from: http://ungalrasigan.blogspot.com/2010/12/blog-post.html

கண்டேன் கன்னடத்துப் பைங்கிளியை!

தமிழ்ப் பட ஹீரோயின்களில் என்னை அதிகம் கவர்ந்தவர் சரோஜாதேவிதான். ; தமிழ் உச்சரிப்பும் கொச்சையாக, கொஞ்சலாக இருக்கும்; என்றாலும், என்னை அதிகம் கவர்ந்தவர் சரோஜாதேவிதான். அடுத்து, தேவிகா.

நான் தீவிர சிவாஜி ரசிகனாக இருந்தும், எம்.ஜி.ஆர். படங்களையும் அதிகம் பார்த்ததற்குக் காரணம் இரண்டு பேர். ஒருவர் டி.எம்.எஸ்.; மற்றவர் சரோஜாதேவி. நான் சாவி பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, என்னுடன் பணியாற்றிய திருமதி லோகநாயகிக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்த நான், அந்தக் குழந்தைக்கு ‘அபிநயா’ என்று பெயர் வைக்கச் சொன்னேன். சரோஜாதேவியின் பட்டப் பெயர் ‘அபிநய சரஸ்வதி’ அல்லவா... அதை மனதில் கொண்டுதான் அந்தப் பெயரை சிபாரிசு செய்தேன். அவரும் அப்படியே வைத்தார். திருமதி லோகநாயகி தற்போது குமுதம் சிநேகிதியின் ஆசிரியையாக உள்ளார்.

எண்பதுகளின் துவக்கத்தில், வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போய், பாண்டிச்சேரியில் ஒரு பழைய பேப்பர் கடையில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில், வாரத்துக்கு மூன்று சினிமாக்கள் பார்த்தேன். சரோஜாதேவி நடித்த படம் என்றால், கண்டிப்பாகப் பார்த்துவிடுவேன். தீவிர சரோஜாதேவி ரசிகனாக நான் ஆனது அப்போதுதான். ஜெமினி சினிமா, பேசும்படம், பொம்மை, சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளில் வரும் சரோஜாதேவி படம் எதையும் விடமாட்டேன். கத்தரித்து ஆல்பம் போல் தயார் செய்வேன்.

நான் வேலை செய்த கடைக்குப் பக்கத்திலேயே தெருத் திருப்பத்தில் இருந்த ஒரு வீட்டிலிருந்து அடிக்கடி பழைய பேப்பர்களைக் கொண்டு வந்து என் கடையில் எடைக்குப் போட்டுவிட்டுக் காசு வாங்கிப் போவார்கள். அவர்கள் வீட்டில் ப்ளஸ் டூ படிக்கும் ஒரு பெண் இருந்தது. அதுவும் சில நாள் பேப்பர் கொண்டு வந்து எடைக்குப் போடும்.

அந்தப் பெண் பாக்யராஜ் ரசிகை என்று தெரிந்து, சினிமாப் புத்தகங்களில் இருந்து பாக்யராஜ் படங்களைக் கத்தரித்து வைத்திருந்து, அதற்குக் கொடுப்பேன். அந்தப் பெண் இரட்டைச் சடை போட்டு, முக ஜாடை அப்படியே சரோஜாதேவி மாதிரியே இருக்கும். அது புன்னகைக்கும்போது சரோஜாதேவி சிரிக்கிற மாதிரியே இருக்கும். இதனால் மெள்ள மெள்ள அந்தப் பெண் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகி, ஒரு நாள் அதைப் பார்க்கவில்லையென்றால்கூட தலை வெடித்துப் போகிற மாதிரி ஆகிவிட்டது. சரி, அந்தக் கதை அப்புறம். கன்னடத்துப் பைங்கிளிக்கு வருவோம்.

எங்கள் பழைய பேப்பர் கடைக்குச் சேர வேண்டிய தொகையை பெங்களூர் மில்களில் இருந்து வாங்கி வர வேண்டியிருந்தது. என் முதலாளிக்கு (காந்தி என்கிற நடராஜன். இவரைப் பற்றி ஏற்கெனவே தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன்.) அப்போது பம்பாய் செல்லும் வேலை இருந்ததால், யாரை அனுப்புவது என்று யோசித்துக்கொண்டு இருந்தார். நான் விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர் என்று குறுகிய வட்டத்தைத் தாண்டி அதிகம் வெளியே போகாதவன். இருந்தும், “நான் வேணா போய் வாங்கி வருகிறேனே... அட்ரஸ் கொடுங்களேன்” என்று துணிச்சலாகச் சொன்னேன். காரணம், சரோஜாதேவி பெங்களூர்வாசி என்பதுதான். பில் கலெக்ட் பண்ணுகிற சாக்கில் அப்படியே சரோஜாதேவி வீட்டுக்கும் போய் ‘ஹாய்’ சொல்லிவிட்டு வரலாமே என்கிற நப்பாசைதான்!

“நெஜம்மாவா? தைரியமா போய் வருவியா? விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு அந்த ரெண்டு மூணு மில்களுக்கும் போய்ப் பார்த்து, சம்பந்தப்பட்டவங்களோடு பேசி, காரியத்தை சக்ஸஸா முடிச்சுக்கிட்டு வருவியா?” என்று கேட்டார் முதலாளி. “கண்டிப்பா!” என்றேன். ‘சரி, இவனுக்கும்தான் ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போமே!’ என்று நினைத்தவர் போல, நான் செய்ய வேண்டியது என்ன என்பதை விலாவாரியாக விளக்கி, அட்ரஸ்களைக் கொடுத்து, என்னை பெங்களூருக்கு பஸ் ஏற்றி அனுப்பினார் முதலாளி. பெங்களூரில் போய் இறங்கியதுமே, அந்தப் புதிய சூழல் என்னை ரொம்ப மிரட்டியது. என்னவோ கண்காணாத அமெரிக்காவிலேயே போய் இறங்கிவிட்டது மாதிரி மிரட்சியாகவும், சற்றுப் பயமாகவும் உணர்ந்தேன்.

நல்லவேளையாக, அங்கிருந்த ஆட்டோக்காரர்களுக்குத் தமிழ் தெரிந்திருந்தது. ஒவ்வொரு இடமாகச் சொல்லி, அந்தந்த மில்களுக்கும், கம்பெனிகளுக்கும் போய் அவர்கள் தந்த செக்குகளைப் பெற்றுக்கொண்டேன். முதலாளி சொல்லியிருந்தபடி, அவருக்குத் தெரிந்த ஒரு கடையில், அந்த ஊழியர்களோடு இரவு தங்கினேன். விடிந்ததும், நேரே கிளம்பி பாண்டிச்சேரி வரவேண்டும் என்று முதலாளி உத்தரவு. ஆனால், என் அபிமான நடிகை சரோஜாதேவியைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் மிகுந்திருந்ததால் (சொல்லப்போனால், முக்கியமாய் அதற்காகத்தானே வேலைமெனக்கெட்டு வந்திருக்கிறேன்!) ஒரு ஆட்டோ பிடித்து, சிவாஜி நகர் போகச் சொன்னேன். பேசும்படம் புத்தகத்தில் வெளியான சரோஜாதேவி அட்ரஸைக் கிழித்து வைத்துக்கொண்டிருந்தேன். அந்த அட்ரஸுக்கு ஆட்டோவில் போய் இறங்கினேன்.

வெளியே வாட்ச்மேனிடம், “அம்மா இருக்காங்களா?” என்று விசாரித்தேன். “நீ யாரு தம்பி?” என்று கேட்டார் அவர். “அம்மாவோட ரசிகன் நான். சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு...” என்று தயங்கினேன். சரோஜாதேவி அப்போது நடிப்பதை நிறுத்திப் பல காலம் ஆகியிருந்தது. எனவே, அந்த பங்களாவில் ஈ, காக்காய் இல்லை. ரசிகன் என்று சொல்லிக்கொண்டு வந்த என்னை அந்த வாட்ச்மேன் ஆச்சரியமாகத்தான் பார்த்தார். யாரிடமும் எந்த அனுமதியும் பெறாமல், ‘உள்ளே போ’ என்று என்னைச் சுலபமாக அனுமதித்துவிட்டார்.

உள்ளே போனேன். முன்னால் வரவேற்பறை மாதிரி இருந்த சிறு அறை ஒன்றில் நுழைந்தேன். யாரோ ஒரு பணிப்பெண், “யாரு?” என்று என்னை விசாரித்தார். “அம்மாவைப் பார்க்கணும். நான் பாண்டிச்சேரிலேர்ந்து வந்திருக்கேன். அவங்களோட ரசிகன்” என்றேன். “உக்காரு” என்று சொல்லிவிட்டு உள்ளே போனார் அந்தப் பணிப்பெண். எவ்வளவு நேரம் காத்திருந்திருப்பேன் என்று தெரியாது... ஒரு மணி நேரமாவது இருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த அறைக்குள் நுழைந்தார் சரோஜாதேவி. சட்டென்று எழுந்து நின்றேன். “உக்காருப்பா! என்னைப் பார்க்கணும்னா வந்திருக்கே?” என்றார். தோற்றத்தில்தான், படத்தில் பார்த்ததைவிட முதுமையாகத் தெரிந்தாரே தவிர, குரல் பழைய அதே கொஞ்சும் குரல்தான்!

வாங்கிக்கொண்டு போயிருந்த ஆப்பிள் பழங்களை அவரிடம் கொடுத்துவிட்டு, நாற்காலியின் நுனியில் தயக்கத்தோடு உட்கார்ந்தேன். அவருடைய படங்களை சிலாகித்துச் சொன்னேன். புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டு இருந்தார். “எனக்கு சிவாஜிதான் பிடிக்கும். ஆனா, நீங்க பொதுவா சிவாஜி படத்துல சோகமான கேரக்டர்ல வர்றீங்க. எம்.ஜி.ஆர். படத்துலதான் உற்சாகமா, சிரிச்ச முகத்தோட அழகா தெரியறீங்க” என்றதும், “அப்படியா..!” என்று சிரித்தார். பணிப்பெண்ணை அழைத்து பிஸ்கட் கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார். மிகுந்த தயக்கத்தோடு ஒன்றை எடுத்துத் தின்றேன். பின்னாலேயே சூடான டீ வந்தது. குடித்தேன். அதுக்கப்புறம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. “உங்களைப் பார்த்ததுல ரொம்பச் சந்தோஷம்மா! நான் வரேன்” என்று விடைபெற்றுக் கிளம்பினேன். அவர் போட்டோவில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கச் சொல்லிக் கேட்க வேண்டும் என்று எனக்கு அப்போது தோன்றவே இல்லை. என் அபிமான நடிகையை நேரில் பார்த்துச் சில நிமிஷ நேரம் பார்த்துக் கொண்டு இருந்ததே பெரிய சந்தோஷமாக இருந்தது எனக்கு.

அதன்பின், 1988-ல் நான் ‘சாவி’யில் பணியாற்றிக்கொண்டு இருந்த சமயத்தில், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.- ஜெயலலிதா அணி, வி.என்.ஜானகி அணி என இரண்டாகப் பிரிந்திருந்த நேரம்... சரோஜாதேவி சென்னை, நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் வந்து தங்கியிருந்தார் என்று கேள்விப்பட்டு, சாவி பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் ராதாகிருஷ்ணனுடன் கிளம்பிப் போனேன். சரோஜாதேவியை இரண்டாவது முறையாக, இந்த முறை ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் சந்தித்தேன். அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது பற்றியும், எம்.ஜி.ஆரின் வாரிசாக ஜெயலலிதா வந்திருப்பதுபோல், எம்.ஜி.ஆருடன் அதிகம் நடித்தவர் என்கிற முறையில் அவரும் அரசியலில் எம்.ஜி.ஆரின் வாரிசாக வந்திருக்கலாமே, ஏன் வரவில்லை என்றும் கேட்டேன். “அச்சச்சோ! பேட்டியே வேணாம். எனக்கு அரசியலே தெரியாது. பிடிக்காது. ஜெயலலிதா நல்ல டேலண்ட்டட் வுமன். அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்!” என்று சிரித்தபடி கையெடுத்துக் கும்பிட்டு, பேட்டி கொடுக்கக் கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

“ஒரு ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னால், உங்களின் ரசிகன் என்கிற முறையில், பெங்களூரில் உங்களை உங்க வீட்டுக்கே வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போனேன்” என்றேன். “அப்படியா..!” என்று அதற்கும் ஒரு சிரிப்பு

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %