Mgr Most popular articles
- Published Date
- Hits: 6068
எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக உயர்த்திய "மலைக்கள்ளன்" ஜோடியாக பானுமதி நடித்தார்
"மருதநாட்டு இளவரசி"க்குப்பின், "அந்தமான் கைதி", "மர்மயோகி" ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இந்த இரண்டு படங்களும் 1951_ல் வெளிவந்தன. "அந்தமான் கைதி"யின் கதை, வசனம், பாடல்களை கு.சா.கிருஷ்ணமூர்த்தி எழுதியிருந்தார். டி.கே.எஸ். சகோதரர்கள் மேடையில் நடித்த வெற்றி நாடகம். இதில் குணச்சித்திர வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். இப்படம் சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. "மர்மயோகி" ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. திரைக்கதை _ வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமி எழுதியிருந்தார். டைரக்ஷன்: கே.ராம் நாத். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி மாதுரிதேவி. வில்லியாக ஆனால் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலிதேவி நடித்தார்.
"ராபிஹுட்" ஆங்கில படத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட இப்படத்தில், கதாநாயகன் கரிகாலனாக எம்.ஜி.ஆர். பிரமாதமாக நடித்தார். "கரிகாலன் குறி வைத்தால் தவறமாட்டான்; தவறுமேயானால் குறி வைக்கமாட்டான்" என்று வசனம் பேசி, பல வீர தீரச் செயல்களைச் செய்தார். ஒரு கட்டத்தில், நாற்காலியை காலால் உதைத்து, அது தன்னிடமே வருமாறு செய்து, அதில் உட்கார்ந்து அஞ்சலிதேவியை சந்திப்பார். அக்கட்டம் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலை பெற்றது. சுருக்கமாகக் கூறினால், இந்தப் படத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் புகழ், மேலும் ஒரு படி உயர்ந்தது. செருகளத்தூர் சாமா, மர்மயோகியாகத் தோன்றி, ரசிகர்களை பயமுறுத்தினார். அதனால் இப்படத்துக்கு "ஏ" சர்டிபிகேட் ("வயது வந்தோருக்கு மட்டும்") கொடுக்கப்பட்டது. தமிழில் "ஏ" சர்டிபிகேட் பெற்ற முதல் படம் இதுதான்.
1952_ல், எம்.ஜி.ஆர். நடித்த "குமாரி", "என் தங்கை" ஆகிய படங்கள் வெளிவந்தன. இதில் "என் தங்கை" அருமையான படம். பிற்காலத்தில் சிவாஜிகணேசனும், சாவித்திரியும் நடித்த "பாசமலர்" எப்படி அண்ணன் _ தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டும் காவியமாக அமைந்ததோ, அது போன்ற உன்னதமான படம் "என் தங்கை." இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி கிடையாது. பார்வை இழந்த தன் தங்கையின் (ஈ.வி.சரோஜா) எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த தியாகியாக எம்.ஜி. ஆர். நடித்தார். பல சோதனைகளுக்குப் பின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமண ஏற்பாடுகள் செய்வார், எம்.ஜி.ஆர். கடைசி நேரம். எதிர்பாராதவிதமாக தங்கை இறந்து விடுவாள்.
தங்கையின் உடலை தோள் மீது போட்டுக்கொண்டு கடற்கரையில் நடப்பார், எம்.ஜி.ஆர். அவரைக் காப்பாற்றுவதற்காக பி.எஸ்.கோவிந்தன் தன் காதலியுடன் ஓடுவார். ஆனால், கடற்கரை சாலையில் நடக்கும் எம்.ஜி.ஆர், கடல் மணலில் வேகமாக நடப்பார். பி.எஸ்.கோவிந்தன் காப்பாற்றுவதற்குள், கடலில் இறங்கி விடுவார், தங்கையின் உடலுடன்! இந்தக் காட்சியைப் பார்த்த பெண்கள் கதறினார்கள்; ஆண்கள் கண்கலங்கினார்கள். "மருதநாட்டு இளவரசி" போல இதிலும் எம்.ஜி.ஆருக்கு சாதாரண உடை. நாலு முழ வேட்டி, கட்டம் போட்ட சட்டை. படம் முழுவதும் இந்தத் தோற்றத்தில்தான் எம்.ஜி.ஆர். வருவார்.
பெண்களின் கண்ணீர் வெள்ளத்தில், வெற்றிநடை போட்ட படம் "என் தங்கை." இதற்கிடையே, கருணாநிதி, எம்.ஜி.ஆர், டைரக்டர் காசிலிங்கம், பி.எஸ்.வீரப்பா ஆகியோர் சேர்ந்து "மேகலா பிக்சர்ஸ்" என்ற படக்கம்பெனியைத் தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முதல் படம் "நாம்". இதில் எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் இணைந்து நடித்தனர். (ஜானகி, கடைசியாக நடித்த படம் இதுதான்.) கதை_ வசனத்தை கருணாநிதி எழுதினார். எம்.ஜி.ஆர். "பாக்சர்" வேடத்தில் சிறப்பாக நடித்தார்.
1954_ம் ஆண்டு ஜுலை 22_ந்தேதி வெளிவந்த படம் "மலைக்கள்ளன்", எம்.ஜி.ஆரை "சூப்பர் ஸ்டார்" அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்தப்படம், கோவை பட்சிராஜா ஸ்டூடியோ தயாரிப்பு. பட்சி ராஜா அதிபர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு டைரக்டர் செய்தார். பொதுவாக பட்சிராஜா ஸ்டூடியோ அதிகப் படங்களைத் தயாரிப்பதில்லை. ஆனால் தயாரிக்கும் படங்கள் `சூப்பர் ஹிட்' படங்களாக அமைவது வழக்கம். பாகவதர் நடித்த "சிவகவி", பி.யு.சின்னப்பா நடித்த "ஆர்யமாலா", "ஜகதலபிர தாபன்" ஆகியவை பட்சிராஜா தயாரிப்புதான். அதேபோல, "மலைக்கள்ள"னும், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படம் தயாரானதில் ஒரு சுவையான பின்னணி உண்டு.
"மலைக்கள்ளன்", நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். "பராசக்தி" வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. "மனோகரா" படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். "நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்" என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார். இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். "மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்" என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.
உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். "நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளனில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார். (1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)
கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார். கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய_ இனிய நடையில் எழுதியிருந்தார்.
எம்.ஜி.ஆரும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது. மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகா தேவன், சந்தியா, சுரபி பால சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரராக வந்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார். பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.
மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக்கதை தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் இந்தியில் திலீப்குமார் நடித்தார். எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே நடித்தனர். "மலைக்கள்ளன்" 6 மொழிகளிலும் மகத்தான வெற்றி பெற்றான்.
MGR Articles list
-
2013
-
2012
-
அன்பே வா" ஏவி.எம். தயாரித்து, மகத்தான வெற்றி கண்ட படம்
-
ஆயிரத்தில் ஒருவன்" மகத்தான வெற்றி
-
"எங்க வீட்டுப்பிள்ளை" மாபெரும் வெற்றி- 7 தியேட்டர்களில் வெள்ளி விழா
-
எம்.ஜி.ஆர். படத்தில் கே.பாலசந்தர் "தெய்வத்தாய்"
-
எம்.ஜி.ஆர் சரோஜாதேவி ஜோடி ரசிகர்கள் மிகவும் விரும்பினர்
-
"தாய் சொல்லைத் தட்டாதே" சூப்பர் ஹிட், நூறு நாட்கள், தொடர்ந்து ஹவுஸ்புல்
-
சமூகப் படங்களுக்கு எம்.ஜி.ஆரை திருப்பிய "திருடாதே மிகப்பெரிய வெற்றி
-
நாடகத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர். கால் எலும்பு முறிந்தது:
-
எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்" மகத்தான வெற்றி
-
மதுரை வீரன்" மூலம் வசூல் சக்ரவர்த்தி ஆனார்
-
எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக உயர்த்திய மலைக்கள்ளன்
-
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி
-
எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபா" தமிழில் முதல் வண்ணப்படம்
-
திரை உலகில் எம்.ஜி.ஆர். எதிர் நீச்சல்: கதாநாயகனாக 11 ஆண்டு பிடித்தது
-
Mega Serial on MGR
-
-
2010
-
2009
-
2007