08 07 2016

சரோஜா தேவி: 3. முதல் தர நடிகை!

நடுத்தரக் குடும்பங்களில் சரோ பற்றிய பேச்சு எழுந்தால், எல்லாருக்கும் நினைவுக்கு வருவது ‘கல்யாணப்பரிசு வசந்தி’ கேரக்டர். அனைத்துத் தரப்பினரின் மனங்களிலும் சரோ பதியம் போட்டு அமர, ஸ்ரீதர் மிக முக்கிய காரணம். கல்யாணப் பரிசு அவர் இயக்கிய முதல் படம்.கல்யாணப் பரிசுக்குப் பின்னரே சரோவின் சினிமா வாழ்க்கை முழுமையாகக் களை கட்டியது. பானுமதி-அஞ்சலி, பத்மினி- சாவித்ரி நால்வரையும் பின்னுக்குத் தள்ளி, வெற்றிக் கோட்டையை எளிதில் எட்டிப் பிடிக்க சரோவுக்கு நூறு விழுக்காடு உதவியவள் வசந்தி!குறிப்பாக மூத்தவளுக்காகக் காதலைத் தியாகம் செய்த சரோவை, நோயாளி அக்கா விஜயகுமாரி சந்தேகப்படும் காட்சி.ஜெமினியுடன் இணைத்துப் பேசப்படும் கட்டத்தில் சரோவின் துடிதுடிப்பும், அதிர்ச்சியைக் காட்டும் முக பாவங்களும், சகிக்க முடியாத அவமானத்தை உடன் பிறந்த சகோதரியே உண்டாக்கி விட்டாளே... என்கிற வேதனையும், பரிதவிப்பும் சரோவின் நட்சத்திர வாழ்க்கைக்கு நங்கூரம் பாய்ச்சியது!
‘சரோ முதல் தர நடிகை என்ற ஸ்தானத்தை அனேகமாகப் பிடித்து விட்டார் எனலாம். ரசிகர்களின் உள்ளத்தில் அணையாமல் சுடர் வீசக் கூடிய அமர தீபம்! என்றெல்லாம் வரிக்கு வரி ‘கல்யாணப் பரிசு’ சினிமாவைப் பாராட்டி, ‘குமுதம்’ தன் விமர்சன வரலாற்றில் சரோவுக்கு மிகப் பெரிய முகவரியை அளித்ததது.திரையுலகில் முன்னுக்கு வரத் திறமை மாத்திரம் போதாது. அதிர்ஷ்டமும் அவசியம்.எப்போதும் சரோ யோக லட்சுமி!கல்யாணப்பரிசு படத்தில் வசந்தியாக நம் கண் முன் வந்திருக்க வேண்டியவர் நடிகையர் திலகம். கல்யாணப்பரிசு தொடங்கும் சமயம். சாவித்ரி தாய்மை அடைந்திருப்பது தெரிந்தது. தமிழச்சியான எல். விஜயலட்சுமியை அடுத்து நடிக்க அழைத்தார் ஸ்ரீதர். அவரது தந்தை கேட்ட ஊதியம் ஸ்ரீதர் நிர்ணயிருத்திருந்ததை விடப் பத்து மடங்கு கூடுதல். விளைவு வசந்தி வேடம் சரோ வசம் வந்தது.
 
‘பி.ஆர். பந்தலு படம் ஒன்றில் நடனமாடிய சரோஜாதேவி, முக பாவங்களை நன்கு வெளிப்படுத்தியதால் அவரை ஒப்பந்தம் செய்ய எண்ணினோம். வீனஸ் பிக்சர்ஸ் அலுவலகத்துக்கு தாயார் ருத்ரம்மாவுடன் சரோஜாதேவி வந்தார். ‘வசந்தி கேரக்டரில் நடிப்பதற்கு இந்தப் புதுமுகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!’ என்றார் எனது கோ புரொடியூசர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி. கல்யாணப்பரிசில் இளம் கதாநாயகியாக சரோஜாதேவியையே நடிக்க வைப்பது என்று தீர்மானித்து விட்டோம்.’ -ஸ்ரீதர்.கல்யாணப்பரிசில் சாவித்ரிக்குப் பதிலாக சரோ என்றதும் ஜெமினிக்குக் கொண்டாட்டம். சரோவுக்கு டயலாக் சொல்லிக் கொடுத்துத் தன் வசனங்களை ஜெமினி மறந்து போவதும் அன்றாட ‘அல்வா’ நிகழ்வு. சரோவைத் தேடி ஸ்டுடியோ ஸ்டுடியோவாக அலைவது அவரது வாடிக்கை ஆனது.தமிழே அறியாத சரோவை வசந்தியாக்குவதற்குள் ஸ்ரீதரின் யூனிட் திண்டாடித் தெருவில் நின்றது. அந்த இனிய அவஸ்தையை சித்ராலயா கோபு சுவாரஸ்யமாகக் கூறியுள்ளார்.
 
‘இரண்டு நாள்கள் ஷூட்டிங் முடிந்திருந்தது. ‘எப்படி நம்மப் புதுமுகம்...? ’ என்று கேட்டார் ஸ்ரீதர்.’எல்லாம் சரி. லேங்வேஜ்தான் ப்ராப்ளம். ’ என்றார் ஒளிப்பதிவாளர் வின்சென்ட்.‘கொஞ்சம் கொஞ்சமாக வ(மொ)ழிக்குக் கொண்டு வர வேண்டும். ’ என்றார் உதவி டைரக்டர் பி. மாதவன்.ஒரு ரூபா என்கிற வார்த்தையை ‘வரு ரூபா’ என்பதாக சரோ உச்சரித்தார். ரிகர்சல் பார்த்த ஸ்ரீதர், என்னிடம் சாமியாடினார். ‘என்னடா நீ முன்னாடியே படிச்சுக் காமிச்ச லட்சணம் இதுதானா...? ’
 
என்னை முறைத்தவாறே ஸ்ரீதரும், கடைசி வரையில் சரோவின் ‘கொஞ்சும் கிளி’ தமிழைத் திருத்த முயற்சித்துத் தோற்றார்.ஒத்திகையில் மட்டுமல்லாமல் டேக்கிலும் ‘வரு ரூபா’ என்றே சொல்லி, ஃபிலிமைத் தின்று நாள் முழுவதும் ஏப்பமிட்டார் சரோ.ஸ்ரீதராலும் சரோவின் சந்தனத் தமிழைத் திருத்த முடியவில்லை என்கிற சந்தோஷத்தில் எனக்குத் தனி குஷி பிறந்தது. ப்ளைமூத்தில் தாயார் ருத்ரம்மா, சகோதரிகள் சகிதம் கல்யாணப் பரிசு செட்டுக்கு வரும் சரோ, கம்பெனி தரும் ஹோட்டல் டிபனை ஒரு பிடி பிடிப்பார்.ஸ்டில்ஸ் அருணாச்சலம்- ‘என்ன குழந்தே... தெம்பா இல்ல? ’ருத்ரம்மா - ‘அது தூங்கப் போனது ரொம்ப லேட்டு. டயலாக் படிச்சது. ’ஸ்டில்ஸ் ஆனாரூனா - ‘நீங்களும் வாங்கி அப்பப்பப் படிங்க. தமிழ் பொழைக்கும்! ’ ‘சித்ராலயா’ கோபு.சினிமா உரையாடலை மட்டுமல்ல. கோபுவின் முழுப்பெயர் சடகோபன். அதை ‘ஜடைகோபால்’ என்றே சரோ தவறுதலாக அழைத்தார்.பி. மாதவன், ஸ்ரீதரிடம் அது பற்றி முறையிட்டார்.ஸ்ரீதர் - ‘அது அவனுக்குப் பொருந்தும். அவன் ஒன்பதாம் வகுப்பு வரை குடுமி வைத்திருந்தான். ’
 
சரோ - ‘குடுமின்னா என்னா...? ’
கோபு- ‘ரொம்பப் புத்திசாலி என்று அர்த்தம். ’
தமிழ் தெரியாவிட்டாலும் தன்னை யாராவது கலாய்த்தால் சரோ உஷாராகி விடுவார். அவர்கள் யாராக இருந்தாலும் பதிலடி கொடுக்காமல் விட்டதில்லை.கல்யாணப்பரிசு சென்னை காசினோ தியேட்டரில் 25 வாரங்களைக் கடந்து ஓடியது.ஜெமினி கணேசனின் ‘குட் புக்ஸில்’ சரோ நிரந்தரமாக இடம் பெற்றார்.காதல் மன்னனின் முத்திரைச் சித்திரங்களில் சாவித்ரிக்கு அடுத்தபடியாக, சரோவே ஹீரோயின் என்பதை கல்யாணப் பரிசு உணர்த்தியது.சரோ என்கிற இளமைப் புயல் வாலிபர்களின் ஏகோபித்த ஒரே கனவுக்கன்னியாகத் தமிழகத்தில் நிலை பெற்று விட்டது!
 
‘கல்யாணப்பரிசு படத்தில் நானும் ஜெமினியும் நடித்த ‘வாடிக்கை மறந்ததும் ஏனோ’ என்ற பாடல் காட்சியில் நான் சைக்கிள் ஓட்ட வேண்டும். அதுவரை எனக்கு சைக்கிள் ஓட்டிய அனுபவம் கிடையாது. அந்தப் பாடல் காட்சிக்காகவே சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.நான் கல்லூரிக்குப் புறப்படும் போது ‘அம்மா போயிட்டு வர்றேன். ’ என்று மாடியில் இருக்கும் ஜெமினி கணேசனுக்குக் கேட்கும் விதத்தில் இரண்டு முறை உரத்த குரலில் கூறி விட்டுப் புறப்படுவேன். அந்தக் காட்சிக்குக் கல்லூரி மாணவ மாணவிகளிடையே பெரிய வரவேற்பு கிடைத்தது.கல்யாணப்பரிசு புதுமையான - அருமையான படம். அதனாலேயே பெரிய வெற்றியைப் பெற்றது. ’ -சரோஜாதேவி. சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி என்று ஐந்து நகரங்களில் 100வது நாள் கொண்டாடினார்கள்.மதுரையில் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்த பிறகு, சித்ராலயா கோபு அதைப் பற்றி சரோவின் தாயாரிடம் தெரிவித்து அவரது சம்மதத்தைக் கேட்டார்.ருத்ரம்மா கோபுவுக்குத் தக்கப் பதில் சொல்லாமல் தட்டிக் கழித்து வந்தார். மீண்டும் மீண்டும் கோபு சரோவின் மதுரை வருகை குறித்து நினைவுப் படுத்தத் தவறவில்லை.
 
ஒரு நாள் மிகுந்த கோபத்துடன் ருத்ரம்மா, கோபுவிடம்- ‘உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா...? ’ என்று ஆத்திரப்பட்டார்.அப்போது சரோ நடிக்க கல்யாணப்பரிசு, ‘பெல்லி காணுக’ என்ற பெயரில் தெலுங்கில் தயாராகி வந்தது. தன் உயிர்த் தோழனும், உதவி இயக்குநருமான கோபு அவமானப்படுத்தப்பட்டதை அறிந்ததும், ஸ்ரீதர் ஷூட்டிங்கை ரத்து செய்து செட்டைவிட்டு வெளியேறினார். உச்சக்கட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் தன் பார்ட்னர்களிடம், ‘பெல்லி காணுக படத்தை இனி என்னால் இயக்க முடியாது. வேறு டைரக்டரைப் போட்டுக்கொள்ளுங்கள்... ’ என்றார்.ஆடிப் போய் விட்டனர் சரோவும், அவரது தாயாரும்.அடுத்த கணம் ருத்ரம்மா, ஸ்ரீதரின் வீட்டுக்குச் சென்று நேரடியாக, ‘தெரியாமல் பேசி விட்டேன். தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள்’ என்று வருத்தம் தெரிவித்தார்.
 
சிவாஜி கணேசன் - ஏ.பீம்சிங் கூட்டணியில் பதிபக்தி வெற்றிகரமாக ஓடியது. விளைவு தமிழ் சினிமாவில் ‘பா’ வரிசை சித்திரங்களின் வருகை அதிகரித்தது.ஒரே நேரத்தில் படிக்காத மேதை, பாகப்பிரிவினை இரு படங்களும் ஆரம்பமாயின. கதைப்படி இரண்டிலும் கணேசனுக்கு வீட்டு வேலைக்காரியாக வரும் பெண்ணே ஜோடி.படிக்காத மேதை படத்தில் சவுகார் ஜானகியை ஏற்கனவே கணேசனின் மனைவியாக நடிக்கத் தேர்வு செய்திருந்தார்கள்.
‘பாகப்பிரிவினை’ சரவணா பிலிம்ஸ் சார்பில் ஜி.என். வேலுமணி தயாரித்த முதல் படம். அதற்கான நாயகியை முடிவு செய்ய வேண்டும்.வாஹினியில் ஸ்ரீதருடன் சேர்ந்து கல்யாணப்பரிசு ரஷ் பார்த்தார் சிவாஜி கணேசன். சரோவின் நடிப்பில் பரவசமாகி, அதற்குக் காரணமான டைரக்டரையும் பாராட்டினார்.
 
அது நடந்து நாலாவது நாள். சிவாஜி அனுப்பியதாகச் சொல்லி, வேலுமணி - சரோவைச் சந்தித்து பாகப்பிரிவினை படத்தில் நடிக்க வைத்தார்.தேவர் பிலிம்ஸ் போலவே சரவணா பிலிம்ஸூம் சரோவைக் கொண்டாடியது. பாகப்பிரிவினை தொடங்கி, சரோ அதன் ராசியான நட்சத்திரம் ஆனார். பாகப்பிரிவினையில் சரோவுக்குச் சற்று வயதுக்கு மீறிய, ‘பொன்னி’ என்கிற உருக்கமான வேடம். கை கால்கள் விளங்காத ‘கண்ணையன்’ - சிவாஜிக்கு இணையாக, சரோ சிறப்பாக நடித்துப் புகழ் பெற வேண்டும் என்பது சிவாஜியின் ஆசை. அதற்காக ரொம்பவும் மெனக்கெட்டார்.நடிகர் திலகத்தின் ஆவலை சரோ பூர்த்தி செய்தாரா...?
அபிநய சரஸ்வதியின் சந்தோஷ சாரல் இதோ: ‘ டைரக்டர் பீம்சிங் எப்போதும் காட்சிகளை விளக்கி நடிப்பு சொல்லித் தருவார். அதற்குப் பின்பே காமிரா முன் நிற்பேன்.அன்றைக்குப் பிரசவ வேதனையில் நான் துடி துடிப்பது போல் எடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பெண், எப்படியெல்லாம் துன்பப்படுவாள் என்பதை பீம்சிங் செய்து காட்டினார்.டேக்கின் போது அதை சரி வர செய்ய முடியுமா என்கிறப் பயம் எனக்கு ஏற்பட்டது. சிவாஜி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்.‘என்ன சரோஜா, பிரசவ நடிப்புதானே... வா எங்கூட... ’ என்றார்.அருகில் ஒரு மரம். அதைக் கட்டிக் கொண்டு இடுப்பு வலியில் அலறும் பெண்ணைத் தனது நடிப்பில் தத்ரூபமாக வெளிப்படுத்தினார்.நான் மிரண்டு போனேன். குழந்தை பேறு பற்றித் தனக்குத் தெரிந்த தகவலை மட்டும் வைத்துக் கொண்டு, தாய்மையின் தவிப்பை எடுத்துக் காட்டினாரே அதனால் தான் அவர் நடிகர் திலகம்! அவர் என்ன செய்தாரோ, அதையே பிரதிபலித்தேன். எனக்கு நல்லப் பெயர் கிடைத்தது.பாகப்பிரிவினை வெளிவந்ததும் அநேகத் தாய்மார்கள் குறிப்பாக, அக்காட்சியை மட்டும் சொல்லி என்னைப் புகழ்ந்தார்கள்.எல்லாருக்குமே ஒட்டு மொத்தமாக என் பதில் என்ன தெரியுமா...?அந்த வாழ்த்துகள் முழுக்க முழுக்க சிவாஜி சாரையே சேரும்.’ - சரோஜாதேவி.
 
தன்னை பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் ‘சிங்கப்பூரான்’- எம்.ஆர். ராதாவை, நாட்டுப்புறத்துப் பொன்னி துடைப்பத்தால் அடித்து விரட்ட வேண்டிய விறுவிறுப்பான கட்டம்.ஏற்கனவே ரத்தக்கண்ணீர் சினிமாவில் எம்.ஆர். ராதாவைப் பார்த்து, சரோ மிகவும் பயந்து போய் இருந்தார். அப்படிப்பட்ட முரட்டுக் கலைஞனை, விளக்குமாறால் விளாசித் தள்ளுவதா...!சரோவால் ஆகக் கூடிய காரியமா அது?கதைப்படி பொன்னியின் சீற்றம் நாயகி சரோவுக்குப் புரிந்தது. ஆனால் ராதாவை நிமிர்ந்து நோக்கவே தைரியம் இல்லையே...!ஆவேசமாகித் தன் நிலை மறந்து தாக்குவதும் சாத்தியமா...?ஒத்திகை பார்க்கக் கூடத் துணிச்சல் வரவில்லை சரோவுக்கு.பலத்த ஆரவாரம் கேட்கவே கவனம் திசை திரும்பியது. அருகில் ராதா வந்து கொண்டிருந்தார். அவருக்கே உரிய கரகரப்பான குரலில் முழங்கினார்.‘யாருப்பா இந்த பெங்களூர் பொண்ணு...? அனுபவம் இல்லாத நடிகை. சரியா நடிக்காதுன்னு சிலர் சொன்னாங்களே... நல்லாத்தானே பாடம் கேட்டுக்கிட்டு நிக்குது!’இளம் ஹீரோயின், நடிப்பில் பழுத்த அனுபவம் பெற்ற வில்லனை அடிக்கத் தயங்குவதை, ராதா எளிதில் உணர்ந்து சொன்னார்.சமயோசிதமாக அதற்கு ஒரு தீர்வு கண்டு சரோவின் மனத்தில் நிரந்தர இடம் பிடித்தார்.‘இந்த சீன் எடுக்கறதுக்கு ஒரு ஐடியா கொடுக்கிறேன். நானும் சரோஜாவும் ரூமுக்குள் இருக்கற மாதிரி மொதல்ல படம் பிடிச்சுடுங்க.வெளியே என் அலறல் சத்தம் மட்டும் வீடு பூரா கேட்கும். அடி தாங்காம நான் குய்யோ முறயோன்னு கத்திக்கிட்டு கதவைத் திறந்துகிட்டு ஓடி வருவேன்.நம்ம ஜனங்க மகா புத்திசாலிங்க. உள்ளே என்ன நடந்துருக்கும்னு தன்னால யூகிச்சுப்பாங்க. ’
 
பாகப்பிரிவினை 1959 தீபாவளிக்கு வெளியானது.
சரோவுக்கு மட்டுமல்லாமல் நடிகர் திலகத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் கூட ஒரு சிரஞ்சீவி ரூபத்தை வழங்கியது.ஆனந்த விகடன் பாகப்பிரிவினை சினிமா விமர்சனத்தில்,‘மீனாட்சி அம்மாள் -‘சரோஜாதேவி நல்லா நடிச்சிருக்குதா? ’ஷண்முகம் பிள்ளை - ‘ ஓ! அளவோட அழகா நடிச்சிருக்குது. வயக்காட்டில தலையில் கூடையோட வந்து ஒரு பாட்டுப் பாடுது. மனசுக்கு ரொம்ப குளுமை. ’ என்று சரோவைப் பாராட்டி எழுதியது.மதுரை சிந்தாமணி தியேட்டரில் (217 நாள்கள்) வெள்ளிவிழாவையும் கடந்து 31 வாரங்கள் ஓடியது பாகப்பிரிவினை.பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட வரலாற்று வண்ணச் சித்திரமான வீர பாண்டிய கட்டபொம்மனை மீறி,‘1959ன் மிகச் சிறந்த தமிழ்ப்படம் என்று நடுவண் அரசின் வெள்ளிப் பதக்கம், ’கருப்பு வெள்ளையில் எளிமையாகச் சொல்லப்பட்ட பாகப்பிரிவினைக்குக் கிடைத்தது.சிவாஜி கணேசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கண்ணதாசன், டி.எம். சவுந்தரராஜன் - பி. சுசிலா கூட்டணி வலு பெற்றது.‘தாழையாம் பூ முடிச்சு’ என்கிற ஆறரை நிமிட பட்டுக்கோட்டையாரின் பரவசமூட்டும் காதல் கீதம், கவியரசின் ‘ஏன் பிறந்தாய் மகனே, தங்கத்திலே ஒரு குறை இருந்தால்’ போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் பாகப்பிரிவினையை ஒரு பொக்கிஷமாக இன்னமும் பாதுகாக்கின்றன.
 
‘முதலில் நாடோடி மன்னன் ரிலிஸ் ஆச்சு. 25 வாரம் போச்சு. அடுத்து வந்த கல்யாணப்பரிசும், பாகப்பிரிவினையும் வெள்ளி விழா கொண்டாடுடுச்சு. அதுக்கப்புறம் என்னாச்சுங்கறீங்க? ஒரு நாள்ல 30 படம் புக் ஆச்சு. தினந்தோறும் 3 ஷிப்ட் நடித்திருக்கிறேன். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ரெஸ்ட் எடுத்திருக்கிறேன்.அந்த அளவுக்கு ராப்பகலா நடிச்சேன். இதுல இந்தி, தெலுங்கு, கன்னடப்படங்களும் அடங்கும். ’- சரோஜா தேவி.
 
dinamani.com 07 05 2016

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %