21 11 2016

சரோஜா தேவி: 13. அபிநய சரஸ்வதி!
1938 ஜனவரி 7ஆம் தேதி பிறந்தவர் சரோ. 2016 ஜனவரி ஆறாம் தேதியுடன் 77 ஆண்டுகள் பூர்த்தி ஆகி, 78வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.தென் இந்தியாவில் பிரபல ஹீரோயின்கள் எல்லாரும் சரோவுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.ஓஹோவென்று ஓடிய அவரது எந்தப் படத்திலும் மற்றொரு நாயகியின் பங்களிப்பால், அபிநய சரஸ்வதி அவரது தனித்துவத்தையோ, நன் மதிப்பையோ, குறும்பில் கொடி கட்டிப் பறக்கும் குளு குளு நடிப்பையோ இழந்தது கிடையாது. அதுவே சரோவின் மிகப் பெரிய பலம்! சிம்ரன் உள்பட அநேகம் பேர் சரோவுடன் தங்கள் நடிப்புக் கணக்கைத் தொடங்கி புகழ் பெற்றிருக்கிறார்கள். சரோவுடன் சங்கமித்தவர்கள்-
 
1.விஜயகுமாரி (கல்யாணப்பரிசு, பெண் என்றால் பெண்)
2. சவுகார் ஜானகி (பாலும் பழமும், புதிய பறவை, கண் மலர்)
3.வைஜெயந்திமாலா (இரும்புத்திரை, பைகாம் இந்தி)
4.சாவித்ரி (பார்த்தால் பசி தீரும்)
5. தேவிகா (ஆடிப்பெருக்கு, குலமகள் ராதை)
6. ஷீலா - அறிமுகம் (பாசம்)
7. ஜோதிலட்சுமி,
8.மணிமாலா - அறிமுகம் (பெரிய இடத்துப்பெண்)
9. சாரதா - அறிமுகம் (வாழ்க்கை வாழ்வதற்கே)
10. ரத்னா (எங்க வீட்டுப் பிள்ளை)
11. கே. ஆர். விஜயா (நான் ஆணையிட்டால்)
12. பாரதி - அறிமுகம் (நாடோடி)
13.காஞ்சனா (பறக்கும் பாவை)
14. ஜெயலலிதா (அரச கட்டளை)
15. விஜய நிர்மலா (பணமா பாசமா, அன்பளிப்பு)
16. வாணிஸ்ரீ (தாமரை நெஞ்சம்)
17.லட்சுமி (அருணோதயம், உயிர்)
18. பத்மினி (தேனும் பாலும்)
19. பானுமதி-
20.ராஜஸ்ரீ (பத்து மாத பந்தம்)
21. ஷோபனா (பொன் மனச் செல்வன், ஒரே தாய் ஒரே குலம்)
22. சிம்ரன் (ஒன்ஸ்மோர்) 23. நயன் தாரா (ஆதவன்)
 
தன்னுடைய திரையுலகத் தோழிகள் பற்றி சரோஜாதேவி- ‘அமெரிக்கா போனா பத்மினி வீட்லதான் தங்கியிருப்பேன். 1981ல் நானும் என் கணவரும் ஒரு மாச டூர்ல, நியூயார்க்ல பப்பிம்மா வீட்டுக்கும் போனோம். பத்மினியின் கணவர் டாக்டர் ராமச்சந்திரன். நியூயார்க் முழுசையும் எங்களுக்குச் சுற்றிக் காட்டினார். அவங்க வீட்ல டின்னர் சாப்பிட்டுக்கிட்டே பல விஷயங்களைப் பேசினோம். அப்ப பத்மினியோட கணவர் கிட்ட, ‘பொதுவா நம்ம நாட்ல இருந்து பலர், அமெரிக்காவை சுத்திப் பார்க்க வராங்க. இங்கேயே தங்கி உத்தியோகம் செய்யறாங்க. படிக்கிறாங்க. அவங்களுக்குத் திடீர்னு அகால மரணமோ, அல்லது விபத்துல உயிர் இழப்போ நிகழ்ந்துட்டா, ‘பாடியை’ இந்தியாவுக்குக் கொண்டு போவாங்களா... இல்ல இங்கேயே அடக்கம் பண்ணிடுவாங்களான்னு... ’ கேட்டேன். ‘அது அவங்க அவங்க சூழ்நிலையையும் விருப்பத்தையும் பொறுத்தது. ’என்றார் டாக்டர். நாங்க என்னிக்கு எந்த இடத்துல இருப்போம்னு பத்மினியிடம் சொல்லிட்டுப் போவோம். அன்னிக்கு ‘மினிய பெலிஸ்’ என்ற இடத்தில் இருந்தோம். அங்கே நாங்க எதிர்பாராத விதமா ஒரு ட்ரங் கால். பப்பியம்மாவோட மகன் பதற்றமான குரலில், ‘அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார்னு’ சொன்னதும் எங்களுக்கு ஒரே ஷாக். உடனடியா ட்ரிப்பை கேன்சல் பண்ண முடியல, பப்பியம்மாவுக்கும் ஆறுதல் சொல்ல முடியல. கிட்டத்தட்ட ஒரு மாசம் கழிச்சி டூர் முடிஞ்சி திரும்பி வரும் வழியில், பத்மினியைப் பார்த்து துக்கம் விசாரிச்சேன். பப்பிம்மா எங்கையைப் பிடிச்சிக்கிட்டாங்களே தவிர, ஒரு மணி நேரம் தாண்டியும் ஒரு வார்த்தை கூட அவங்க வாயிலருந்து வரல. கணவரை இழந்த அதிர்ச்சி எத்தனை கொடூரமானதுன்னு, அன்னிக்குப் பப்பிம்மா மூலமா உணர்ந்தேன்.
 
கணவர் மறைந்து மூணு மாசத்துக்குப் பிறகு பப்பிம்மா, அவங்க அக்கா லலிதாவோட பெங்களூர்ல எங்க வீட்டுக்கு வந்தாங்க. அப்ப லலிதாவுக்கு கேன்சர் முத்தின நேரம். என்கிட்டே விடை பெறும் சமயம், ‘சரோஜா... அடுத்த முறை நான் வருவேனோ இல்லையோ... ஒரு வேளை நாம சந்திக்கிறது இதுவே கடைசி தடவையா இருக்கும்னு, லலிதாம்மா கண் கலங்கினப்ப எனக்கும் அழுகை வந்து விட்டது. ஆறுதல் சொல்லத் தெரியாமல் நானும் சேர்ந்து அழுதேன்.
 
சவுகார் ஜானகியுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று நிறையவே நடித்திருக்கிறேன். ‘சரோஜாவையும், சவுகாரையும் ஜோடியாக சேர்த்துக் கொண்டால் அந்தப்படம் நிச்சயமாக வெற்றி அடையும்’ என்பார் சிவாஜி. இரண்டாயிரமாவது ஆண்டில் சவுகாருக்கு இருதய ஆபரேஷன் நடைபெற்றது.அப்போது நான் அவருக்கு போன் செய்து பேசினேன். ‘இன்னும் ஆபரேஷன் ஆரம்பமாகவில்லை. நான் தைரியமாகவே இருக்கிறேன். என்றாலும் இந்த நேரத்தில் உங்கள் அழைப்பு எனக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது சரோஜா’ என்று நெகிழ்ந்தார் ஜானகி. எங்களுக்குள் நிரந்தரமான நேசம் நீடிக்கிறது.
 
ஆலயமணி படத்தில் நானும் விஜயகுமாரியும் போட்டி போட்டு நடிப்போம். எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு எப்போதும் உண்டு. நாங்கள் ஒரு குடும்பம் போல் அன்பு காட்டி, அதையே திரும்பப் பெறுகிறோம். ’ -சரோஜாதேவி. சரோவின் நடையழகு தனித்துவம் வாய்ந்தது. அதை வர்ணித்து மூவேந்தர்களும் பாடியவை சூப்பர் ஹிட் ஆயின. 1.ஆஹா மெல்ல நட- புதிய பறவை 2. இந்த பெண் போனால் அவள் பின்னாலே என் கண் போகும் - எங்க வீட்டுப் பிள்ளை 3. மெல்ல... மெல்ல... என் மேனி நடுங்குது மெல்ல - பணமா பாசமா.
 
சரோவுடன் ஜோடி சேராத ஒரே ஹீரோ ஜெய்சங்கர்! நடிகர் திலகத்தின் நாயகிகளில் அநேகம் பேர் அவருக்கு அம்மாவாக, அக்காவாக, தங்கையாக, மகளாக, மருமகளாக, மாமியாராகக் கூட நடித்திருப்பார்கள்.‘பாகப்பிரிவினை தொடங்கி ஒன்ஸ்மோர் வரையில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் சரோ மட்டுமே! அது ஓர் இனிய அதிசயம்! ’கின்னஸ் சாதனை புரிந்துள்ள பி.சுசிலாவின் கான சமுத்திரத்தில், சரோவின் உள்ளம் கொள்ளை கொள்ளும் நடிப்பும் நதியாக சங்கமிக்கும்.
 
தேவர் பிலிம்ஸ், சரவணா பிலிம்ஸ், ஏவி.எம்., ஆர்.ஆர். பிக்சர்ஸ் என எவர் படமெடுத்தாலும் பி. சுசிலாவின் குரலில், ஓபனிங் மற்றும் சோலோ சாங்கில் சரோ கொடி கட்டிப் பறந்ததற்கு இணையாக இன்னொருவரைச் சொல்லவே முடியாது இன்று வரையில் நித்தம் நித்தம் சலிக்காமல் அனைத்து ரேடியோ, டிவி சேனல்களில் ஒலிக்கிறது... புதிய பறவையின் ‘சிட்டுக்க்குருவி முத்தம் கொடுத்து... ’ விடியலின் அழகோடு தாம்பத்யத்தின் இனிமையையும் சேர்த்துச் சொல்ல, ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ ஒன்று போதுமே. அதில் தோன்றும் சரோவைப் போன்ற எழிலான இளம் மனைவிக்கு, 1961ல் எத்தனை இளைஞர்கள் ஏங்கினார்களோ...! 
 
தேவர் படங்கள் ஒன்று தவறாமல் காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை, காட்டுக்குள்ளே திருவிழா, காடு வெளைஞ்ச நெல்லிருக்கு என்று தொடங்கி, மூலிகையின் பெருமை பேசும் நீண்ட பயனுள்ள பட்டியல்... ‘அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்’ பாடலில் திருநாவுக்கரசரின் தேவாரம் எதிரொலித்து கண்ணதாசனின் இலக்கிய செழுமை நங்கூரம் பாய்ச்சும். பணத்தோட்டம் படத்தில் வரும் ‘ஒரு நாள் இரவில்’ கேட்டுக் கொண்டே செத்து விடத் தோன்றும்! ‘திருடாது ஒருநாளும் காதல் இல்லை என்பேன் எனையே அவன் பால் கொடுத்தேன் என் இறைவன் திருடவில்லை’ அதில் மேற்கண்ட வரி வைரமுத்துவால் முரளி நடித்த ‘ஊட்டி’ சினிமாவில் மீண்டும் கையாளப் பட்டது. ‘தாய்ச் சொல்லைத் தட்டாதே’யில் பிரிவாற்றாமையைப் பிரசவிக்கும் ‘பூ உறங்குது பொழுதும் உறங்குது’ வைரமுத்துவை உலுக்கிய பாடல்.
 
டி.ஆர். ராமண்ணாவின் படங்களில் எம்.ஜி.ஆர்.- சரோ ஜோடி பங்கேற்ற ஒவ்வொரு டூயட்டும் அவற்றின் மாறுபட்ட காட்சி அமைப்புகளுக்காகவும் நெஞ்சில் நிலைத்தவை.
1. பெரிய இடத்துப் பெண் - மேற்கத்திய நடனம் ஆடியவாறு ‘அன்று வந்ததும் அதே நிலா’
2. பணக்கார குடும்பம் - டென்னிஸ் மட்டையோடு ‘பறக்கும் பந்து பறக்கும்’
3. அதிலேயே இன்னொரு இனிய கீதம் - ‘இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா... ’ - கொட்டும் மழையில் கட்டை வண்டிக்கு அடியில்.
4. பறக்கும் பாவை - சர்க்கஸ் வலையில் - ‘கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா... ’
5. மற்றொன்று பாத்ரூமில் குளித்தவாறே, ‘உன்னைத் தானே ஏய்... ’
----------
 
சரோவின் பாட்டு ராசி எண்ணற்றக் கவிஞர்களின் அழியாப்புகழோடு ஒன்று கலந்தது.உவமைக்கவிஞர் சுரதாவை மறக்க முடியாமல் நினைவு படுத்துவதுநாடோடி மன்னனின் எம்.ஜி.ஆர். -சரோ இடம் பெற்ற ‘கண்ணில் வந்து மின்னல் போல்’ எனத் தொடங்கும் டூயட். அதில்‘எழில் மின்னல் கண்டு தாழை மலர்வது போலே உன்னைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே நீல வானம் இல்லாத ஊரே இல்லை உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை’ போன்ற வரிகள் இலக்கியத்தேன் ஊறிய பலாச் சுளைகள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கல்யாணப் பரிசு படப் பாடல்கள் இன்னமும் பன்னீர் தெளிக்கின்றன..
பாகப்பிரிவினையின் ‘தங்கத்திலே ஒரு குறை இருந்தால்’ ஒலித்த பிறகே கண்ணதாசன் வீட்டில் பண மழை பெய்யத் தொடங்கியது.
 
கே. டி. சந்தானம் மிகச் சிறந்த கவிஞர் மற்றும் நடிகர். சிவாஜியின் முதல் குரு. ரகசிய போலீஸ் 115ல் அம்முவின் அப்பாவாக நடித்திருப்பார். ‘என்ன பொருத்தம்’ என்ற பாடல் காட்சியில் அவரைக் காணலாம்.அவரது புகழுக்குக் கலங்கரை விளக்கமாக ஆடிப்பெருக்கு படத்தின்1.தனிமையிலே இனிமை காண முடியுமா 2. காவேரி ஓரம் கவி சொன்ன காதல்...என்றும் நிலைத்திருக்கிறது.தெய்வத்தாய், படகோட்டி, அன்பே வா படப் பாடல்களால் வாலியின் வசந்தம் நிரந்தரமானது.இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம்.‘அன்னக்கிளி’ படப் பாடல்களுக்கு முன்பு அவருக்கு விலாசம் தந்தவை கலங்கரை விளக்கம் படத்தில் ஏக்கத்தின் ஊஞ்சலாக பி. சுசிலாவின் குரலில் பவனி வந்த 1.என்னை மறந்ததேன் தென்றலே, மற்றும் 2. சரோ சிவகாமியாகவும் எம்.ஜி.ஆர். நரசிம்ம பல்லவனாகவும் காட்சி தந்த ‘பொன் எழில் பூத்தது புது வானில்’ என்கிற ஏழு நிமிட டூயட்.
-----------
தாய்ச் சொல்லைத் தட்டாதே படத்தின் ‘பட்டுச் சேலை காற்றாட’ பாடல், காட்சிப்படுத்தப்படாமல் பாக்கி நின்றது. குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது ஒரு டூயட்டைப் படமாக்கத் தேவைப்படும்.சரோ அவசரமாக, சுக்ரால்- இந்தி ஷூட்டிங்குக்குச் செல்ல வேண்டும். ‘அரை நாள் போதும் எனக்கு. அதற்குள் உனக்கான காட்சிகளை முடித்து, பம்பாய்க்கு ப்ளைட் ஏற்றி விடுகிறேன் சரோஜா... ’என்றார் தேவர். நாலே மணி நேரத்தில் காமிரா முன்பு சரோ, ஒரு திரைக் காதலியின் அழகிய பாவனைகளை பதித்துக் காட்ட, பட்டுச் சேலை காற்றாட’ இன்னமும் பரவசமூட்டி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘அபிநய சரஸ்வதி -கலை அரசி பி. சரோஜாதேவி’ என்று 1966ல் சத்யா மூவிஸ் நான் ஆணையிட்டால் படத்தில் முதன் முதலில் சரோவுக்கு இரண்டு பட்டங்களுடன் டைட்டில் காட்டினார்கள்.வேறு எந்த ஹீரோயினுக்கும் அவ்வாறு செய்திருப்பார்களா என்பது வியப்புக்குரிய வினா!
-----
 
‘அய்யோ கொடுமை...! சரோஜாதேவிக்கு ‘அபிநய சரஸ்வதி’ பட்டமா?’ என்று என். முருகன் - திருநெல்வேலி - பேசும் படத்தில் கேள்வி கேட்டார்.காரணம் சரோஜாதேவி, வைஜெயந்திமாலா - பத்மினி போல், ஒப்பற்ற நடனமணியாகத் தமிழக மேடைகளில் முத்திரை பதித்தவர் அல்ல.
‘கன்னடக்காரர்கள் கொடுத்ததுதானே? அந்த ஊருக்கு சரோஜாதேவிதான் நாட்டிய மேதை என்றால் அதில் தவறில்லையே... ’ என்று பேசும் படம் பதிலளித்தது. கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பா சரோவுக்கு வழங்கிய கவுரவம் ‘அபிநய சரஸ்வதி! ’‘அமர சில்பி ஜக்கண்ணா’ என்கிற கன்னட சினிமாவில் சிறப்பாக நடித்ததற்காக சரோவுக்கு அவ்விருது கிடைத்தது.அப்பரிசு தமிழ் நாட்டில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.கன்னடத்தில் ‘அபிநய’ என்பது நடிப்பைக் குறிக்கும் வார்த்தை. நடனம் என்று பொருள் கிடையாது.நம் ஊரில் அபிநயத்தை பரதத்துடன் இணைத்துப் பேசுவது வழக்கம். ‘அமர சில்பி ஜக்கண்ணா’ விக்ரம் ஸ்டுடியோ முதலாளி - சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் பி.எஸ். ரங்கா தயாரித்து டைரக்ட் செய்த படம்.தமிழிலும் ‘சிற்பியின் செல்வன்’ என்று மொழி மாற்றம் செய்யப்பட்டது. 1965 கோடையில் பிரபல பத்திரிகைகளில் ‘சிற்பியின் செல்வன்’ விளம்பரம் காணப்படுகிறது. சரோவுடன் கல்யாண குமார், சித்தூர் வி. நாகையா ஆகியோர் நடித்தனர்.
 
‘அபிநய சரஸ்வதி சரோஜாதேவி’ என்று முதன் முதலில் டைட்டிலில் போடப்பட்ட படம் ’எங்க வீட்டுப் பிள்ளை’ சரோவுக்கும் ஆடல் கலையில் சிறந்த பயிற்சியும் தேர்ச்சியும் உண்டு. நவரச பாவனைகளுடன் சினிமா நடனத்தில் ஜொலி ஜொலித்திருக்கிறார். ஏறக்குறைய ஏழு நிமிடங்களுக்குக் குறையாமல் சரோ, திரையில் பங்கேற்ற நாட்டிய நாடகங்கள் சில உண்டு. கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் ஜெமினி கணேசன் - சரோஜாதேவி ஜோடியாக நடித்த படம் வாழ்க்கை வாழ்வதற்கே.அதில் கே.வி. மகாதேவன் இசையில் கண்ணதாசனின் சங்க இலக்கியம் சொட்டும் வரிகளில் பி. சுசிலா- பி.பி. ஸ்ரீனிவாஸ் குரல்களில் ‘அவன் போருக்குப் போனான் - நான் போர்க் களமானேன் அவன் வேல் கொண்டு சென்றான் - நான் விழிகளை இழந்தேன்’
 
கலங்கரை விளக்கம் படத்தில் எம்.எஸ். வி. இசையில் ஒலிக்கும் பாவேந்தர் பாரதிதாசனின் தமிழர் எழுச்சிப் பாடல் ‘சங்கே முழங்கு’.அப்பாடல் காட்சிக்குக் கிடைத்த வெற்றியால், எம்.ஜி.ஆர்., தன் வண்ணப் படத்துக்கு சங்கே முழங்கு என டைட்டில் வைத்தார். 1967 மே ரிலிஸ்- எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி தயாரித்து இயக்கிய அரச கட்டளை. எம்.ஜி.ஆர்.- சரோ இணைந்து நடித்த கடைசி படம். அதில் கே.வி. மகாதேவன் இசையில் ‘ஆடி வா ஆடிவா ஆடப்பிறந்தவளே ஆடி வா’ - (முத்துக் கூத்தன் பாடல்) சரோவின் ஆனந்தத் தாண்டவத்தையும், வாத்தியாரின் வாள் வீச்சையும் ஏழு நிமிடங்கள் ஒரு சேரத் திரையில் காட்டி ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்தது.
dinamani.com  22 07 2016

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %