22 08 2016

சரோஜா தேவி: 5. நீ சாந்தி தானே...

சரோவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய மகத்தான வெற்றிச் சித்திரம் பாலும் பழமும்! அபிநய சரஸ்வதியின்  ஒப்பற்ற நடிப்பாற்றலுக்கு உரைகல்லாக எல்லாரும் எடுத்துச் சொல்வது  பாலும் பழமும் மாத்திரமே.நர்ஸ் ‘சாந்தி’   எதனோடும் ஒப்பிட இயலாத தனித்துவம் மிக்க கதாபாத்திரம். தொடக்கம் முதல் இறுதி வரை இறுக்கமாகக் கட்டப்பட்டு இன்றைக்கும் மணம் வீசும் ஜாதி மல்லி! ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்,   நான் பேச நினைப்பதெல்லாம், காதல் சிறகைக் காற்றினில் விரித்து,  என்னை யார் என்று,  இந்த நாடகம் அந்த மேடையில்... என்று ஒவ்வொரு பாடலிலும் நாயகி சரோவின் குணச்சித்திரம், கதையின் சூழலுக்கேற்ப ஒன்றிக் கலந்து வெவ்வேறு உணர்ச்சி பாவங்கள் பெருக,  நடிப்பின் ஜீவநதியாகக் கரை புரண்டோடும்.உலகத் தமிழர்கள் விரும்பும் பொற்காலத் திரை கானங்களில் பாலும் பழமும் படப் பாடல்கள் முந்தி நின்று சுகபந்தி விரிக்கும். சரோவை சதா  நினைவுப்படுத்தும். 
 
பாலும் பழமும் படத்தில் சவுகார் ஜானகி இன்னொரு ஹீரோயின்.தனது அசாத்தியத் திறமையால்  ‘அன்னை’ சினிமாவில் பானுமதியையே மலைக்கச் செய்தவர். அவரை எதிரில் வைத்துக்கொண்டு, தன்னிகரற்ற நடிப்பில் சரோ சாதித்தது சாதாரண விஷயம் கிடையாது.லீலாவாக வந்திருக்கும் சாந்திதான் டாக்டரின் முதல் மனைவி என்கிற நிஜம் புரிந்த நொடியில் சுந்தரிபாயும், சி.டி. ராஜகாந்தமும் சரோவை வீட்டை விட்டு வெளியேற்றும் காட்சி.கடமை அர்ப்பணிப்பில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சரோ திருட்டுத்தனமாக ஏணி மீது ஏறி, சிவாஜிக்கு  ஊசி போடும் கட்டம் பதற்றமும், பரிதாபமும் நிறைந்தது.
 
அக்காட்சியில் சரோவின் சோக நடிப்பு சர்வதேச சர்வாதிகாரிகளின்  கல் நெஞ்சையும் கரையச் செய்யும்!இடைவேளைக்குப் பிறகு சிவாஜி வீட்டில் எதிர்பாராமல் சந்திக்கும் சரோவை, அவர் மாறு வேடத்தில்  ‘செவிலித்தாய் லீலா’ வாகத் தோன்றும் சூழலில்-  ஏற்கனவே டாக்டரின் நர்ஸ் மனைவியாகச் சந்தித்த ஞாபகத்தில் எம்.ஆர். ராதா, ‘நீ சாந்தி தானே...! ’ என்று அவருக்கே உரிய பாணியில் அழைத்து, ஆச்சரியத்தில் அலறும் போது தியேட்டர்களில் விசில் பறக்கும். ஆரவாரம் அடங்க நேரமாகும். ஒரே ஆண்டில் பிறந்தும், சம காலத்தில் நடித்தும் திரையில் ஜோடி சேராதவர்கள் அபிநய சரஸ்வதியும்- மக்கள் கலைஞரும். டிசம்பர் 1967ல் சரோ சதம் அடித்த சமயம். சினிமா இதழ் ஒன்றுக்காக  சந்தித்துப் பேசினார்கள்.
 
சரோ - -: என் படங்கள்ள எது பிடிக்கும்?
ஜெய் -: பாலும் பழமும். அதுல உங்க கேரக்டர் வண்டர்ஃபுல்! மூணு, நாலு தரம் பார்த்திருக்கிறேன்.
சரோ -: கல்யாணப்பரிசுல எப்படி?
ஜெய் -: பாலும் பழமும் மாதிரி எனக்குப் பிடிக்கல.
 
‘குமுதம்’  விமரிசனத்தில்  பாலும் பழமும் - சரோ நடிப்புக்கு விசேஷப் பாராட்டு கிட்டியது.‘ரூபாய் வேடம் ஒன்று. பைசா வேடம் ஒன்று. சோகத்துக்கு நல்ல வாய்ப்பு.‘நீ சாந்திதானே என்று கணேசன் கேட்கையில், உண்மையை அவரிடம் ஒப்புக் கொள்ள முடியாமல், மவுனமாகத் தலை அசைக்கும் வேதனையைச் செவ்வனே சித்தரித்துப் பெயரை நிலை நாட்டிக் கொள்கிறார். ’ஆனந்த விகடன் தன் பாணியில் சேகர் - சுந்தர் உரையாடலில்‘நடிப்பிலே சிவாஜிக்கு ஈடு கொடுக்கிறார் சரோஜாதேவி. முதல் சீன்லே அப்படியே மனசை அள்ளிக் கொண்டு போகிறார். அதே மாதிரி சோகக் காட்சிகளிலும் கவர்கிறார்’ என்று மெச்சிக் கொண்டது.
 
பாலும் பழமும் நினைவினில் ஏந்தி  சரோ கூறியவை-
‘பாலும் பழமும் படத்தில் நடிகர் திலகம் டாக்டராகவும், நான் அவரது காதல் மனைவியாகவும் நடிச்சோம். படப்பிடிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் சிவாஜி என்னிடம், ‘சரோஜா... இந்தப் படத்துல நீ என்னை விட நல்லா நடிச்சிருக்கே’என்றார். நான் சிலிர்த்துப் போயிட்டேன். அவர் நடிப்புக்கு முன்னாடி நானும் கொஞ்சம் நடிச்சிருந்தேன். ஆனா என் நடிப்பை அவர் நடிப்புக்கும் மேலா வெச்சு சொன்னார் பாருங்க. அதுதான் அவரை மத்தவங்கக் கிட்டயிருந்து வித்தியாசப்படுத்துது.  
    
அந்த கேரக்டருக்காக நானும் கொஞ்சம் கஷ்டப்பட்டுருக்கேன். அதில் நான் இரண்டு விதமாத் தெரிவேன். அதாவது டி.பி. பேஷண்டா இருக்கிறப்ப ரொம்ப வற்றி உலர்ந்து காணப்படுவேன். மத்த சீன்கள்ள வழக்கம் போல் தெரிவேன்.டி.பி. பேஷண்ட் சீன்ல நான் அப்படி மெலிவா தெரியறதுக்கு காரணம் நான் கிடந்த கொலைப்பட்டினிதான். சாப்பாடு நேரத்துல கொஞ்சம் ஜூஸ் மட்டுமே சாப்பிட்டு உடலை இளைக்க வெச்சிருக்கேன்.ஒரு வேளை என் கேரக்டர் மேலே நான் காட்டின அக்கறை சிவாஜி சாரை இப்படிச் சொல்ல வெச்சிருக்கலாம்’
 
மேற்கண்டவாறு தினத்தந்தி நேர்காணலில் தெரிவித்த சரோஜாதேவி, அதற்கு நேர் மாறான  இன்னொருத் தகவலை ‘சித்ராலயா’ சினிமா  இதழில்  குறிப்பிட்டுள்ளார். இரண்டில் எது சரி என்பதை அவர் மட்டுமே கூற முடியும்.‘ பாலும் பழமும் ஷூட்டிங்கின் போது நான் படுத்த படுக்கையாகி விட்டேன். அத்துடனேயே டி.பி. பேஷன்ட்டாக  நடித்தேன். தேகம் மிகவும் மெலிந்து போய் அந்தப் பாத்திரம் சோபிக்கும் வகையில்  அமைந்தது. நல்ல பெயரும் கிடைத்தது’
 
பாகப்பிரிவினையைத் தொடர்ந்து சரவணா பிலிம்ஸ் தயாரித்த படம் பாலும் பழமும். செப்டம்பர் 9ல் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. சென்னையில் 20 வாரங்களைக் கடந்து ஓடியது.
dinamani.com 21 05 2016

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %