Mgr Most popular articles

Maalai malar nov 17 2009

நாடகத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர். கால் எலும்பு முறிந்தது: சிகிச்சைக்குப்பின் குணம் அடைந்தார்

"நாடோடி மன்னன்" மகத்தான வெற்றிக்குப்பின், கண் திருஷ்டி போல் எம்.ஜி.ஆருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. புகழ் பெற்ற திரைப்பட நடிகராக விளங்கிய போதிலும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவின் நாடகங்களில் நடிப்பது எம்.ஜி. ஆரின் வழக்கம். சீர்காழியில், "இன்பக்கனவு" நாடகத்தில் நடித்தபோது, ஒரு சண்டைக் காட்சியில் நடிகர் குண்டுமணியை அலாக்காகத் தூக்கினார். குண்டுமணி, மிகப் பருமனான நடிகர். அப்படியும், அவரை எம்.ஜி.ஆர். எளிதாகத் தூக்கிவிட்டார். ஆனால், சற்றே சரிந்ததால், கால் எலும்பு முறிந்து விட்டது. இதனால் மேடையில் விழுந்து விட்டார், எம்.ஜி.ஆர். வலி கடுமையாக இருந்த போதிலும், அதைத் தாங்கிக் கொண்டு, மேடையில் அமர்ந்தவாரே எம்.ஜி.ஆர். பேசினார். "எதிர்பாராதவிதமாக, கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு விட்டது. தொடர்ந்து நடிக்க முடியாத நிலையில் இருப்பதற்காக வருந்துகிறேன். விரைவில் குணம் அடைந்து, இந்த நாடகத்தை மீண்டும் உங்கள் முன் நடத்துவேன்" என்று கூறினார்.

 எம்.ஜி.ஆருக்கு கால் எலும்பு முறிந்ததை அறிந்து, ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு, காரில் சென்னைக்குப் புறப்பட்டார். இதற்குள் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்ட செய்தி, சென்னைக்கு எட்டிவிட்டது. அவர் வீட்டு முன் பெரும் கூட்டம். சென்னை திரும்பிய எம்.ஜி. ஆர். "எனக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள்" என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு "எக்ஸ்ரே" எடுக்கப்பட்டது. கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை என்றும், விரிசல்தான் ஏற்பட்டிருக்கிறது என்றும் சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டாக்டர்கள் கூறினர். சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி, ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். "அட்மிட்" ஆனார். எம்.ஜி.ஆர். கால் எலும்பு முறிந்து விட்டதால், அவர் குணம் அடைந்தாலும் முன்போல் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவியது. இதனால் எம்.ஜி.ஆர். அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:- "என் உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல விலகி விட்டதற்கு முக்கியக் காரணம், உங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும்தான். என் உடல் நலம் தேறியபின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னிலும் அதிக வலிமை பெற்றார். நிருபர்கள் முன்னிலையில், அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித மாற்றமும் இல்லை. வேகம் சற்று கூடியிருந்தது!

நாடோடி மன்னனுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த படம் "தாய் மகளுக்குக் கட்டிய தாலி". அறிஞர் அண்ணா எழுதிய கதை. வசனத்தை அரங்கண்ணல் எழுதினார். ஒளிப்பதிவாளர் ஆர்.ஆர்.சந்திரன், "கல்பனா கலாமந்திர்" என்ற சொந்த படக் கம்பெனியைத் தொடங்கி அவரே டைரக்ட் செய்த படம். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜமுனா நடித்தார். மற்றும் பி.கண்ணாம்பா, ராஜசுலோசனா, எம்.ஜி.சக்ரபாணி, சின்னப்பதேவர், தங்கவேலு ஆகியோர் நடித்தனர். 31_12_1959_ல் இப்படம் வெளிவந்தது. ஆர்.ஆர்.சந்திரன், நல்ல ஒளிப்பதிவாளரே தவிர, நல்ல டைரக்டராகப் பிரகாசிக்க முடியவில்லை. கதையும், எம்.ஜி.ஆருக்கு ஏற்றதல்ல. அதனால் இப்படம் வெற்றி பெறவில்லை.

1960_ல் "பாக்தாத் திருடன்", "ராஜா தேசிங்கு", "மன்னாதி மன்னன்" ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். "பாக்தாத் திருடன்", சதர்ன் மூவிஸ் தயாரிப்பு. திரைக்கதையை ரவீந்தர் எழுத, வசனம் எழுதியவர் ஏ.எஸ்.முத்து. தயாரித்து இயக்கியவர் டி.பி.சுந்தரம். இதில், எம்.ஜி.ஆருக்கு ஜோடி வைஜயந்திமாலா. இருவரும் இணைந்து நடித்த முதல் படம். மற்றும் டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், அசோகன், சந்தியா, ஹெலன் ஆகியோரும் நடித்தனர். இது சராசரிப்படம். நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்த "மன்னாதி மன்னன்" 19_10_1960_ல் வெளிவந்தது. எம்.ஜி.ஆருக்கு ஜோடி பத்மினி. மற்றும் அஞ்சலிதேவி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, ஜி.சகுந்தலா நடித்தனர். கதை_வசனம் கண்ணதாசன். இயக்கம்: எம்.நடேசன். இசை: விசுவநாதன் _ ராமமூர்த்தி. "அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா!" என்ற கண்ணதாசனின் புகழ்பெற்ற பாடல் இடம் பெற்ற படம் இது. இதில், எம்.ஜி.ஆருக்கும், பத்மினிக்கும் நடனப்போட்டி நடக்கும். அதில் எம்.ஜி.ஆர். ஜெயிப்பார்; பத்மினி தோற்பார்! பின்னர் எம்.ஜி.ஆரிடம் பத்மினி நடனம் கற்றுக்கொள்வார். நடனக் கலையில் வல்லவரான பத்மினிக்கு ஈடுகொடுத்து எம்.ஜி.ஆர். ஆடியதை, ரசிகர்கள் பாராட்டினர். இந்தப்படம் சூப்பர்ஹிட்.

"மதுரை வீரன்" என்ற மாபெரும் வெற்றிப்படத்தை எடுத்த லேனா செட்டியாரின் "கிருஷ்ணா பிக்சர்ஸ்" தயாரித்த படம் "ராஜாதேசிங்கு." வரலாற்றுப் பின்னணி கொண்ட கதை. கண்ணதாசனும், மக்களன்பனும் வசனம் எழுதினர். உடுமலை நாராயணகவி கண்ண தாசன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பாடல்களை எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். டைரக்ஷன்: டி.ஆர்.ரகுநாத். எம்.ஜி.ஆருடன் பானுமதி, பத்மினி ஆகியோர் இணைந்து நடித்தனர். மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.ராமச்சந்திரன், தங்கவேலு, டி.ஏ.மதுரம், எம்.என்.ராஜம், எம்.சரோஜா ஆகியோரும் நடித்தனர். இந்த பிரமாண்டமான படம், நீண்ட காலம் தயாரிப்பில் இருந்தது. கதைப்படி, இதில் எம்.ஜி.ஆர். இறந்து விடுவார். இதை, எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஏற்கவில்லை. அதனால் படம் ஓடவில்லை.

MGR Articles list

  • Yathaartham - views
    Political views about Tamils in Srilanka
  • Health articles
    Health is important in your life, that's why it is important to take preventive measures early

MGR you tube videos

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %