28 11 2016

சரோஜா தேவி: 14. சாந்துப் பொட்டு…!
மலையாள சினிமாவில் மட்டும் சரோஜாதேவி நடித்தது கிடையாது. ‘அந்தக் காலத்தில் மலையாளச் சித்திரங்களில் நடிகைகள் முண்டு எனப்படும் துண்டு மட்டும் அணிந்து நடிப்பார்கள். ஏராளமான அழைப்புகள் எனக்குக் கேரளத்தில் இருந்து வந்தன. நான் அவ்வாறு வெறும் முண்டுடன் நடிக்கச் சம்மதிக்கவில்லை. ’ -சரோஜாதேவி. தனது இயல்பு, சுவை, விருப்பம் ஆகியன பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சரோ கூறியவை- ‘கூந்தலுக்கு என்ன எண்ணை தேய்த்துக் குளிப்பீர்கள்? ’‘விளக்கெண்ணை உபயோகிப்பேன். அது உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சி! ’
 
‘உங்கள் அழகின் ரகசியம் என்ன? ’
‘ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்!’
‘முகத்திற்கு ஏதாவது அழகுக் குறிப்பு?’
‘அய்யோ, ஒன்றும் இல்லையே. நான் பழங்கால ஸ்டைலில் மஞ்சள் பூசித்தான் குளிப்பேன்.’‘கூந்தலைப் பாதுகாக்க, முட்டை போல ஏதாவது? ’‘அய்யயோ, ரொம்ப நாற்றம் எடுக்குமே’ ‘உடலை எப்படி இவ்வளவு கச்சிதமாக வைத்திருக்கிறீர்கள்! ’ ‘சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓஹோன்னு சந்தோஷப்பட்டு நான் உப்ப மாட்டேன். சின்ன துக்கத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் உருகிப்போய் விடுவேன்.சாப்பாட்டு விஷயத்திலிருந்து எல்லாவற்றிலுமே நான் ரொம்ப ‘லைட்’ தான். உடற்பயிற்சி எதுவும் நான் செய்வது கிடையாது. நடுவில் கொஞ்சம் பத்தியமாகச் சாப்பிட்டு வந்தேன். இப்போது அதுவும் இல்லை. ’‘வெளியே போகும் போது மேக் அப் செய்து கொள்வீர்களா? ‘நான் வெளியே போனால்தானே? விழாக்களிலெல்லாம் அதிகம் கலந்து கொள்ள மாட்டேன். சினிமா பார்க்க வேண்டுமென்றால், வீட்டில் போட்டுப் பார்ப்பேன். ’
 
பிடித்தவை - 1. மல்லிகைப்பூ 2. மாம்பழம் 3.உதட்டுச் சாயம் 4.வெண்மை நிறச் சேலைகள் 5. கறுப்புச் சாந்து போட்டு.இளம் வயதிலிருந்து எந்த வண்ணத்தில் புடைவை கட்டிக்கொண்டாலும், நெற்றியில் கறுப்புச் சாந்து வைத்துக் கொள்வது வழக்கம்.6. சேலை வாங்க - ‘நல்லி’யில் புடவை எடுப்பது பிடிக்கும்7. கடவுள் - குழந்தையிலிருந்து என் இஷ்ட தெய்வம் அனுமன்.
 
பிடிக்காதவை - பாகற்காய், ஜலதோஷம், அயல் நாட்டுச் சேலைகள். வெளி நாடுகளுக்குச் சென்று பாரின் புடைவைகளை வாங்கி வருவது.8. பயம் - பாம்புகள் குறிப்பாக மலைப்பாம்பு ‘நாடோடி மன்னன் படத்தில் நான் ஒரு மலைப்பாம்புடன் கட்டிப் புரண்டு நடிக்க வேண்டும். அப்படி நடிக்கையில் நிஜமாகவே மலைப்பாம்பு என்னைச் சுற்றி இறுக்கியது. மூச்சுத் திணறத் தொடங்கியதும் பயத்தில் மயங்கி விழுந்து விட்டேன்.கண் விழித்ததும் எம்.ஜி.ஆர். முகத்தில் சோடா தெளித்து, என்னை எழுப்பி விட்டு எதிரே கவலையோடு நிற்பது புரிந்தது.ஒரு வித படபடப்பும், நடுக்கமும் விடாமல் என்னைத் துரத்த, எம்.ஜி.ஆர். அருகிலிருந்து தைரியம் அளித்ததால் நடிக்க முடிந்தது.அதன் பிறகு நாகங்களுடன் நடிப்பது என்றாலே எனக்குப் பயம். பல படங்களில் பாம்புடன் நடிக்க வாய்ப்பு வந்த போதும் அதைத் தவிர்த்து விட்டேன். ஒரு கோடி கொடுத்தாலும் பாம்போடு நடிக்க மாட்டேன். ’அபிமான நடிகைகள் - எப்போதும் பத்மினி. வைஜெயந்திமாலா, மற்றும் தேவதாஸில் ‘பார்வதியாக’ பரவசப்படுத்திய சாவித்ரி, இந்தி அனார்கலியில் பிரமாதமாக நடித்த பீனாராய்,
 
ஏங்கிய வேடம்-
1. கை கொடுத்த தெய்வம் - சாவித்ரி நடித்த கோகிலா கேரக்டர்,
2.கற்பகம் - கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்னிடம் கால்ஷீட் கேட்ட போது நான் நான்கு மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். என்னால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. என் தோழி கே.ஆர். விஜயா, ‘கற்பகமாக’ அறிமுகமானதில் சந்தோஷப் பட்டேன்.
3. இதயக்கமலம் - கே.ஆர். விஜயாவுக்குப் புகழ் தந்த ‘கமலா- விமலா’,
4. குமுதம் - சவுகார் ஜானகி ஏற்ற பார்வையிழந்த பெண் வேடம்
5. தில் அப்னா அவுர் பிரீத்பாய் - மீனாகுமாரி, 6. சவுண்ட் ஆஃப் மியூசிக் - ஜூலி ஆண்ட்ரூஸ்.
 
நினைவில் நிற்கும் படக்காட்சிகள் -
1. ‘அன்பேவா’ என்று காதலியின் பிரிவில் எம்.ஜி.ஆர். உருக்கமாகப் பாடுவது
2. கர்ணனில் வரும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாட்டு சீன்
3. கல்யாணப் பரிசு சினிமாவில் ‘என்னை மறந்துட்டு என் அக்கா கீதாவை நீங்க கல்யாணம் பண்ணிக்குங்கன்னு ஹீரோ பாஸ்கர் கிட்டே நான் சொல்லும் போது, காதல் மன்னன் ஜெமினி கணேசன், ‘வசந்தி’ன்னு அலறுவது.
 
சிரிப்பு - என் அம்மா தமிழ் பேசும் போது வருவது.
மகிழ்ச்சி - கணவருடன் சினிமாவுக்குப் போவது... பெங்களூருவுக்கு விமானம் ஏறியவுடன் ஏற்படுவது.
மறக்க முடியாதவர்கள் -- ஜவஹர்லால் நேருவும் என் இனிய தமிழ் ரசிகர்களும் !இரண்டாவது உலகப்படவிழாவில் என்னைப் பார்த்ததும் பாரதப் பிரதமர் நேரு, நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்...! என்று வியந்து கூறியது.
 
லட்சியம் - நல்ல நடிகை என்று எப்படிப் பெயர் வாங்கினேனோ, அது போல குடும்ப வாழ்க்கையிலும் நல்ல மனைவி என்ற பெயரைக் கடைசி வரையில் காப்பாற்றுவது.
விரத நாள் - திங்கட்கிழமை.
----------------
சினிமா நடிகைதானே தனது இமேஜூக்காக புகழுக்காக, சரோ ஏதோ கூறியுள்ளார் என வாசகர்கள் யாரேனும் நினைத்தால் அது தவறு. விரதங்களை அனுஷ்டிப்பதில் சரோ எத்தகையவர் என்பதற்கு எம்.ஜி.ஆரே சாட்சி. நான் ஆணையிட்டால் படத்தில் ‘உயர உயரப் போகிறேன் நீயும் வா’ என்கிறப் பாடல் காட்சி. பகல் இரவு பாராமல் நடைபெற்றது. அன்று சனிக்கிழமை. சரோ அனுமனுக்காக உபவாசம் இருந்தார். எம்.ஜி.ஆர். வீட்டிலிருந்து கமகமக்கும் பிரியாணி வந்தது. எம்.ஜி.ஆர்., சரோவை சாப்பிடக் கூப்பிட்டார். சரோ அதைத் தீண்ட மறுத்துத் தன் நிலைமையை எடுத்துச் சொன்னார். நாள் முழுவதும் சரோ உண்ணாத வருத்தம் வள்ளலுக்கு. இரவு பன்னிரெண்டு மணி தாண்டியதும் எம்.ஜி.ஆர். மீண்டும் சரோவை வற்புறுத்தினார்.
 
‘சரோஜா... இப்ப நீ தயங்காம பிரியாணி சாப்பிடலாமே. சனிக்கிழமை முடிஞ்சு போச்சே... ’ என்றார்.
சரோ ஜோதிட சாஸ்திரத்தில் பற்றும் நம்பிக்கையும் உடையவர்.
‘இங்கிலீஷ் காலண்டர் கணக்குப் படி உங்களுக்கு சனிக்கிழமை முடிஞ்சிருக்கலாம். ஆனா நம்ம ஊரு வழக்கத்துல சூரியோதயத்துல இருந்து தான் ஒரு நாள் ஆரம்பமாகும்.அதனால எனக்கு இப்பவும் பிரியாணி வேண்டாம்’ என்றார்.எம்.ஜி.ஆருக்கு அன்றைய தினம் ஏமாற்றமே ஏற்பட்டது. சரோவின் சிநேகிதி ‘திருமதி சுசிலா பத்மநாபன்’. தன் நட்சத்திரத் தோழி குறித்துத் திரை இதழ் ஒன்றில் எழுதியதிலிருந்து சில பகுதிகள் -
 
சினிமாவில் எனக்கு முதலில் நெருக்கமானவர் வைஜெயந்திமாலா. வஞ்சிக்கோட்டை வாலிபன் ஷூட்டிங்கில் என்னை அடிக்கடி பார்த்த ஜெமினி கணேசன், சாவித்ரியை அறிமுகப்படுத்தி வைத்தார். நானும் சாவித்ரியும் சீக்கிரத்தில் நெருங்கிப் பழகினோம். நடிகையர் திலகத்தின் ‘ஆயிரம் ரூபாய்’ ஷூட்டிங் வாஹினி ஸ்டுடியோவில். என் உறவினர்களுடன் சென்றேன். அப்போது சாவித்ரி என்னிடம், ‘பக்கத்தில் இருவர் உள்ளம் படப்பிடிப்பு. சிவாஜி அண்ணனும் -சரோஜாதேவியும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் பார்த்துவிட்டுப் போங்கள்... ’ என்றார். சரோ நடிப்பதை நேரில் பார்க்க எனக்கும் ஆர்வம் அதிகமானது.
 
சிவாஜி சார் எங்களை வரவேற்று சரோஜாதேவியிடம் அழைத்துச் சென்றார். முதல் சந்திப்பில் சரோ என்னிடம் ஏதும் பேசவில்லை. சின்ன சுந்தரப் புன்னகையோடு சரி. சரோ பற்றி ஏற்கனவே பல அவதூறான தகவல்கள் பரவியிருந்தன. கர்வி! எளிதில் யாரையும் அணுக விடாதவர். பிறரை மதிக்கத் தெரியாதவர் என்றெல்லாம் பலவாறாகப் பேசினர். ஏனோ அவை நினைவில் வந்தன. இரண்டாவது சந்திப்பு எதிர்பாராதது. அதே வாஹினியில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் தெலுங்கு சினிமா செட்டுக்கு, என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது சாட்சாத் சரோஜாதேவியே!
 
ஏப்ரல் 1966. ராஜ்கபூர் - வைஜெயந்திமாலா இணைந்து நடித்த ‘சங்கம்’ இந்தி சினிமாவின் சிறப்புக் காட்சி. அங்கு சரோவை மூன்றாவது முறையாகச் சந்தித்தேன். வைஜெயந்தியைப் போல் சரோ தேர்வு செய்யும் புடைவை, நகைகள் எல்லாம் கலா ரசனையில் ஒன்றை ஒன்று மிஞ்சக் கூடியவை. சரோ நடித்த ‘ரகசியம்’ தெலுங்குப் படத்தில் பல கோணங்களில் ‘அம்ரபாலி’ வைஜெயந்தி போல் காட்சி அளித்தார். சரோவுக்குப் பிடித்த வண்ணங்கள் வெள்ளை, நீலம், ரோஸ். சரோவிடமுள்ள வெண்ணிறச் சேலைகளைக் கணக்கெடுக்க முடியாது. வெகு நாள்கள் கழித்தே எனக்கு சரோவைப் புரிந்து கொள்ள முடிந்தது. தாயாரிடம் இவருக்கு இருக்கும் எல்லையற்ற அன்பு ஒருவித மூட நம்பிக்கையாகக் கூட சிலருக்குத் தென்படலாம். அம்மாவுக்கு அடங்கிய பெண், சரோவின் தோழிகளைக் கூட ருத்ரம்மாவே தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறுவார். தாயின் பரிபூரண சம்மதத்துடன் மட்டுமே சரோ மற்றக் கலைஞர்களிடத்தில் நட்பு பாராட்ட முடியும்! அம்மா கிழித்த கோட்டைத் தாண்ட சரோவும் விரும்பியதே கிடையாது. ஒரு பட முதலாளி தன் அன்னையைப் பற்றிச் சற்று மதிப்பு குறைவாகப் பேச முற்பட்ட சமயம், உடனே ‘பத்துப் படங்கள் கிடைத்தாலும் அவை பெற்றத் தாய்க்குச் சமமாக முடியுமா ? ’ என்று கேட்டவர்! எதையும் தைரியத்துடன் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேசுபவர். ‘அர்த்த புஷ்டியாகவும் சிநேக பாவத்துடனும் சரோவுக்குப் பேசத் தெரிந்ததைப் போல வேறு எந்த நடிகைக்கும் பேசத் தெரியாது. என்று என்னால் திட்டமாகக் கூற முடியும்!
 
சரோவின் கேள்வி ஞானம் வியக்கத்தக்கது. இவரது முடிவுகள் நீண்ட காலம் யோசித்து, நிதானமாகச் செய்யப்பட்டவை. பல அரிய கருத்துகளை மனத்தில் தேக்கிச் சந்தர்ப்பம் அறிந்து அதை வெளியிடவும் தயங்குவது கிடையாது. சரோவின் நடிப்பு சூடு பிடிக்கையில் ஒரு தீர்க்கதரிசி போல், ‘என்னுடைய பெயரை சரோஜாதேவி எடுப்பார்... ’ என்று கூறினார் நாட்டியப் பேரோளி பத்மினி. அவர் என்னிடம் இவ்வாறு சொன்னது சீக்கிரத்திலேயே பலித்தது.
இவ்வளவு எளிதில் ஒரு வருடப் பழக்கத்தில் (1966- -1967) இருபது ஆண்டுகளின் சிநேக பந்தம் எங்களுக்குள் ஏற்பட்டு விட்டது. ’ ‘சரோ- ருத்ரம்மா தொப்புள் கொடி பந்தம் குறித்து சிநேகிதி சுசிலா பத்மநாபன் எழுதிய ஒவ்வொரு சொல்லும் அக்மார்க் நிஜம்’! அதை சரோவே ஒரு பேட்டியில் சுட்டிக்காட்டி உள்ளார். ‘என் தாயார் மிகவும் கண்டிப்பானவர். திருமணத்துக்கு முன், அவர் அனுமதி இன்றி நான் எங்கும் போக முடியாது. ‘ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லாத போது, தோழி சுசிலாவுடன் சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்குப் படம் பார்க்கப் போய் விட்டேன். ஒரு நடிகை தியேட்டருக்குப் போவது என்பது மிகவும் தொந்தரவானது. ரசிகர்கள் பார்த்தால் அது மிகுந்த தொல்லையில் கொண்டு விட்டுவிடும். அம்மா வீடு திரும்பியதும், நான் சுசிலாவுடன் சினிமாவுக்குப் போயிருப்பதை தெரிந்து கொண்டார். ஆத்திரம் அடைந்த அவர், நேராக தியேட்டருக்கு வந்தார். மேனஜரிடம் கூறி, ‘சுசிலா உடனே மேனஜர் அறைக்கு வரவும்’ என்று ஸ்லைடு போட உத்தரவிட்டார். அதைப் பார்த்ததும் நாங்கள் அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தோம். அம்மா சுசிலாவிடம் ஏதும் பேசாது என்னை தர தரவென்று இழுத்துச் சென்று விட்டார்.எனக்கு ரொம்பவும் அவமானமாகப் போயிற்று! உயிர்த் தோழியிடம் சொல்லி விடை பெற்றுக் கொள்ள முடியாத வருத்தம் என்னை வாட்டியது. அடக்க முடியாத கோபத்தில் என் தாயுடன் சண்டை போட்டேன்.
ஆனால் சுசிலா, நடந்ததை மறந்து எப்போதும் போல் சகஜமாகப் பழகினார். இன்று வரை எங்கள் நட்பு தொடர்கிறது. ’ - சரோஜாதேவி. 
 
கற்பனைகளை விடவும் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும் களம் மானுட வாழ்வு. துடிக்கத் துடிக்க புரட்சி நடிகர் சுடப்பட்டத் துயர நிகழ்வின் எதிரொலி..! சரோவின் நட்சத்திர டைரியில் அன்று ஒரு திடுக்கிடும் தினம். காவல் துறை விசாரணை வளையத்தில் கன்னடத்துப் பைங்கிளி சரோவும் சிக்கிக் கொண்டார். ‘எம்.ஜி.ஆர். சுடப்பட்ட போது ஐதராபாத்ல நாகேஸ்வர ராவோட ‘ரகஸ்யம்’ படத்துல நடிச்சிக்கிட்டிருந்தேன். திரும்பி மெட்ராஸ் வந்தப்போ ஏர்போர்ட்லருந்து போலீஸ் என்னை ‘ஃபாலோ’ பண்ணுனாங்க. டி.ஐ. ஜி. பரமகுரு எங்க வீட்டுக்கு வந்து என்னை சந்திச்சிக் கேட்டாரு. ‘எம்.ஜி.ஆர். நடிச்ச எல்லாப் படத்துலயும் நீங்கதான் அவர் பக்கத்துலயே எப்பவும் இருந்திருக்கீங்க. அதனால உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும். பெற்றால்தான் பிள்ளையா படத்துல...  ‘அவன் என் எதிரி, அதனால்தான் எதிர்ல வெச்சிருக்கேன்’ னு எம்.ஆர். ராதா உங்ககிட்டே ஒரு சீன்ல சொல்றாரே, அப்படின்னா எம்.ஜி.ஆர்., எம்.ஆர். ராதாவுக்கு எதிரியா இருந்தாரா? அதைப் பத்தி உங்களுக்கு ஏதாவது தெரியுமா சொல்லுங்கன்னு கேட்டாரு.
 
அதுக்கு நான் சொன்னேன்: ‘அது கதைக்காக எழுதின வசனம். அதை ராதா அண்ணன் பேசுனாரு. ஒரு படத்துல ‘பாவி’ ‘துரோகி’ன்னு வசனம் பேசுனா, அவங்க உண்மையிலேயே அப்படித்தான்னு அர்த்தமா?ன்னு பதிலுக்குக் கேட்டேன். பரமகுரு அதோட என்னை விடலே, மேற்கொண்டு என்னென்னமோ கேட்டாரு. எனக்கு இந்த போலீஸ், கோர்ட்டுன்னாலே எப்பவும் பயம். கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டு மாடிக்குப் போய் என் வக்கீல் வி.பி. ராமனுக்கு போன் பண்ணுனேன். எம்.ஜி.ஆருக்கும் அவர் வக்கீல். டி.ஜி. பி. பரமகுரு கேட்டதைப் பத்தி வி.பி. ராமன் கிட்டே சொன்னேன். ‘அவங்க அப்படித்தான் கேப்பாங்க, நீங்க ஒண்ணும் பயப்பட வேணாம். கோர்ட்டு விசாரணைன்னு வந்தா அப்போ நான் பார்த்துக்கிறேன்... என்றார் ராமன் சார். அதுக்குப் பிறகே நிம்மதி அடைஞ்சேன். ’ - சரோஜாதேவி.
dinamani.com 29 07 2016
 

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %