19 12 2016
 
சரோஜா தேவி: 16. பல்லாண்டு வாழ்க!
 
1996. செப்டம்பர் 20. நேரு விளையாட்டு அரங்கம். சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் சிறந்த கலைஞர்களுக்கான 17ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா! ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற வந்திருந்தவர் சரோஜாதேவி. அதனை அபிநய சரஸ்வதிக்கு வழங்கியவர் நடிகர் திலகம். கணேசனும்- சரோவும் தங்களை மறந்து ‘இருவர் உள்ளம்’ காலத்துக்கே போய் ஆனந்தத்தில் கட்டித் தழுவிக் கொண்டனர். கைகளில் பொன்னாடையோடு வெட்கிச் சிரித்தவாறு தலை குனிந்து நின்றார் - சிறப்பு விருந்தினர் சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின். அதை வண்ணப்புகைப்படமாக வெளியிட்டு ‘பாந்தமான காட்சி!’ என்று வர்ணித்தது தினமணி நாளிதழ்.இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் சின்னத்திரைகளில் சரோஜாதேவியை நடிக்க அழைத்தார்கள். மறுப்பேதும் சொல்லாமல் ‘கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம்’ தொலைக்காட்சித் தொடரில் ‘வழக்கறிஞர் பவானி சங்கர்’ வேடத்தில் வலம் வந்தார் சரோ.
 
ஆகஸ்ட் 23. 2006. சென்னை ஆல்பட் தியேட்டர். அரங்கு நிறைந்த மாலைக் காட்சியால் மூச்சுத் திணறியது. நாடோடி மன்னன் படப் பதாகைகள் புதுப் பொலிவுடன் சுற்றிலும் அலங்கரித்தன. மாபெரும் வெற்றிச் சித்திரமான நாடோடி மன்னனின் 49வது ஆண்டு துவக்க விழா! ஆகஸ்டு 4 முதல் மீண்டும் நாடோடி மன்னனின் அட்டகாசம் தமிழகத்தில் ஆரம்பமாகி இருந்தது. மக்கள் திலகத்துடன் திரையில் மகிழ்ச்சியூட்டியத் திரையுலக ஜோடிகள் சரோஜாதேவி, பத்மினி, எம்.என். ராஜம், ராஜ சுலோசனா, ராஜஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, மஞ்சுளா, மற்றும் சச்சு ஆகியோரும் மக்களோடு மக்களாக நாடோடி மன்னன் படம் பார்த்த மறக்க முடியாத வைபவம் அரங்கேறியது. ‘உங்களுக்கு சரோஜாதேவி என்றாலே எம்.ஜி.ஆரின் ஞாபகம் வரும். எம்.ஜி.ஆர். சாகவில்லை. நம் இதயங்களில் இருக்கிறார். ஆனாலும் நம் கண் முன்பே அவர் இல்லையே என்கிற கவலை எனக்கும் உள்ளது. எம்.ஜி.ஆர். இங்கே எங்கேயாவது நின்று நம்மைப் பார்த்துக் கொண்டு இருப்பார். பிறந்தால் எம்.ஜி.ஆர். போல் பிறக்க வேண்டும். வாழ்ந்தால் எம்.ஜி.ஆர். போல் வாழ வேண்டும். அவர் ஒழுங்காக வாழ்ந்தார். என் கடைசி மூச்சு இருக்கும் வரையில் தமிழக மக்களையும் எம்.ஜி.ஆரையும் மறக்க மாட்டேன். நெஞ்சம் நெகிழச் செய்யும் சரோஜாதேவியின் பேச்சைக் கேட்டு வாத்தியார் ரசிகர்கள் ஒரு கணம் கண்களில் நீர் மல்க நின்றார்கள்.
 
7.1.2007. சரோவின் பிறந்த நாளில் கூடுதல் விசேஷம். சரோஜாதேவியின் கலைச்சேவையைப் பாராட்டி, பெங்களூரு பல்கலைக்கழகம் அபிநய சரஸ்வதிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. சர்வகலாசாலையின் 42வது பட்டமளிப்பு விழாவில் கர்நாடக மாநில கவர்னர் டி.என். சதுர்வேதியிடமிருந்து தனக்கான விருதினை நேரில் பெற்றுக் கொண்டார் சரோஜாதேவி. 2008. சரோவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. மத்திய அரசு சரோவுக்கு ‘வாழ் நாள் சாதனையாளர் விருது’ வழங்கியது. அவ்வுயரிய கவுரவத்தைப் பெற்ற ஒரே தென்னிந்திய நடிகை சரோ !
 
2008 செப்டம்பர் 2. செவ்வாய்க்கிழமை. டெல்லியில் நடைபெற்ற கோலாகல விழாவில் சரோவுக்கு அப்பரிசை அளித்தவர் பாரத நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் என்பது கூடுதல் சிறப்பு! சரோவுடன் அன்று வாழ்நாள் சாதனையாளர்களாகப் போற்றப்பட்ட மற்ற இருவர், இந்தியத் திரை உலகின் ஜாம்பவான்கள் திலீப் குமார், லதா மங்கேஷ்கர். பத்து லட்சம் ரூபாய் ரொக்கமும் பாராட்டுப் பத்திரமும் சாதனைக் கலைஞர்களுக்குக் கிடைத்தது.
 
2008. அக்டோபர் 1. புதன்கிழமை. மாலை ஆறு மணி. சென்னை அண்ணா அறிவாலயம். கலைஞர் அரங்கம். முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் தலைமையில் நடிகர் திலகத்தின் 80வது பிறந்த நாள் விழா! ‘சிவாஜி - பிரபு அறக்கட்டளை’ சார்பில் சரோஜாதேவிக்கு ‘சிவாஜி விருது’ வழங்கிச் சிறப்பித்தார் முதல்வர் கலைஞர். சரோவுடன் ஆரூர்தாஸ், கே.ஆர். விஜயா, சச்சு உள்ளிட்டோரும் பரிசு பெற்றனர். ‘திருவாங்கூர் சகோதரிகள் லலிதா - பத்மினி- ராகினி’ ஆகியோரது உருவம் பதித்த சிறப்புத் தபால் உறையும் வெளியிடப்பட்டது. 2008. அக்டோபர் 3. வாழ்நாள் சாதனையாளர் மற்றும் ‘சிவாஜி விருது’ பெற்றதற்காக சரோ தனது நட்சத்திரத் தோழிகளுக்கு விருந்து வழங்கிக் கொண்டாடினார். சிவாஜி குடும்பத்தினருடன் எஸ். எஸ். ஆர்., அஞ்சலிதேவி, வைஜெயந்திமாலா, எஸ்.வரலட்சுமி, எம்.என். ராஜம், ராஜசுலோசனா, விஜயகுமாரி, மனோரமா, சச்சு, சாரதா, மஞ்சுளா, ராதிகா, சுஹாசினி, குட்டி பத்மினி, சிவகுமார், விஜயகுமார், ஒய்.ஜி. மகேந்திரன், சரத்குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.
 
மிகவும் உணர்ச்சிவசப்பட்டு உருக்கமாக சரோ உரையாடியதிலிருந்து- ‘என்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரையும் சந்தித்துப் பேச ஆசைப்பட்டேன். அதற்காகவே இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன். ‘நீங்கள் அழைக்கும் அனைவரும் வருவார்களா...?’ என்று சிவகுமார் சந்தேகமாக என்னிடம் கேட்டார். ‘என் மீது எல்லாருமே பாசமாக இருப்பார்கள். அதனால் அத்தனை பேரும் நிச்சயமாக வருவார்கள் என்றேன். நான் எதிர்பார்த்தபடி அனைவரும் வந்து விட்டார்கள். எங்க அக்கா வைஜெயந்திமாலா வந்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். என் தோழி விஜயகுமாரி... அவளும் நானும் எப்பப் பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருப்போம்.வர மாட்டேன் என்று சொல்லிவிட்டு சர்ப்ரைஸாக வந்து நிற்கிறாள். எம்.ஜி.ஆர். இல்லத்தில் இருந்து யாரும் வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். லதாவும், நிம்மியும் வந்து என்னை சந்தோஷப்படுத்தி விட்டார்கள். சிவாஜி குடும்பத்தினரை நான் அழைக்காமலே வந்து விடுவார்கள். அவர்கள் வீட்டில் நானும் ஒருத்தி. ராம்குமார், தேன்மொழி, பிரபு- புனிதா, வந்ததில் சந்தோஷம். என் ஹீரோ எஸ்.எஸ். ஆர். ஆலயமணி படத்தில் ‘கண்ணான கண்ணனுக்கு அவசரமா...?’ பாடலில் என்னுடன் நடித்தவர் வந்திருக்கிறார். அவருக்கு என் நன்றி! ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்பவே இந்த நிமிடமே என் உயிர் பிரிந்தால் சந்தோஷப்படுவேன்.’
 
பொன்விழா கடந்தும் பிரமாதமாகத் தொடர்கிறது சரோவின் கலையுலக வாழ்வு! எக்காலத்திலும் அதில் எந்தவொரு கிசுகிசுவையும் எவரும் சொல்ல முடியாதபடி அரிதானப் புகழைச் சம்பாதித்தவர் சரோ! 2008 ஜனவரி 28. சரோஜாதேவி குறித்து எதிர்பாராமல் எழுந்த அவதூறு, சரோவையும் கோடிக்கணக்கான அபிநய சரஸ்வதியின் அபிமானிகளையும் ஒரே நேரத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜனவரி 30 புதன்கிழமை - நாளிதழ்களில் வெளியான செய்தித் தொகுப்பின் சில பகுதிகள்: ‘கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா. அவரது அமைச்சரவையில் கல்வி மந்திரி - எச். விஸ்வநாத். விஸ்வநாத் எழுதிய நூல் ‘ஹள்ளி ஹக்கிய ஹாடு’. கிராமத்துக் குயிலின் கீதம்! என்று தமிழில் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். விஸ்வநாத்தின் ‘மலரும் நினைவுகளில்’ விவகாரம் எழுந்தது. ‘ஒரு முறை நானும் முதல்வர் கிருஷ்ணாவும் ஒன்றாகப் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு தினசரி, ‘மாண்டியா எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சரோஜாதேவி நிறுத்தப்படுவார்... ’என்ற செய்தியை வெளியிட்டு இருந்தது. ‘என்னங்க... பத்திரிகைகாரர்கள் இப்படி எழுதியிருக்கிறார்கள்... மக்கள் என்ன சொல்வார்களோ...? ’ என்று என்னிடம் கேட்டார் முதல்வர். அப்போது எனக்குப் பழைய கதைகள் ஞாபகத்தில் தைத்தன. ‘நடிகை சரோஜாதேவியும் இளம் தலைவர் எஸ். எம். கிருஷ்ணாவும் காதல் வலையில் சிக்கி இருந்தார்கள்’ என்று சுவாரஸ்யமாக முன்பு பேசப்பட்டு வந்ததை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ‘சார்... என்ன ஆனாலும் கிருஷ்ணா அவருடைய பழைய நண்பரை மறக்க முடியாது. மாண்டியாவில் அந்த அம்மாவுக்கே டிக்கெட் கொடுப்பார்..., என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்’ என்றேன். அதைக் கேட்டு சிரித்த எஸ். எம். கிருஷ்ணா சந்தோஷமாக, ‘பாருங்கள் விஸ்வநாத், நாம் அப்படி யாரையும் மறந்து விடக் கூடாது அல்லவா...? ’ என்று கேட்டார்.
 
ஜனவரி 28 - திங்கட்கிழமை. புத்தக வெளியீட்டு விழா மைசூரில் நடைபெற ஏற்பாடுகள் தயாரானது. எஸ். எம். கிருஷ்ணாவின் தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. மறு நாள் ஜனவரி 29ல் நூல் விற்பனைக்கு வந்தது. விஸ்வநாத் எழுதிய ‘ஹள்ளி ஹக்கிய ஹாடு’ சரோவை ரொம்பவே ரணப்படுத்தியது. ‘சரோஜாதேவி ஆவேசம்! ’ என்றத் தலைப்பில், அவரது பேட்டியைப் பத்திரிகைகள் பாரா பிரித்து பிரசுரித்தன. ‘எஸ். எம். கிருஷ்ணாவைப் பற்றி எழுதுகையில், என்னைப் பற்றி விஸ்வநாத் குறிப்பிட்டு இருப்பதை அறிந்து நான் பெரிதும் வேதனை அடைந்தேன். விஸ்வநாத் தனது சுயசரிதையில், தன்னைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும். அடுத்தவரைப் பற்றி எழுதும் உரிமை அவருக்கு மட்டும் இல்லை யாருக்குமே கிடையாது. எத்தனையோ நடிகைகள் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டு விட்டு என்னை, என் பெயரை ஏன் விஸ்வநாத் குறிப்பிட்டார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பெண்ணைப் பற்றி குறிப்பாக ஒரு நடிகையைப் பற்றி இப்படிச் சிறுமைப்படுத்தும் விதத்தில் பேசுவது அவமானகரமாக உள்ளது. ‘எஸ். எம். கிருஷ்ணாவைத் தனிப்பட்ட முறையில் உங்களுக்குத் தெரியுமா...?’ ‘எஸ். எம். கிருஷ்ணா பற்றி நான் பேசத் தயாரில்லை... ’ என்று ஆவேசமாகக் கூறினார் சரோஜாதேவி. எஸ். எம். கிருஷ்ணாவின் மனைவி பிரேமா,‘எங்கள் திருமணத்துக்கு முன்பு சரோஜாதேவிக்கும், என் கணவர் கிருஷ்ணாவுக்கும் திருமணப்பேச்சு நடைபெற்றது நிஜம். அது எல்லாருக்கும் தெரிந்த செய்தி. இத்தனை வருடங்கள் கழித்து, இப்போது அதனை எழுத வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பது தெரியவில்லை. ’தம்பி எஸ். எம். சங்கர் கூறியவை- ‘சரோஜாதேவி எங்கள் தூரத்து உறவினர். அண்ணனுடன் கல்யாண பேச்சு வந்தது. எங்கள் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. ’ 
 
2011 - பிப்ரவரி 13 ஞாயிறு மாலை. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கோலாகல விழா. ‘நான் 6வது முறையாக முதல் அமைச்சராக வந்தால் 125 கலைஞர்களுக்கு அல்ல, 225 பேருக்கு விருதுகள் வழங்கப்படும்’என்று ‘கலைமாமணி’ வழங்கும் விழாவில் அறிவித்தார் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி. அன்று ஆர்யா, அனுஷ்கா, தமன்னா, ஆகிய இளைய தலைமுறைப் பிரபல நட்சத்திரங்களுடன் சேர்ந்து, தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றம் அளித்த கலைமாமணி விருதைப் பெற்றுக் கொண்டவர்களில் ‘அபிநய சரஸ்வதி சரோஜாதேவியும்’ மிக முக்கியமானவர்! ‘திரையுலக சகாக்களான புரட்சித்தலைவரும் - புரட்சித்தலைவியும் இத்தனை ஆண்டுகள் தமிழக முதல்வர்களாக இருந்தும், சரோஜாதேவிக்கு இதுவரையில் கலைமாமணி கொடுக்காமலா இருந்தார்கள்..! ’ என்று வியப்பில் புருவத்தை உயர்த்தினார்கள் பொது மக்கள். காலம் கடந்தாவது சரோவுக்குக் கலைமாமணி கிடைத்ததே என்று அபிநய சரஸ்வதியின் ரசிகர்கள் மகிழ்ந்திருப்பார்கள். கலைமாமணி என்கிற கவுரவம் பெறாமலே, எம்.ஜி. சக்கரபாணி, தேவிகா போன்ற எத்தனையோ நடிப்புக் கருவூலங்கள் இயற்கை எய்தி விட்டார்கள்.
 
2015 டிசம்பர் முதல் வாரம். வரலாறு காணாத இடை விடாத மழை சென்னையைப் புரட்டிப் போட்டது. வள்ளல் எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாபுரம் இல்லமும் அதில் சிதறுண்டது. புரட்சித்தலைவர் பயன் படுத்திய ஏராளமான பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ‘பொன்மனச் செம்மலின் ரசிகர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் போதும். வாத்தியாரின் வீட்டைப் புதிதாகச் செய்து விடலாம்’ என்று சரோஜாதேவி ஓர் அறிக்கை வெளியிட்டார். ‘அ. தி.மு.க.வே மக்கள் திலகத்தின் குடிலை சீர்ப்படுத்த ஏற்பாடுகள் செய்யும்’ என்று தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
2016 ஜனவரி 7. வியாழக்கிழமை. சரோஜாதேவி தனது பிறந்த நாள் அன்று சென்னைக்கு விசேஷ விஜயம் செய்தார். வெள்ள நிவாரண நிதிக்காக நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம், சிவகுமார் முன்னிலையில் ஐந்து லட்ச ரூபாய் வழங்கினார்.இன்னும் இரண்டே ஆண்டுகளில் சரோவுக்காக இனிய சதாபிஷேகம் காத்திருக்கிறது! எத்தனையோ நிலவுப் பாடல்களுக்கு உயிரூட்டியது சரோவின் உற்சாக நடிப்பு. அபிநய சரஸ்வதி ஆயிரம் பிறை காணும் திருநாள் அவசியம் விரைவில் வரட்டும். சரோ பல்லாண்டு வாழட்டும்!
dinamani.com  13 08 2016

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %