சரோஜா தேவி: 9. கபாலி கோயில்...!
 
சரோ நடித்து வெளிவர  ‘அரச கட்டளை’ மட்டுமே பாக்கி. 1964ல் மூச்சு விட முடியாமல் துரத்திய வேலைப் பளு  காணாமல் போய் விட்டது. புதிய பறவைக்குப் பின் சிவாஜியிடமிருந்து எந்த சிக்னலும் இல்லை. அமெரிக்கா போன பத்மினியும் மீண்டும் நடிக்க வந்து, சிவாஜியின் தயவுக்காகக் காத்திருந்த நேரம். ஏவிஎம். ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன்  எனப் புது ஹீரோக்களின் போட்டியால், ‘சிவாஜிக்கு மார்க்கெட் போயிடுச்சி...!’ என்று அவரது நாயகிகளே கிசுகிசுத்தார்கள்.ஜெமினி பகிரங்கமாகவே தனக்குப் புதுப் படங்கள் கிடையாது என ஒப்புக்கொண்டு கொடைக்கானலில் குடியேறி விட்டார்.
 
1965ல்  தமிழ் சினிமா வரலாறு காணாத வகையில் காமிரா முன்பு இளமை வழியும் புத்தம் புது யுவதிகள். நிர்மலா என்ற பெயரிலேயே மூன்று பேர் உதயமாகி இருந்தனர்.ஜெயலலிதாவிடம் முழுதாக கோலிவுட் கை மாறியது. ‘சரோவின் பட அதிபர்கள் ஜி.என். வேலுமணி, தேவர், டி.ஆர். ராமண்ணா மூவரும் சொல்லி வைத்த மாதிரி ‘ஜெ’வை ஒப்பந்தம் செய்தார்கள்.சினிமா நடிப்பு முற்றிலும் கை விட்டு விட்ட நிலையில் சரோவின்  எதிர்காலம் குறித்து ருத்ரம்மாவுக்குக் கவலை தோன்றியது.பருவ வயதைக் கடந்த  பெண்ணுக்குத் திருமணம் செய்ய வேண்டாமா...?
 
சரோவின் தோழி சுசிலா பத்மநாபன் உருப்படியான யோசனையைத் தெரிவித்தார்.தினமும் ஈரத் துணியுடன் ஆஞ்சநேயருக்கு விரதம் இருந்து, அனுமனை வேண்டி வந்தால் நல்ல மாப்பிள்ளை அமையும்.’சரோ தன் சிநேகிதியின் சொற்படியே வாயுபுத்திரனின் தீவிர பக்தையாக மாறினார். நாள் தவறாமல் உபவாசம் இருந்து உத்தம புருஷனுக்காகக் காத்திருந்தார்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம். ‘பராபவ’ ஆண்டின் ஆடி வெள்ளிக்கிழமை. கற்பகாம்பாள் சன்னதியில் கட்டுக்கடங்காத கூட்டம்.சுசிலா பத்மநாபனுக்குத் திகைப்பாக இருந்தது. இந்த ஜன சமுத்திரத்தில் சரோ எப்படி உள்ளே நுழைந்து சுவாமி தரிசனம் செய்யப் போகிறார்...!
 
சரோவின் கலை உலக வாழ்க்கை கம்பீரமாக நிலைபெற்று விட்டது. அடுத்தது இல்லறம்.‘பெண்ணாகப் பிறந்த எவருக்கும் ஒழுக்கம் நிறைந்த நல்ல மணவாளன் அமைவது மிக மிக முக்கியம்!’அம்மாவைத் தவிர வேறு உலகம் அறியாதவர் சரோ. சிறந்த கணவர் வாய்க்க அம்பாளிடம் வரம் வேண்ட வந்திருக்கிறார்.நெரிசலில் சிக்காமல் நிம்மதியாக நின்று,  ஒரு கணம் அமைதியாக சாமி கும்பிட முடியுமா அபிநய சரஸ்வதி சரோஜா தேவியால்...?தங்களின் ‘கனவுக் கன்னி’, கோயிலுக்கு வந்திருப்பது தெரிந்தால் பக்தர்கள், ஷண நொடியில் ரசிகர்களாக மாறிவிடுவார்களே... தள்ளு முள்ளு நேருமே.சரோ எப்படிச் சமாளிக்கப் போகிறார்...?சுசிலாவின் பயத்தைப் புறந்தள்ளி விட்டு வெகு இயல்பாக சரோ அம்பாளை நோக்கி முன்னேறினார். சரோவின் துணிச்சல் அசாத்தியமாகப் பட்டது.சற்றும் சுற்றுச் சூழலைக் கண்டு மனம் தளராமல், வந்திருக்கும் நோக்கத்திலிருந்து அடி பிறழாமல், பக்திப் பிரவாகத்தில்  கற்பகாம்பிகையைக் கண் குளிர தரிசித்து, ஆனந்தப் பரவசமடைந்து விழிகளில் நீர் கசிய,‘என் பிரார்த்தனையைப் பலிக்கச் செய் தாயே...!  இதுவரையில் என் வாழ்வில் துன்பமில்லாமல் காத்து வந்தது போல்,  இனியும் நீ தான் அடைக்கலம் தந்து அருள வேண்டும் அம்மா! உன்னை விட்டால் வேறு யாரைச் சரணடைவேன்...  ஆதி சக்தியே... ஈஸ்வரியே... துணை நீயே!’ என்று நெஞ்சுருகி கை எடுத்துக் கும்பிடுகையில், சினிமா காட்சிகளில் வருவது போல் அது நடந்தது!
 
‘கற்பகாம்பிகையின் கருணை  பரிபூரணமாக சரோஜாதேவிக்கு உண்டு’  என்று எடுத்துக் காட்டும் விதமாக, அம்பாளின் கழுத்திலிருந்து பெரிய மலர்ச்சரமொன்று ஆசி வழங்கும் நோக்கில் பூமியில் விழுந்தது!அதைக் கண்டு சரோ அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? அப்படியொரு ஜென்ம சாபல்ய சந்தோஷம்!நெருக்கமானவர்களிடத்தில் எல்லாம் திருமணம் ஆகும் வரையிலும், ஆன பின்னாலும் சரோ அதைச் சொல்லிச் சொல்லி ஆச்சரியத்தில் முகம் மலர்ந்து போவார்! ஏராளமான வரன்களை அலசி ஆராய்ந்து கடைசியில், ஜெர்மனியில் படித்த இன்ஜினியர் ஸ்ரீஹர்ஷாவை சரோவுக்கு மணமகனாக ருத்ரம்மா தேர்ந்தெடுத்தார்.பி.கே. ஸ்ரீஹர்ஷா பெங்களூரு பெல் நிறுவனத்தில்  பணியாற்றிய 28 வயது வாலிபர். ஏறக்குறைய சரோவும் அவரும் ஒரே ஆண்டில் 1938ல்  பிறந்திருக்கக் கூடும்.
 
ரோஜா மலரின் வடிவத்தில் தனது திருமண அழைப்பிதழைப் புதுமையாக அமைத்திருந்தார் சரோ.பிப்ரவரி 28 காலையில்  கவுரி பூஜை கோலாகலமாக நடந்தது. மாலையில் தனது நிச்சயதாம்பூலப் பரிசாக ஆயிரம் ரூபாயில் பட்டுப்புடைவையையும் தங்க வளையல்களையும் ஈடு கட்டினார் ஹர்ஷா.மாப்பிள்ளை அளித்த பட்டுச்சேலையை அணிந்து வந்து அனைவரிடமும் ஆசி பெற்றார் சரோ.ருத்ரம்மா தேர்ந்தெடுத்த முகூர்த்த நாள் 1967 மார்ச் முதல் தேதி.  அன்று  தமிழகத்தில் கூடுதல் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. காரணம் அண்ணாவின் தலைமையிலான ஆட்சி மாற்றம்!முற்பகல் பதினோரு மணி.சரோஜாதேவியின் திருமணம் விமரிசையாக பெங்களுர் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.சரோவின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்து, தங்களின் இதய தேவதை இல்லறம் புகும் காட்சியைக் கண் குளிரக் கண்டார்கள்.எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாட்டுக் கச்சேரி சரோ கல்யாணத்தின் சிறப்பம்சம்!உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானி, பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர் ராதாகிருஷ்ணன், சரோவுக்குக் கல்யாணப்பரிசாக பகவத் கீதை நூலைப் பரிசாக அனுப்பி இருந்தார். ‘தம்பதி சமேதராகத் தன்னை வந்து தவறாமல் சந்திக்கவும் வாழ்த்து மடலில் மறக்காமல் குறிப்பிட்டார்.மார்ச் 5ஆம் தேதி மயிலாப்பூர் நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
ஏ.எல்.எஸ். என்று அழைக்கப்பட்ட ஏ.எல். ஸ்ரீனிவாசன்,  அகில இந்திய அளவில்  அநேக முறை சினிமா வர்த்தக சபையின் தலைவராகப் பதவி வகித்தவர்.1954 முதல் ஏ.எல். எஸ். மறைந்த  1974 வரை தமிழ்த் திரையுலகம் அவரது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தது. இன்று அந்த அடையாளங்களைச் சொன்னால் உங்களுக்குத் தெரியாது.கவிஞர் கண்ணதாசனின் உடன் பிறந்த அண்ணன் ஏ.எல்.எஸ். என்றால் சட்டென்று புரியும்.அவரது பட நிறுவனம் ஏ. எல். எஸ். புரொடக்ஷன்ஸ். கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பி. மாதவன் போன்ற ஸ்ரீதரின் உதவியாளர்களை சாரதா, மணியோசை போன்றத் தரமான படங்களின் மூலம் டைரக்டர்களாக அறிமுகப்படுத்தியது.எஸ். ஏ. அசோகனுக்கு கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ் என்றால் அதிகப் பிரியம். ஆரூர்தாஸை ஏ.எல். எஸ். மூலமாக இயக்குநராக உயர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
 
ஆரூர் தாஸ் சினிமா டைரக்டராக ப்ரமோஷன் பெறுவதை  எம்.ஜி.ஆர்.  மிகக் கடுமையாக எதிர்த்தார். மிகச் சிறந்த திரை எழுத்தாளரான ஆரூர்தாஸை இழப்பதில் புரட்சி நடிகருக்குப் பிடித்தமில்லை.ஆரூர்தாஸின் இயக்கத்தில் முதல் படமாக ‘பெண் என்றால் பெண்’ சினிமாவைத் தயாரிக்க ஏ.எல். எஸ் சம்மதித்தார்.ஜெமினி ஹீரோ. விஜயகுமாரி ஹீரோயின். ஷூட்டிங் தொடங்கி தொடர்ந்து நடந்தது. படத்தில் அசோகனுக்கு மிக முக்கிய வேடம். அவருக்கு ஜோடியாக இன்னொரு நாயகியும் உண்டு. அதற்கானத் தேர்வு நடைபெற்றது.   அத்தகைய சூழலில் ஏ.எல். எஸுக்கு ஒரு போன் வந்தது.  மறுமுனையில் அழைத்தவர் திருமதி. சரோஜாதேவி.ஏ.எல். எஸ். ஆச்சரியத்துடன் சரோ  சொன்னத் தகவலை ஆரூர்தாஸிடம் பகிர்ந்து கொண்டார். ஆரூர்தாஸ் கடுமையான அதிர்ச்சிக்குள்ளானார். ஆரூர் தாஸ் - ‘ இந்த மார்ச்  மாதம் ஒண்ணாம் தேதிதான், சரோஜா கல்யாணம் நடந்துச்சி. அதுக்குள்ளே  மறுபடியும் எப்படி நடிக்க வரும்?’
 
ஆரூர்தாஸ் கதை வசனம் எழுதின முதல் படம் வாழ வைத்த தெய்வத்துல, நான் தான் ஹீரோ

யினா நடிச்சேன். அதே மாதிரி அவர் முதன் முதலா டைரக்ட் பண்ற சினிமாலயும் நானே நடிக்க விரும்பறேன்.அவர் எம்.ஜி.ஆருக்கு எழுதின நிறைய படங்கள்ள நான் தான் ஹீரோயினா நடிச்சிருக்கேன். அதனால் நீங்களே  என் கால்ஷீட் எப்ப வேணும்னு கேட்டு, எனக்கு போன் பண்ணச் சொல்லுங்க. நான் அவர் கிட்டே பேசிக்கிறேன்னு சொல்லிச்சு.’ என்றார் ஏக குஷியோடு ஏ.எல். எஸ்.அதோட கூட ஸ்ரீதர் முதன் முதலா டைரக்ட் பண்ணின ‘கல்யாணப்பரிசு’ல  ஜெமினி கணேசன், சரோஜாதேவி, விஜயகுமாரி ‘காம்பினேஷன்’ நல்லா வொர்க் அவுட் ஆச்சு. அதே மாதிரி நமக்கும் வொர்க் அவுட் ஆகும்னு நினைக்கிறேன்...! ’மற்றுமொரு சிறந்த வெற்றிப்படம் வழங்கும் தன் உயரிய எண்ணத்துக்குக் கூடுதல் வலு  சேர்த்தார்.
 
ஷூட்டிங் முடிந்து ஆரூர் தாஸ் வீடு திரும்பியதும் இன்னொருப் பதற்றம் அவரைச் சூழ்ந்தது. எம்.ஜி.ஆரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகச் சொன்னார் திருமதி ஆரூர்தாஸ்.எம்.ஜி.ஆர். துப்பாக்கிச் சூடு நிகழ்வுக்குப் பின்னர்,  வீட்டிலேயே ஓய்வெடுத்து குரல் சிகிச்சை பெற்று வந்த சமயம்.‘மீண்டும் மக்கள் திலகத்தால் சினிமாவில் நடிக்க முடியாது... என, வாத்தியாரால் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த அசோகன் உள்ளிட்ட உண்மை நண்பர்கள்...! செய்தி பரப்பி வந்தார்கள்.’ஏற்கனவே ஆரூர்தாஸை டைரக்டராக வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தவர் எம்.ஜி.ஆர்., மீண்டும் எதற்காக அழைத்திருக்கிறார் என்று ஆரூர்தாஸ் குழம்பினார்.உடனடியாகத் தெளிவு பெறும் பொருட்டு எம்.ஜி.ஆருக்கு போன் போட்டார். இருவரும் பரஸ்பரம் நலன் விசாரித்த பிறகு,எம்.ஜி.ஆர்.-‘ இன்னிக்கு மாலை முரசு பார்த்தீங்களா...?’
ஆரூர்தாஸ்- ‘பார்த்தேன். என்னண்ணே விஷயம்?’
எம்.ஜி.ஆர்.- ‘உங்க படத்துல சரோஜா நடிக்கிறதா செய்தி வந்துருக்கே. அது உண்மையா?’
ஆரூர்தாஸ் - ’ஆமாண்ணே.’
எம்.ஜி.ஆர்.- ‘சரோஜாதான் கல்யாணம் பண்ணிக்கிட்டு சினிமாவை விட்டே ஒதுங்கிடுச்சே. ஒரு மாசம் தான் ஆகியிருக்கு...மறுபடியும் ஏன் அதை இழுக்குறீங்க. இடையில் கர்ப்பமாயிடுச்சின்னா, உங்க ஷூட்டிங் பாதிக்கப்படாதா? அது உங்களை சான்ஸ் கேட்டுச்சா?
ஆரூர்தாஸ் - சத்தியமா சரோஜா என்னை சான்ஸ் கேக்கலே. என் கிட்ட கேக்க வேண்டிய அவசியமும் அதுக்கு இல்ல.  ஏ.எல். எஸ். சொல்றபடிதான் நான் நடக்குறேன்.’
 
சரோவின் செயலில் எம்.ஜி.ஆருக்கு விருப்பம் இல்லை என்பது ஆரூர்தாஸூக்குப் பரிபூரணமாகத் தெரிந்தது.தாயார் ருத்ரம்மாவும், குடும்பப் பெண்ணான பின்பு  மீண்டும் திரையில் தோன்றுவது கூடாது என்றார்.சரோவின் கணவர் ஹர்ஷாவின் முடிவு வேறாக இருந்தது.‘பெண்கள் வீட்டில் சும்மா இருப்பது எனக்குப் பிடிக்காத விஷயம். அவர்கள் தங்களது திறமையை வீணாக்கக் கூடாது. எனவே சரோஜாதேவி தொடர்ந்து நடிப்பார்’ என்றார்.
 
தமிழ் சினிமாவின் மூவேந்தர்களின் ஈடு இணையற்ற ஒரே ஜோடியாக வலம் வந்தவர் சரோ. அவரது செகன்ட் இன்னிங்ஸில், அசோகனுக்குக் காதலியாக இரண்டாவது நாயகியாக அவர்  திரையில் தோன்ற எந்த அவசியமும் கிடையாது. அத்துடன்  மற்றொருத் தவறையும் ஆர்வக் கோளாறால் சரோ செய்ய நேர்ந்தது. துரதிர்ஷ்டவசமாக அவரது முழுப் பங்களிப்பு அமையாத, ‘பெண் என்றால் பெண்’ சினிமாவைத் தனது ‘நூறாவது படம்’ என்று  அறிவித்தார்.
 
சின்ன வாத்தியார்களாக ஜெய் சங்கரும் - ரவிச்சந்திரனும் தொடர்ந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த நேரம். அசோகன் ஹீரோவாக நடிப்பது எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல. பொது ஜனங்களுக்கும் கூட உற்சாகம் அளிக்காத சமாசாரம்.1967 டிசம்பரில் சரோவின் ராசி தேதியான 7ல் பெண் என்றால் பெண் வெளியாகியது. சென்னை கெயிட்டி தியேட்டரில் அதிக பட்சமாக ஐந்து வாரங்கள் ஓடியது.‘சிரித்தாலும் கண்ணீர் வரும்...  அழுதாலும் கண்ணீர் வரும்...’ என்று,பெண் என்றால் பெண் படத்தில் ஒரு சூப்பர் ஹிட் டூயட். கண்ணதாசன்-எம்.எஸ். வி. கூட்டணியில் டி.எம்.எஸ்.- பி. சுசிலா குரல்களில்  சரோவின் நிலைமையை அப்பட்டமாகச் சொல்லியிருந்தார்கள்.
 
1968  பிப்ரவரியில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பணமா பாசமா ரிலிசானது. அதில் ஜெமினிகணேசனும் சரோஜாதேவியும் ஜோடியாக நடித்திருந்தார்கள். கதையின் மிக முக்கிய ‘திமிர் பிடித்த மாமியார்’ வேடம் எஸ். வரலட்சுமிக்கு.சீமான் பெற்ற செல்வம் ‘சாந்தி’யாக, ஏழை ஓவியர் ஜெமினியுடன் காதல் வசப்படும் காட்சிகளில்‘மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ’ என்று பாடி ஆடித்  துள்ளித் திரிவார் சரோ.ஜெமினியை மணந்த பின்னர் ஓலைக் குடிலில், மாற்றிக் கட்ட சேலை கூட இல்லாமல் கஷ்டப்படும் போதும், பெற்ற தாயை விடத் தனக்குத் தாலி கட்டிய காதலனையே உயர்வாகப் பேசுவார்.திருமதி சரோஜாதேவியின் நடிப்பு தாய்க்குலங்களைப் பெரிதும் கவர்ந்தது.'அபிநய சரஸ்வதி அழகாக தோசை கூட சுடுகிறாரே...’ என்று ஆச்சரியப்பட்டது தினமணிகதிர் விமர்சனம். ‘ஸ்பென்ஸர் இடியாப்பம்’ என ‘குமுதம்’ பணமா பாசமாவை உயர்த்தி எழுதியது.ஆசியாவிலேயே மிகப் பெரிய திரை அரங்கான மதுரை தங்கத்தில் 25 வாரங்கள் ஓடியது பணமா பாசமா. அதன் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தச் சொல்லி தியேட்டர்காரர்களை கே.எஸ்.ஜி.யே கேட்டுக் கொண்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அது வாரித் தந்த வசூல் எவ்வளவு என்று!ஏ.பி. நாகராஜனின் பக்தி சினிமாக்களுக்கும், தென்னக ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் தோட்டா சத்தங்களுக்கும் இடையில் மீண்டும் சமூகச் சித்திரங்களுக்குப் புதிய வரவேற்பை ஏற்படுத்தியது.கே.எஸ். ஜி. யின் இயக்கத்தில் சரோவுக்கு அது முதல் படம் மட்டுமல்ல. மறக்க முடியாததாகவும் அமைந்தது.தொடர்ந்து கே.எஸ். ஜி.-  ஜெமினி -சரோ  கூட்டணியில் புதிய படங்கள் தயாராயின.‘பணமா பாசமா’வை 100வது படமாக அறிவித்திருந்தால், இன்னமும் அதிகப்  புகழ் சரோவுக்குப் பரவியிருக்கக் கூடும்.
dinamani.com 24 10 2016

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %