Mgr Most popular articles

maalaimalar.com nov 2009

திரை உலகில் எம்.ஜி.ஆர். எதிர் நீச்சல்: கதாநாயகனாக 11 ஆண்டு பிடித்தது 

தமிழ்த்திரை உலகில் சூப்பர் ஸ்டாராகவும், பிறகு தமிழக முதல்_ அமைச்சராகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆர், சினிமா உலகில் அடியெடுத்து வைத்தபின் கதாநாயகன் அந்தஸ்தை பெற 11 ஆண்டுகள் போராடவேண்டியிருந்தது.

திரை உலகிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்த எம்.ஜி. ஆரின் முழுப்பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். பெற்றோர் பெயர் கோபாலமேனன் _ சத்யபாமா. கோபாலமேனன், மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்து வந்தார். அரூர், எர்ணாகுளம், திருச்சூர், கரூர் முதலிய இடங்களில் வேலை பார்த்தார். நீதி தவறாதவர் அவர். அநீதிக்கு துணை போக மறுத்ததால், அவரை வேறு ஊருக்கு மாற்றினார்கள். அதனால் மன வேதனை அடைந்த கோபாலமேனன், பதவியை ராஜினாமா செய்தார். மனைவியுடன் இலங்கை சென்றார்.

கோபாலமேனன் _சத்யபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்து வந்தபோது, 1917_ம் ஆண்டு ஜனவரி 17_ந்தேதி சுவாதி நட்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார். கண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார். அந்த இடம் தமிழில் "பச்சைக்காடு" என்று அழைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். பிறந்த வீட்டில், தற்போது பள்ளிக்கூடம் நடந்து வருகிறது.

எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி. சக்ரபாணி, பாலகிருஷ்ணன் என்று இரண்டு அண்ணன்கள். கமலாட்சி, சுபத்ரா என்ற 2 தமக்கைகள். 4 குழந்தைகளுக்குப்பின் கடைக்குட்டியாகப் பிறந்தவர் எம்.ஜி.ஆர். பாலகிருஷ்ணன், கமலாட்சி, சுபத்ரா ஆகிய மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். சக்ரபாணியையும், எம்.ஜி.ஆரையும் கோபாலமேனனும், சத்யபாமாவும் அன்புடன் வளர்த்து வந்தனர். எம்.ஜி.ஆருக்கு 2 வயதானபோது, குடும்பத்துடன் தாயகம் திரும்பினார், கோபாலமேனன். முன்பு செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவர் குடும்பம், ஒத்தப்பாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தது. 1920_ம் ஆண்டு, கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். அப்போது எம்.ஜி.ஆருக்கு மூன்று வயது.

இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு சத்யா அம்மையார் தலையில் விழுந்தது. அவருடைய தம்பி நாராயணனும், குடும்ப நண்பர் வேலு நாயரும் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்தனர். குழந்தைகளுடன் அங்கு சென்றார், சத்யபாமா. நாராயணன், "ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி" என்ற நாடகக் குழுவில் பின்பாட்டு பாடி வந்தார். கும்பகோணம் ஆணையடிப் பள்ளியில் சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் சேர்ந்தார்கள். இலங்கையில் இருந்து கொண்டு வந்திருந்த பணமும், நகைகளும் தீரும் வரை அன்றாட வாழ்க்கை சிரமம் இன்றி கழிந்தது. அதன்பின், குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க அரும்பாடு பட்டார், சத்யபாமா.

குடும்பக் கஷ்டத்தைப் போக்க சத்யபாமா அம்மையாரிடம் அவர் தம்பி நாராயணன் ஒரு யோசனை தெரிவித்தார். "சக்ரபாணியும், ராமச்சந்திரனும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள். நான் வேலை பார்க்கும் கம்பெனியில் சேர்த்துவிட்டால், விரைவில் முன்னுக்கு வந்து விடுவார்கள்" என்பதே அவருடைய யோசனை. குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்று சத்யபாமா விரும்பிய போதிலும், குடும்ப சூழ்நிலையைக்கருதி அவர்களை நாடகத்தில் சேர்க்க சம்மதித்தார். அதைத்தொடர்ந்து, அவர்களை நாடகத்தில் சேர்த்துவிட்டார், நாராயணன். அப்போது அந்த கம்பெனியில் பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். முதலில் சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், பிறகு கதாநாயகனாக நடித்தார். இந்த சமயத்தில்தான் தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கின.

1935_ம் ஆண்டு, எஸ்.எஸ். வாசன் எழுதிய "சதிலீலாவதி" என்ற கதை, சினிமாவாக தயாரிக்கப்பட்டது. அதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ். பாலையா ஆகிய நால்வருக்கும் இதுதான் முதல் படம். இந்தப் படத்தில் நடித்தபோது எம்.ஜி. ஆருக்கு வயது 19. முதல் படத்தில் நடித்ததற்காக அவருக்கு கிடைத்த சம்பளம் நூறு ரூபாய். அதை அப்படியே அம்மாவிடம் கொண்டு போய் கொடுத்து, ஆசி பெற்றார். எம்.ஜி.ஆரின் இரண்டாவது படம் "இரு சகோதரர்கள்". இதில் சக்ரபாணியும் நடித்தார். இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது. தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைக்க சத்யபாமா அம்மையார் விரும்பினார். "நடிப்புத்துறையில் முன்னேறிய பிறகுதான் திருமணம்" என்று எம்.ஜி.ஆர். கூறினார். ஆனால் தாயார் தொடர்ந்து வற்புறுத்தவே திருமணத்துக்கு சம்மதித்தார். பாலக்காட்டைச் சேர்ந்த பார்க்கவி என்கிற தங்கமணியை எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்தார், சத்யபாமா.

துரதிருஷ்டவசமாக, பார்கவி சில ஆண்டுகளில் காலமானார். மனைவியின் மரணம் எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. துறவிபோல் வாழ்ந்தார். மகனின் நிலையைக் கண்டு வருந்திய சத்யபாமா, அவருக்கு மறுமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. எனினும், "பார்க்கவியை இழந்தது நமது துரதிருஷ்டம். என்றாலும், நீ வாழ்க்கையில் வெறுப்படைவது நல்லதல்ல. அது உன் உடல் நலனையும், எதிர்காலத்தையும் பாதிக்கும்" என்று சத்யபாமா எடுத்துக் கூறவே, மறுமணத்துக்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார். தாயார் பார்த்து முடித்த சதானந்தவதியை, 1942_ம் ஆண்டு ஆனி மாதம் 16_ந் தேதி எம்.ஜி.ஆர். மணந்தார். சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் 25 ரூபாய் வாடகை வீட்டில் எம்.ஜி.ஆர். குடும்பத்துடன் குடியேறினார்.

சதானந்தவதி முதல் முறையாக கருதரித்தபோது, காச நோய் பற்றிக் கொண்டது. அவருடைய வயிற்றில் உருவாகியிருந்த கரு, கர்ப்பப்பைக்கு வெளியே இருந்ததை டாக்டர்கள் கண்டு பிடித்தனர். அது அப்படியே வளர்ந்தால், தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் கருதினார்கள். எனவே, ஆபரேஷன் மூலம் கரு அகற்றப்பட்டது. 1947_ம் ஆண்டில், மாதம் 170 ரூபாய் வாடகைக்கு அடையாறில் ஒரு வீடு பார்த்து குடியேறினார், எம்.ஜி.ஆர். அங்கு வசித்தபோது, அன்னை சத்யா அம்மையார் காலமானார். அந்த துயரத்தில் இருந்து எம்.ஜி.ஆர். மீள வெகு காலம் பிடித்தது. 1949_ம் ஆண்டில், சதானந்தவதிக்கு இரண்டாவது முறையாக கருச்சிதைவு ஏற்பட்டது. அதன் பின், அவர் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையானார். 1962_ல் அவர் மறையும் வரை, நோயாளியாகவே இருந்து, மருந்து _ மாத்திரைகளுடன் வாழ்ந்தார்.

எம்.ஜி.ஆர். தன் மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். 20 ஆண்டு காலம், சதானந்தவதியுடன் குடும்பம் நடத்திய போதிலும், அவர் இல்லறத் துறவியாகவே வாழ்ந்தார். குடும்பத்தில் சோதனை நிறைந்திருந்தபோதிலும், படத்துறையில் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார். "வீர ஜெகதீஷ்", "மாயா மச்சீந்திரா", "பிரகலாதா", "சீதா ஜனனம்" ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். 1941_ல் "ஏழிசை மன்னர்" எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, "அசோக்குமார்" படத்தின் மூலம் கிடைத்தது. எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் "அசோக்குமார்." அசோக்குமாரைத் தொடர்ந்து "தமிழறியும் பெருமாள்", "தாசிப்பெண்", "ஹரிச்சந்திரா" (ஜெமினி), "சாலிவாகனன்", "மீரா", "ஸ்ரீமுருகன்" முதலிய படங்களில் நடித்தார். பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்படாத காலக்கட்டம் அது. சொந்தக் குரலில் பாடத்தெரிந்தவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க முடியும். அழகும், திறமையும் உள்ள எம்.ஜி.ஆர், கதாநாயகனாக உயர முடியாமல் போனதற்கு அதுதான் காரணம். 1946_ல் பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது.

MGR Articles list

  • Yathaartham - views
    Political views about Tamils in Srilanka
  • Health articles
    Health is important in your life, that's why it is important to take preventive measures early

MGR you tube videos

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %