.அத்தகைய இக்கட்டான சூழ்நிலை பற்றி, சரோஜாதேவி கூறியிருப்பதாவது:-

விடிவெள்ளி'ஸ்ரீதர் டைரக்ஷனில், 'விடிவெள்ளி' என்ற படத்தில் நடிகர் திலகத்துடன் நடித்து வந்தேன். விடிய விடிய படப்பிடிப்பு நடைபெறும்.இதே சமயத்தில், எம்.ஜி.ஆருடனும் சில படங்களில் நடித்து வந்தேன். அவர் காலை 7 மணிக்கே ஸ்டூடியோவுக்கு வந்து, படப்பிடிப்புக்கு தயாராக இருப்பார்.நான் விடிவெள்ளி படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, தாமதமாக வந்து சேருவேன். எம்.ஜி.ஆர். எதுவும் சொல்லமாட்டார்.

ஒரு நாள் நான் அதிக நேரம் தாமதமாக வந்தேன். எம்.ஜி. ஆரிடம் என்ன சொல்வது என்று நினைத்து அவர் முகத்தில் விழிக்க பயந்து கொண்டு, நேரடியாக செட்டுக்குள் ஓடிவிட்டேன். அங்கு முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு நின்றேன்.எம்.ஜி.ஆர். என்னிடம் வந்து, இன்று பாடல் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. நீ இப்படி முகத்தை உம் என்று வைத்திருந்தால் எப்படி? நீ தாமதமாக வந்ததை நான் அப்போதே மறந்துவிட்டேன்! என்று ஆறுதலாகக் கூறினார்.

சில வேளைகளில் நான் காலதாமதமாக வந்தால், 'நான் வளர்த்து முன்னுக்கு கொண்டு வந்த நடிகையே இப்போது என்னை காக்க வைக்கிறார்' என்று விளையாட்டாக கேலி செய்வார்.மலைப்பாம்புடன் நடித்தபோது...நாடோடி மன்னன் படப்பிடிப்பின்போதும், எம்.ஜி.ஆர். என்னிடம் மிகவும் பரிவுடன் நடந்து கொண்டார்.அப்போது நான் தமிழ்ப்பட உலகுக்குப் புதிய நடிகை.

எம்.ஜி.ஆர். மிகப்பெரிய நடிகர். என்றாலும் அவர் என்னிடம் எந்த வேறுபாடும் காட்டாது நடந்து கொண்டார்.அந்த படத்தில் ஒரு மலைப்பாம்புடன் நான் கட்டிப்புரண்டு நடிக்க வேண்டிய ஒரு காட்சி. அந்த காட்சியில் நடிக்கும்போது, உண்மையிலேயே மலைப்பாம்பு என்னை இறுக்கிவிட்டது. நான் பயத்தில் அலறி அடித்து மயங்கி விழுந்துவிட்டேன்.விழித்துப் பார்த்தபோது எம்.ஜி.ஆர். என் அருகில் இருந்து என்னை கவனித்துக் கொண்டு இருந்தார்.அதன் பிறகு நான் சிறிது பயத்துடன்தான் நடித்தேன். ஒருவித படபடப்பும், நடுக்கமும் இருக்கும். அப்போது எம்.ஜி.ஆர். என்னிடம் வந்து, எனக்கு தைரியம் சொல்வார்.

இந்த பாம்பு சம்பவத்துக்கு பிறகு, பாம்புடன் நடிப்பது என்றாலே எனக்கு பயம்.பல படங்களில் பாம்புடன் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, அப்படி நடிக்க மறுத்துவிட்டேன். என்னை முதன் முதலில் 'திருடாதே' படத்தில் அறிமுகப்படுத்தத்தான் எம்.ஜி.ஆர். திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதன் படப்பிடிப்பு தொடங்குவது தாமதமாகியது. அதற்குள் நான் நடித்த பல படங்கள் வந்துவிட்டன. 'திருடாதே' படப்பிடிப்பின்போது, எனக்கு காலில் காயம் ஏற்பட்டது.படத்தில் எனது அண்ணனிடம் (முஸ்தபா) இருந்து பணத்தை எம்.ஜி.ஆர். திருடி இருப்பார். பணம் போன அதிர்ச்சியில் முஸ்தபா இறந்துவிடுவார்.அவருடைய படம், வீட்டில் மாட்டப்பட்டு இருக்கும். அந்த வீட்டுக்கு எம்.ஜி.ஆர். வரும் சூழ்நிலை ஏற்படும். அங்கு முஸ்தபாவின் படத்தைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைவார்.

அங்கு உள்ள சோபாவில் உட்கார்ந்து, முஸ்தபாவின் போட்டோவை அவர் பார்த்துக்கொண்டு இருப்பார். அப்போது போட்டோ தவறி விழுந்து கண்ணாடி உடைந்துவிடும். அப்போது அங்கு வரும் நான், ஏற்கனவே நகரத்தில் எனக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர். அங்கு உட்கார்ந்து இருப்பதை ஆச்சரியமாகப் பார்ப்பேன். இந்தக் காட்சியில் நடிக்கும்போது, எனது காலில் கண்ணாடி துண்டு குத்திவிட்டது. காலில் ரத்தம் வடியத் தொடங்கி விட்டது.எம்.ஜி.ஆர். மிகப்பெரிய நடிகர்.

அவர் முன்னிலையில் இதுபற்றி கூறினால் தப்பாக நினைத்து விடுவார் என்று நினைத்து நான் வலியைப் பொறுத்துக்கொண்டு தொடர்ந்து நடித்தேன்.காலில் இருந்து ரத்தம் வடிவதை எம்.ஜி.ஆர். பார்த்துவிட்டார். அவர் உடனே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, என்னை அருகில் அழைத்து 'காலில் கண்ணாடி குத்தியும் சொல்லாமல் இருக்கிறாயே நல்ல பெண்ணம்மா நீ!' என்று பாசத்துடன் கண்டித்தார். பின்னர் தனது கைக்குட்டையால், என் காலில் ரத்தம் வழிந்த இடத்தில் ஒரு கட்டு போட்டுவிட்டார்.'இவ்வாறு சரோஜாதேவி கூறியுள்ளார்.

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %