Mgr Most popular articles

maalaimalar.com nov 2009

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி" அமோக வெற்றி

1947_ம் ஆண்டு இந்தியாவின் வரலாற்றில் எப்படி முக்கியமானதோ. அதுபோல் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலும் முக்கியமானது. 1947 ஆகஸ்ட் 15_ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு 4 மாதங்களுக்கு முன்பாக, அதாவது ஏப்ரல் 11_ந் தேதி எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி" படம் வெளியாயிற்று. எம்.ஜி.ஆர். நடித்த முதல் திரைப்படமான "சதிலீலாவதி" 1936_ல் வெளியானது. அதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர் கதாநாயகன் ஆனார். அவர் கதாநாயகன் ஆனது எப்படி என்று பார்ப்போம்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.ஏ.சாமி, இலங்கையில் வாழ்ந்தவர். அவர் "பில்ஹனன்" என்ற நாடகத்தை எழுதினார். இந்த நாடகத்தை திருச்சி வானொலி நிலையத்துக்கு அனுப்பினார். அதை ஒலிபரப்புவதற்கு ஏற்றுக்கொண்ட திருச்சி வானொலி நிலையம், அதை 1944 ஆகஸ்டு 29_ந்தேதி ஒலிபரப்பியது. கதாநாயகன் பில்ஹணனாக நடித்தவர் அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜ பாகவதர்! அவர் நடித்த ஒரே ரேடியோ நாடகம் இதுதான்.

 பாகவதர் பங்கு கொண்ட காரணத்தால், இந்த ரேடியோ நாடகத்தை தமிழகமே ஆவலுடன் கேட்டது. அப்படிக் கேட்டவர்களில் ஒருவர், நாடக மேதை டி.கே.சண்முகம். அவர் அதை மேடை நாடகமாக்க விரும்பினார். அவர் உடனே ஏ.எஸ்.ஏ.சாமியுடன் தொடர்பு கொண்டு, "பில்ஹணன்" ரேடியோ நாடகத்தை மேடைக்கு ஏற்றவாறு மாற்றித்தருமாறு கேட்டுக்கொண்டார். அவரும், தக்கபடி மாற்றித் தந்தார். "பில்ஹணன்" மேடையில் அரங்கேறியது. கதாநாயகன் டி.கே.சண்முகம்; கதாநாயகி எம்.எஸ்.திரவுபதி. இந்தக் காலக்கட்டத்தில் ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ் போல ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனமும் படத்தொழிலில் முன்னணியில் இருந்தது. எம். சோமசுந்தரம், எஸ்.கே.மொகிதீன் ஆகிய இருவரும் இதன் அதிபர்கள். "பில்ஹணன்" நாடகத்தை "ஜுபிடர்" சோமு பார்த்தார். அதை படமாக்க முடிவு செய்தார். ஏ.எஸ்.ஏ.சாமியை அழைத்து, ஜுபிடரின் 6 படங்களுக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தத்தின்படி, "வால்மீகி", "ஸ்ரீமுருகன்" ஆகிய படங்களுக்கு சாமி வசனம் எழுதினார்.

"ஸ்ரீமுருகன்" படத்தில் கதாநாயகனாக (முருகனாக) ஹொன்னப்ப பாகவதர் நடித்தார். பரமசிவன் வேடத்தில் எம்.ஜி.ஆர். தோன்றினார். அவரும், பார்வதியாக நடித்த கே.மாலதியும் இப்படத்தில் ஆடிய சிவ_ பார்வதி தாண்டவம், ரசிகர்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆரும், ஏ.எஸ்.ஏ. சாமியும் நண்பர்கள் ஆனார்கள். அடுத்தபடியாக, "ராஜகுமாரி" என்ற படத்தைத் தயாரிக்க ஜுபிடர் முடிவு செய்தது. கதை, வசனத்துடன் டைரக்ஷன் பொறுப்பையும் ஏற்கும்படி ஏ.எஸ்.ஏ.சாமியிடம் ஜுபிடர் சோமு கூறினார். அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தார், சாமி. இந்தப் படத்தின் கதாநாயகனாக பி.யு.சின்னப்பாவையும், கதாநாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியையும் ஒப்பந்தம் செய்ய, ஜுபிடர் நிறுவனம் நினைத்தது. ஆனால் ஏ.எஸ்.ஏ.சாமி, "ஸ்ரீமுருகன் படத்தில் சிவனாக நடித்த எம்.ஜி.ராமச்சந்திரனும், பார்வதியாக நடித்த கே.மாலதியும் திறமையானவர்கள். அவர்களையே கதாநாயகன் _ கதாநாயகியாக நடிக்க வைத்து "ராஜகுமாரி"யை குறைந்த செலவில் தயாரிக்கலாம்" என்று கூறினார்.

ஜுபிடர் அதிபர்களுக்கு இது ஆச்சரியம் அளித்தது. "நீங்கள் டைரக்ட் செய்யப்போகும் முதல் படம் இது. சின்னப்பாவும், டி.ஆர்.ராஜகுமாரியும் நடித்தால் வெற்றி நிச்சயம். நாங்களே பெரிய நடிகர் _நடிகைகளை போடலாம் என்கிறபோது, நீங்கள் ராமச்சந்திரனையும், மாலதியையும் போடலாம் என்கிறீர்களே!" என்று கூறினார்கள். "இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ராமச்சந்திரனையும், மாலதியையும் வைத்தே, இதை பெரிய வெற்றிப்படமாக்க முடியும்" என்று உறுதியாக சொன்னார், ஏ.எஸ்.ஏ.சாமி. "உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை இருக்கும்போது, நாங்கள் மறுப்பு சொல்லவில்லை. உங்கள் விருப்பப்படி செய்யுங்கள்" என்றார்கள் ஜுபிடர் சோமு வும், மொகிதீனும். ஜுபிடர் நிறுவனம், ஏற்கனவே எம்.கே.தியாகராஜ பாகவதரை வைத்து "உதயணன்" என்ற படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. இதில் பாகவதரும், வசுந்தராதேவியும் ஜோடியாக நடிக்க இருந்தனர். லட்சுமிகாந்தன் வழக்கில் பாகவதர் சிறை செல்ல நேர்ந்ததால், அந்தப் படம் தயாரிக்கப்படவில்லை.

இந்தப் படத்திற்கு இசை அமைப்பதற்காக, சிதம்பரம் ஜெயராமன் ஜுபிடருக்கு வந்தார். அப்போது ஏ.எஸ்.ஏ. சாமிக்கும், அவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. "என் மைத்துனர் மு.கருணாநிதி, திராவிட கழகத்தில் இருக்கிறார். பெரியாரின் "குடியரசு" பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். எழுத்தாற்றல் மிக்கவர். வசனம் எழுதுவதற்கு அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்" என்று சாமியிடம், சிதம்பரம் ஜெயராமன் கேட்டுக் கொண்டார். அதை ஞாபகத்தில் வைத்திருந்த ஏ.எஸ்.ஏ.சாமி, வசனம் எழுத வருமாறு கருணாநிதிக்கு தந்தி அனுப்பினார். தந்தியை பெரியாரிடம் காட்டினார், கருணாநிதி. "இது நல்ல வாய்ப்பு. போய் வாருங்கள்" என்று, பெரியார் அனுப்பி வைத்தார். ஈரோட்டிலிருந்து கோவைக்கு சென்றார், கருணாநிதி. ஏற்கனவே நாடகங்கள் எழுதி அனுபவப்பட்ட அவர், ஏ.எஸ்.ஏ.சாமி சொன்ன காட்சிகளுக்கெல்லாம் வசனம் எழுதிக் கொடுத்தார். அவருடைய திறமையை புரிந்து கொண்ட ஏ.எஸ்.சாமி, முழு வசனத்தையும் எழுதித்தரும்படி சொன்னார். முழு வசனத்தையும் எழுதிக் கொடுத்தார், கருணாநிதி. இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. விரைவிலேயே நெருங்கிய நண்பர் களானார்கள். அப்போது, எம்.ஜி.ஆர். காங்கிரஸ் அனுதாபியாகவும், ஆத்திகராகவும் இருந்தார். அவர் கழுத்தில் ருத்திராட்ச மாலை போட்டிருப்பார். அவர், காந்தி எழுதிய புத்தகங்களை கருணாநிதிக்கு பரிசளிப்பார். கருணாநிதி, பெரியார் எழுதிய புத்தகங்களைக் கொடுப்பார். "ராஜகுமாரி" படம் வேகமாக வளர்ந்தது. எம்.ஜி.ஆர். மீது ஏ.எஸ்.ஏ.சாமி வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. சிறப்பாக நடித்தார். படத்தில், எம்.ஜி.ஆரும், டி.எஸ். பாலையாவும் போடும் கத்திச்சண்டை சிறப்பு அம்சமாக இருந்தது.

இந்தப் படத்தில் வில்லியாக நடித்தவர், இலங்கைக் குயில் தவமணிதேவி. படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டுக்கொண்டு வந்து நின்ற தவமணி தேவியைப் பார்த்து, டைரக்டர் உள்பட அனைவரும் அசந்து போனார்கள். மர்லின் மன்றோவை தோற்கடிக்கும் விதத்தில் கவர்ச்சியின் சிகரமாகத் தோன்றினார். ஜாக்கெட் போட்டிருந்தார்; ஆனால் கடைசி பட்டன்களைத் தவிர மற்ற பட்டன்களைப் போடவில்லை! "இவ்வளவு கவர்ச்சி வேண்டாம் தாயே!" என்று கூறினார், ஏ.எஸ்.ஏ.சாமி. "கதாநாயகனை மயக்கும் விதத்தில் நடனம் ஆடுவதற்காகத்தானே வந்திருக்கிறேன். இப்படி இருந்தால்தான் இயற்கையாக இருக்கும்" என்றார், தவமணிதேவி. கடைசியில், டைரக்டரும், தவமணிதேவியும் கலந்து பேசி ஒரு "சமரச உடன்பாட்டு"க்கு வந்தனர். அதன்படி ஜாக்கெட்டுக்கு மத்தியில் ஒரு காகிதப்பூ சொருகப்பட்டது! இந்தப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு எம்.எம்.மாரியப்பா பின்னணியில் பாடினார். எம்.ஜி.ஆருக்கு குரல் கொடுத்த முதல் பின்னணி பாடகர் இவர்தான். இப்படத்தில் எம்.என்.நம்பியார் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.

1947 ஏப்ரல் 11_ந்தேதி, "ராஜகுமாரி" படம் ரிலீஸ் ஆகியது. படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் "எம்.ஜி.ராம்சந்தர்" என்று டைட்டிலில் காட்டப்பட்டது. "வசனம் உதவி" என்று கருணாநிதி பெயர் இடம் பெற்றது. படம் "சூப்பர் ஹிட்"டாக அமைந்தது. மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர், பிரபலமானார். இந்தப்படம் வெளிவந்தபோது, கருணாநிதியின் தந்தை முத்துவேலரின் கண் ஒளி மங்கியிருந்தது. இருப்பினும், திருவாரூரில் மந்திரிகுமாரி ரிலீஸ் ஆன தியேட்டருக்குச் சென்று, வசனங்களைக் கேட்டு மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சி நடந்து சில நாட்களுக்குப்பின் அவர் காலமானார்

MGR Articles list

  • Yathaartham - views
    Political views about Tamils in Srilanka
  • Health articles
    Health is important in your life, that's why it is important to take preventive measures early

MGR you tube videos

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %