07 11 2016

சரோஜா தேவி: 12. ஆசானும்... அண்ணாச்சியும்.-

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி சரோ-, ‘எம்.ஜி.ஆர். என் உடன் பிறவா சகோதரர் என்றால், என் கலை உலக ஆசான் சிவாஜி ஆவார். சிவாஜிக்கு மூச்சே நடிப்புதான். நடிகர் திலகத்தின் இடத்தை சினிமாவில் யாராலும் நிரப்ப இயலாது. அவரே இன்னொரு ஜென்மம் எடுத்து வந்தால் மட்டுமே அந்த இடத்தை நிரப்ப முடியும்! நடிப்பைத் தவிர என் குருவுக்கு வேறு உலகம் தெரியாது. நடிக்க வந்து விட்டால் செட்டுக்குள்ளயே இருப்பார். டைரக்டர் பிரேக் சொன்ன பிறகுதான் வெளியே போவார். பெங்களூருவில் பள்ளியில் படித்து வந்த காலம். ‘மனோகரா’ நாடகம் நடைபெற்றது. தோழிகள் சிலர் ‘சிவாஜி மனோகரனாக நடிக்கிறார். நேருக்கு நேர் அவரது அற்புத நடிப்பைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நீயும் அவசியம் வரவேண்டும்’ என்று என்னையும் வற்புறுத்தி அழைத்தார்கள்.
 
சிவாஜி கணேசன் நடிப்பில் மகத்தானப் புகழ் பெற்றவர். மிகப் பெரிய இந்தி நட்சத்திரங்கள் கூட அவரை வியந்து பாராட்டுகிறார்கள். சிவாஜி நம் ஊரில் நடிக்கிறார் என்றால் மக்கள் வழக்கத்தை விட அதிகமாகவே கூடுவார்கள். அவரை நேரில் காணும் ஆசை எல்லாருக்கும் சகஜமாக இருக்கும். எனக்கோ கூட்டம் என்றாலே பிடிக்காது. அதனால் என் சிநேகிதிகளிடம்,
‘நீங்கள் போங்கள். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிட்டட்டும்’ என்றேன். நான் அப்போது விளையாட்டாகச் சொன்னது, பிற்காலத்தில் பலிக்கும் என்று நான் நிச்சயம் எதிர்பார்த்தவள் கிடையாது.
 
தங்கமலை ரகசியம் படத்தில் நடிகர் திலகத்துடன் ஒரு சின்ன வசனம் மட்டுமே எனக்கு இருந்தது. சும்மா இரண்டே வார்த்தைகள். ‘வாழ்க்கைக்கு எது மிகவும் முக்கியம், இளமையா... அழகா...? ’ என்று நான், சிவாஜி அண்ணனைப் பார்த்துக் கேட்க வேண்டும்.மிகப் பெரிய கலைஞரான அவர் முன்பு அதைப் பேச முடியாமல் கூச்சத்தில் தவித்தேன். கையும் காலும் தந்தி அடித்தன. இரண்டு சொற்கள் என் வாயிலிருந்து வெளியே வரவில்லை.‘தைரியமாகப் பேசும்மா’ என்று சிவாஜி கணேசன் ஊக்கம் தந்த பிறகு, சமாளித்துக் கொண்டு பேசினேன். சபாஷ் மீனாவில் நாங்கள் இருவரும் நடித்திருந்தாலும் அவருடன் பழகச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. பாகப் பிரிவினைக்குப் பிறகே நடிகர் திலகத்தின் அன்பையும் ஆசியையும் ஆதரவையும் பெற்றேன்
 
விடிவெள்ளி படத்துக்குக் கால்ஷீட் கொடுப்பதில் எனக்குப் பட அதிபருடன் சிறு சிறு பிரச்சனைகள் எழுந்தன. சிவாஜியின் மிக நெருங்கிய நண்பர் வேட்டைக்காரன்புதூர் முத்து மாணிக்கம். அவரோட தயாரிப்பு விடிவெள்ளி. அண்ணன் சிவாஜியோ எதிலும் பட்டுக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கியே இருந்தார்.‘சொந்த விருப்பு வெறுப்புகளை மனத்தில் வைத்துக் கொண்டு, அதைப் படத் தொழிலில் உடன் நடிப்பவர்களிடம் சிவாஜி அண்ணன் எப்போதும் காட்டியது கிடையாது. மனத்தில் எதையும் துளி கூட வஞ்சம் வைக்காத உயர்ந்த மனிதர்! அவரை அரசியல் மேடைகளில் தூற்றியவர்களும், அண்ணனைப் பத்தி குறை கூறிப் பேசியவர்களும் சிவாஜியோட படங்களில் நடிச்சிருக்காங்க. அது பொது ஜனங்களுக்கும் தெரிஞ்சிருக்கலாம்.நானாக மனம் நொந்து போய் யாரைப் பற்றியாவது அண்ணனிடம் புகார் செய்தால்,‘போனால் போகட்டும் போ’ சினிமா உலகமே அப்படித்தான் என்று தொடங்கி, சிரித்துச் சிரித்துப் பேசி அனுப்பி விடுவார். யாருடனும் பகையை வளர்க்க விரும்ப மாட்டார்.
பாகப் பிரிவினை தொடங்கி நான் அவருடன் நடித்த ஒவ்வொரு படமும் எனக்கு நடிப்புக் கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பாகும்.
 
என்னிடம் ஏதாவது திறமை இருந்தால், சினிமாவில் நான் நடப்பது முதல் நடிப்பது வரை எனக்குச் சொல்லிக் கொடுத்த வழி காட்டி சிவாஜி அண்ணன்! சிவாஜியின் கூட்டுக் குடும்பம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எந்த வீட்டிலும் இல்லாத அம்சம்! ஞாயிற்றுக்கிழமையானால் அவங்க வீட்டு டைனிங் டேபிளில் அறுபது பேர் அமர்ந்திருப்பார்கள். அத்தனை பேர்களுக்கும் மருமகள்களே பரிமாறுவார்கள். ரொம்ப காலத்துக்குப் பிறகு ‘ஒன்ஸ் மோர்’ படத்துல நானும் சிவாஜியும் நடித்தோம். ‘அண்ணனோட மறுபடியும் நடிக்கிறோம்’னதும் சந்தோஷமா இருந்தது. பழைய நினைவுகள் மொத்தமா மனசுல வந்து அலை மோதுது. காலை ஏழு மணிக்குக் கால்ஷீட் கொடுத்திருந்தார்னா ஆறே முக்கால் மணிக்கெல்லாம் மேக் அப்போட செட்ல உட்காந்திருப்பார். நாங்க பெண்கள் மேக் அப் போட்டு முடிய எப்பவுமே கால தாமதம் ஆகும். அதுல கொஞ்சம் கூடுதலா லேட்டாயிடுச்சுனா முறைக்கிற மாதிரி ஒரு பார்வை பார்ப்பார். அதனாலயே சிவாஜி செட்டுக்கு வந்திட்டாருன்னா, நாங்க மேக் அப்காரரை சீக்கிரம் சீக்கிரம்னு அவசரப்படுத்தி இருக்கோம்.
 
சிவாஜி கிட்டே என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை மனம் விட்டுப் பேசி இருக்கிறேன். பல சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லி இருக்கிறார்.அவர் மட்டும் அல்ல, அவரோட மனைவி கமலாம்மா, பொண்ணுங்க உட்பட ஒட்டு மொத்தக் குடும்பமும் என் மேல் தனிப்பாசம் வெச்சிருந்தாங்க. அண்ணன் காலத்துக்குப் பிறகும் அது மாறாம தொடருது. சில நேரம் நாங்க லேடீஸ் எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருப்போம். அந்த சமயம் சிவாஜி வந்துட்டாருண்ணா , ‘என்ன மாதர் மன்றமா எல்லாரும் ஒண்ணு சேந்துட்டீங்களா..., அப்ப நான் போயிடறேன்னு...’ கிண்டல் பண்ணுவார்.என் வாழ்க்கை திறந்த புத்தகம். அதில் ரகசியம் எதுவும் கிடையாது. 1986ல் என் கணவர் என்னைத் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டார். என்னை விதவை கோலத்தில் காண சிவாஜி விரும்பவில்லை.
 
‘நான் சரோஜாவைப் பார்க்க மாட்டேன். அவள் நெற்றியில் குங்குமம் இல்லை. ’ என்று சில ஆண்டுகள் என்னைப் பார்க்காமலே தவிர்த்தார். நானாக மனத்தைத் தேற்றிக் கொண்டு அவரைச் சென்று பார்த்தேன். கடைசிக் காலம் வரையில் அண்ணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். ‘ஒன்ஸ் மோர்’ ஷூட்டிங். முதல் நாள் லன்ச் பிரேக்ல சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நம்ம வீட்லருந்து சாப்பாடு வந்துருக்கு. நீயும் இப்ப என் கூட சாப்பிடறே...’ என்றார்.
‘இல்லண்ணே... எனக்குத் தனியா மீல்ஸ் வரும்’ என்றேன்.நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. சிவாஜி வீட்டுச் சாப்பாட்டை, அவருடன் எத்தனை நாள் சாப்பிட்டிருக்கிறேன். இன்னிக்குப் புதுசா என்ன வந்ததுச்சு..?ஒரு வேளை... கால இடைவெளி, என்னை இந்த வார்த்தையைப் பேச வைத்து விட்டதோ..! அப்போது சிவாஜி என்னிடம், ‘சரோஜா... நமக்கு வேண்டியவங்க எல்லாரும் ஒவ்வொருத்தரா போயிட்டே இருக்காங்க பார்த்தியா... பாலையாண்ணன், சகஸ்ரநாமம், ராதா அண்ணன்லருந்து இப்ப எம்.ஜி.ஆர். அண்ணன் வரை போயாச்சு...நம்மள்ள கூட இப்ப நான், பப்பி, நீன்னு கொஞ்சம் பேர்தான் இருக்கோம். நம்மள்ள யார் முந்தறோம்னு நமக்குத் தெரியாது. இருந்தாலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா அனுசரணையா இருப்போம்’ன்னாரு.
 
சிவாஜி அப்படி சோகம் பொங்க வருத்தமாச் சொன்னதும் எனக்குக் கண் கலங்கிற்று. அவராலயும் மேற்கொண்டு ஏதும் பேச முடியாம நாக்கு தழுதழுத்துச்சு. எனக்காக சிவாஜியோட சாப்பாடு கேரியர் பிரிக்காமயே இருந்தது. கொஞ்சம் கழிச்சு அண்ணன் மறுபடியும் என்னைத் தன்னோட சாப்பிட வற்புறுத்தினார். சரோஜா உனக்கு லன்ச் எப்ப வரும்? ’ ‘உங்களோடயே சாப்பிடறேன் அண்ணே. ’என்று சொல்லி அவருடனேயே மதிய உணவைப் பகிர்ந்து கொள்ள உட்கார்ந்தேன். இழப்பு என்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கொண்டாலும், தனது நண்பர்களின் இழப்பு அவரை எத்தனை தூரம் பாதித்து இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.அதற்குப் பிறகு ஒன்ஸ் மோர் ஷூட்டிங்கில் சிவாஜி வீட்டுச் சாப்பாடுதான் தினமும் எனக்கு!
 
3. ஜெமினி கணேசன்!
‘காதல் மன்னன்’ படித்தவர் என்கிறதை விடப் பண்பு மிக்கவர்’- இதுவே என் எண்ணம். சில நேரங்களில் நானே அவரது நடிப்பைக் குறை கூறி இருக்கிறேன். ‘இந்தக் காட்சியில் இப்படி நடித்தால் சிறப்பாக இருக்கும்’ என்று ஆலோசனைகளை அள்ளி விடுவேன். ‘இவள் என்ன எனக்குச் சொல்லித் தருவது...! ’ என்று எண்ணாமல் என் யோசனையை உடனடியாக ஏற்றுக் கொள்வார். ‘சினிமாவில் சிருங்காரம்’ சொட்டும் நடிப்பை எனக்குக் கற்றுத் தந்தவர் சாட்சாத் ஜெமினி கணேசன். காதல் காட்சிகளில் என் நடிப்பு இயற்கையாக இருக்க ஜெமினி அண்ணாச்சியே காரணம்! ஜெமினி கணேசன் ஓர் அழகான கதாநாயகன். சிலர் மாதிரி உம்மென்று இருக்க மாட்டார். ஷூட்டிங்கில் ஏதாவது தமாஷாகப் பேசி கலகலப்பை உண்டு பண்ணுவார். ‘நீங்க மட்டும் பொம்பளையாப் பொறந்திருந்தீங்கன்னா, இந்த உலகத்தையே உங்க வனப்பால், வசீகரத்தால், சாமர்த்தியத்தால் அழிச்சி இருப்பீங்க...’ என்று நான் குறும்பாகச் சொல்வது உண்டு.
 
‘சினிமாவில் நான் தான் கெட்டிக்காரன் என்பார்கள். அந்த விஷயத்தில் நீ என்னையும் மிஞ்சியவள்’ என்று வாய்க்கு வாய் கேலியாகப் பதில் சொல்வார். ஒரே இடத்தில் நிற்கவோ உட்காரவோ மாட்டார். கொஞ்சம் டைம் கிடைத்தாலும் போதும். பக்கத்து ப்ளோருக்குப் போய் விடுவார். ஒரு பியட் கார் வைத்திருந்தார். அதை எடுத்துக்கொண்டு ஏவி.எம்மிலிருந்து வாஹினிக்குப் பறப்பார்.
 
அவருக்கும் எனக்கும் அண்ணன் தங்கை உறவு இருந்தது. ஜெமினியை நான் ‘அண்ணாச்சி’ என்று கூப்பிடுவேன். ‘ஏதாவது பிரச்சனைன்னா எங்கிட்டச் சொல்லுமா... ’ என்பார். ‘கப்பலோட்டிய தமிழன்’ சினிமா சம்பந்தமாக எனக்கும் பட முதலாளிக்கும் அபிப்ராய பேதம் வந்தது. எங்கள் இருவரையும் தன்னால் முடிந்த மட்டும் சமாதானப்படுத்தியவர் ஜெமினி அண்ணாச்சி. பலருக்கும் இப்படி உதவி இருக்கிறார். எங்களுக்கு சேர்ந்து ஷூட்டிங் இல்லாம பல நாள்கள் கடந்திருக்கும். அப்படியொரு சூழ்நிலையில திடீர்னு என்னைப் பார்க்கணும்னு அவருக்குத் தோணும். நான் எந்த ஸ்டுடியோவுல இருக்கேன்னு தெரிஞ்சிக்கிட்டு, ‘தங்கச்சி’ன்னு கூப்பிட்டுக்கிட்டே உள்ளே நுழைவார். திரை உலகின் மிகச் சிறந்த அப்பா ஜெமினி கணேசன். தனது எழிலானத் தோற்றத்தால், சிறந்த நடிப்பால், பண்பான நடத்தையால், அன்போடு பழகும் தன்மையால் பலரது மனத்திலும் இடம் பிடித்தவர்.
 
கல்யாணப்பரிசு நானும் அவரும் சேர்ந்து நடித்து வெள்ளி விழா கொண்டாடியது. அதே போல் எங்கள் இருவர் நடிப்பிலும் கைராசி வெற்றிகரமாக ஓடியது. அதற்குப் பிறகு தனக்கு நடிக்கப் போதுமான வாய்ப்பு இல்லாவிட்டாலும், நடிப்பில் எனக்கு அதிக முக்கியத்துவம் உள்ள ஏராளமான படங்களில் ஜெமினி அண்ணாச்சி என்னுடன் பெருந்தண்மையுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்! அவற்றில் சில படங்கள் என்னாலும் ரசிகர்களாலும் என்றும் மறக்க முடியாதவை. ‘தாமரை நெஞ்ச’த்தில் ஜெமினியுடன் உள்ள காதலை வெளிக்காட்ட மாட்டேன். அதில் கடகடவென்று தண்ணீரைக் குடிப்பேன். அந்த ஈரம் இன்னும் என் நெஞ்சில் கசிகிறது.
பணமா பாசமா, குல விளக்கு இரண்டும் கே.எஸ். கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் வெற்றிகரமாக ஓடியது.
நான் ஏற்ற வேடங்களில் எனக்கு மிகவும் பிடித்தது... குலவிளக்கு படத்தில் கிடைத்த
‘கண்ணம்மா டீச்சர்’ கதாபாத்திரம்! குடும்பத்துக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் மிக அருமையான குணச்சித்திரம். அதில் எஸ்.எஸ்.ஆர். - ஜெமினி இருவரும் என்னை மணக்க நினைப்பார்கள். மகளுக்குக் கல்யாணம் ஆகிவிட்டால், வீட்டுக்கு வருமானம் போய்விடுமே என்று, அப்படி ஏதும் நடக்கவிடாமல் அப்பா எஸ்.வி. ரங்காராவ் இருவரையும் தடுத்து விடுவார். கடைசியில் நான் டி.பி. நோயால் இறந்து போவேன். நடிப்பில் கொடி கட்டிப் பறந்தவர்கள் பலர் திரை உலகில் இருக்கிறார்கள். தன் ஒவ்வொரு குழந்தையும் சொந்தக் காலில் சுயமாக நிற்க வேண்டும். அதற்கு படிப்பில் வெற்றி பெற வேண்டும் என்று முழு மூச்சுடன் பாடுபட்டவர் ஜெமினி கணேசன்.
 
அவர், தான் கைப்பிடித்த பெண்களுக்கு துரோகம் செய்யாமல் - நட்டாற்றில் விடாமல் ஒவ்வொரு குழந்தையையும் ஆளாக்கி இருக்கிறார். அந்த வகையில் அவர் ஒரு நல்ல தந்தை. அவருடைய பிள்ளைகள் அத்தனை பேரையும் நல்ல நிலையில் வைத்திருக்கிறார். ஷாட் நேரத்துல பல சமயங்கள்ல எனக்கு டயலாக் சொல்லித் தருவார். டேக்கின் போது நான் கரெக்டா பேசிடுவேன். அண்ணாச்சி அவரோட வசனத்தை மறந்துடுவார். நடிப்பதற்காக வந்த சமயத்தில் தான் சந்தித்தோம் என்றாலும், எனக்கு மணமான பின்பு என் கணவரோடும் மனம் விட்டுப் பேசிப் பழகிய மிகச் சிறந்த குடும்ப நண்பர். மணிபாலில்’ ஜெமினி அண்ணாச்சியின் பெண்கள் படித்து வந்தார்கள். பெங்களூருக்கு வரும் போது எங்கள் குடும்பத்தைச் சந்திக்க வருவார். சந்தோஷத்தில் பங்கு கொள்வதை விடச் சங்கடமான சூழலில் தோள் கொடுப்பதுவே தோழமை. அதைப் புரிந்து வைத்திருந்தவர் அண்ணாச்சி.
 
‘ஆடிப்பெருக்கு’ சங்கீதமும் சந்தோஷமும் இழையோடிய அருமையான படம். அதில் நடிக்கிறப்ப நான் ரொம்பச் சின்னப் பொண்ணு. படத்தில் என் புருஷனா நடிக்கிறவர் இறந்து போக, என் கை வளையல்களை உடைக்கிற சோகமான காட்சி.அந்த சீனில் நடிக்கும் போது நான், காமிராவுக்கு முகம் காட்டிய நேரம் போக, மற்ற சமயங்களில் சதா சிரித்துக் கொண்டே இருந்தேன். இடையில் பல ஆண்டுகள்... பெங்களூரில் என் கணவர் இறந்து போகிறார்...எனக்கு ஆறுதல் சொல்லத் துடிதுடித்துப் போய் முதலில் ஓடோடி வந்தவர் ஜெமினி. என்னைப் பார்த்ததும், ‘சரோஜா... அன்னிக்கு ஆடிப்பெருக்கு படத்துல, கணவனை இழந்த சீனில் நடிக்கிறப்ப சிரிச்சிக்கிட்டே இருந்தியே... இப்போ நிஜமாகவே உன் புருஷன் போயிட்டாரேம்மா... ’ ன்னு சொல்லி ஓன்னு அழுதார். பழைய சினிமா சம்பவத்தை இன்றைய இழப்போடு ஒப்பிட்டுப் பேசிய போது, என்னுடைய கணவரது இழப்பு அவரை எத்தனை தூரம் பாதித்திருக்க வேண்டும், என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அண்ணாச்சியின் அத்தகைய அரிய பண்பால் ஜெமினியின் குடும்பத்திலும் என்னை ஒருத்தியாகவே உணர்ந்தேன். ’ - சரோஜாதேவி.
dinamani 15 07 2016

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %