-
Published Date
-
Hits: 3127
09 09 16
சரோஜா தேவி: 7. கோபால்...!
1963ல் எம்.ஜி.ஆர்.-சரோ - தேவர் பிலிம்ஸ் கூட்டணியில் மற்றுமோர் 100 நாள் வெற்றிச் சித்திரம் நீதிக்குப் பின் பாசம்.அதில் புரட்சி நடிகர் நிஜமாகவே ஒரு வாத்தியார் என்பதை நிருபித்திருப்பார். சரோவுக்கு சைக்கிள் கற்றுத் தரும் கட்டத்தை, கண்ணதாசன் சுவையான வார்த்தைகளில் டூயட்டாக வடிவமைத்தார்.'அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே இடுப்பை இடுப்பை வளைக்காதே ஹாண்டில் பாரைப் போடாதே’பாடலைக் கேட்கும் யாருக்கும் மிதி வண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட முதல் நாள் நிச்சயம் நினைவுக்கு வரும்.
எம்.ஜி.ஆர். ரசிகர்களின் மதிப்புக்குரிய அண்ணி சரோ. அநியாயத்துக்கு பிஸி. அவரது தாயார் ருத்ரம்மா மகளின் நட்சத்திர வாழ்க்கையை கால்ஷீட்டுகளாகக் கணக்கிட்டார்.முதன் முதலில் வண்ணப்படங்களை யார் எடுத்தாலும் சரோவே நடிக்கவேண்டும் என அடம் பிடித்தனர்.சரோ தேவர் பிலிம்ஸின் பிரியசகி. ஜனவரி 7ஆம் தேதி அவரது பிறந்த நாள். தேவர் சரோவுக்குக் கனகாபிஷேகம் செய்யாத குறையாக பொற்காசுகளால் வாழ்த்தி விட்டு வருவார்.
சரோ வசித்ததால் அடையாறு காந்தி நகர் தமிழ் சினிமாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் திரை பீடமாகப் புகழ் பெற்றது.
தேவர் வேட்டைக்காரனுக்காக எம்.ஜி.ஆர் உள்பட வழக்கமான எம்.ஆர். ராதா, நம்பியார், அசோகன் தேதிகளை மொத்தமாக வாங்கிவிட்டார். சரோ மட்டுமே பாக்கி. நம்பிக்கையின் சிகரமாக சரோவின் இல்லத்துக்குள் நுழைந்தார்.ருத்ரம்மா விடம் 'வேட்டைக்காரன் 1964 பொங்கல் ரிலீஸ்’ என்ற படியே பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்.'முன்னே மாதிரி ஒரேயடியா கொடுக்க முடியாதுங்க. பாப்பா ராத்திரி பகலா வேல செஞ்சாலும் போதல. ’தேவர் அதை சட்டை செய்யவில்லை. எல்லோரிடமும் சொல்வது தனக்கு ஒத்து வராது. சரோவைப் பொறுத்தவரையில் அவர் ஸ்பெஷல் என்கிற எண்ணம்.
'எம்.ஜி.ஆரின் கால்ஷீட்டை நான் வீணாக்க முடியாதேம்மா...’ என்றார்.'நாகிரெட்டி,ஜி.என்.வேலுமணி, எம்.ஜி.ஆர். மேனேஜர் வீரப்பா, ராமண்ணா இவங்களும் காத்திருக்காங்க. நீங்கமட்டும் மொத்தமா கேட்டா எப்படி? ’தேவர் திடுக்கிட்டார். எல்லோருக்கும் ஒரே தராசா?தேவரை ருத்ரம்மா மதிக்காமல் அலட்சியப்படுத்துவதா... அத்தனை தூரத்துக்கு வந்து விட்டாரா?மறவன் ரத்தம் உச்சி மண்டையில் பாய்ந்தது.வெற்றுக் காசோலைகளால் உழைக்கும் கலைஞர்களின் வயிற்றில் அடிக்கும் தயாரிப்பாளர்களுக்கு நடுவில் தேவர் வேடந்தாங்கல்.எடுத்த எடுப்பில் குதிரை, நாய்களுக்கும் மொத்த சம்பளத்தையும் முன் பணமாகவே கொடுத்து விரட்டி வேலை வாங்குவது தேவர் ஸ்டைல். அவருக்கு ஆத்திரம் வராமல் இருந்தால் மாத்திரமே ஆச்சர்யப்பட வேண்டும்.
அதிலும் சரோ அரை டஜன் படங்களுக்கும் மேல் தேவர் பிலிம்ஸில் அரிதாரம் பூசியவர். தேவரின் ஒவ்வொரு அசைவுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் அறிந்தவர். அவரும் வேடிக்கை பார்க்கிறாரே...‘எம்.ஜி.ஆர். ஒதுக்கின நாள்ள சரோஜா வந்து நடிக்குமா, இல்லையா...? ’தேவர் ஓர் எஜமானராக உள்ளுக்குள் சுயமரியாதைச் சுடர் எரிய நின்றார்.
‘இப்படிப் பேசினா எம் பொண்ணு உங்க படத்துல நடிக்காது. ’ ருத்ரம்மா எரிமலைக்குள் கற்பூரத்தை எறிந்து விட்டார்.‘உங்க மக என் படத்துல நடிக்கணுமா வேணாமான்னு நீங்க முடிவு பண்ணக் கூடாது. அதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான். ’அங்கவஸ்திரத்தை ஆவேசமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு புயலாகப் புறப்பட்டார் தேவர். சினிமா காட்சி போல் சரோ ஓடி வந்து தடுத்தார். அதைச் சட்டை செய்யாமல் கார் வெளியேறியது. தெய்வத்தாய் ஷூட்டிங்கில் நடந்த இனிப்பு விஷயம், சரோவின் சர்க்கரை வார்த்தைகளில்:படப்பிடிப்பு நாள்களில் சாயந்தரமானா எம்.ஜி.ஆர். அண்ணனே டிபன் வரவழைப்பார். அதுல ஸ்பெஷல் ஐட்டமா இருக்கிறது பாஸந்தி. அண்ணன் பாஸந்தியை விரும்பிச் சாப்பிடுவார். அப்ப நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன். எங்கிட்டே ‘சரோஜா, பாஸந்தி சாப்பிடு. உடல் கொஞ்சம் பூசினாப்பல வரும். ’ என்பார்.‘இல்லண்ணே... உண்டாகிற உடம்பு இயற்கையா உண்டாகட்டுமே... ’ என்பேன். அன்னிக்கு ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’ பாடல் சீன் எடுத்தாங்க. அதுல எம்.ஜி.ஆர். அங்கங்கே என்னை அலாக்கா தூக்கி வைப்பார். அத்தனை ஒல்லியா இருந்தேன். அதனாலதான் உடம்பில் கொஞ்சம் சதை போடட்டுமேன்னு கரிசனத்தோட கேட்டிருந்தார்னு புரிஞ்சிக்கிட்டேன்.
’-சரோஜாதேவி. தெய்வத்தாய் சினிமா விமர்சனத்தில் ஆனந்த விகடன் எழுதியவை, சரோ - எம்.ஜி.ஆர். ஜோடியை ஒவ்வொரு பாராவிலும் உச்சி குளிர வைத்தது.
மாணிக்கம் - -: எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லுப்பா!
முனுசாமி - : தெய்வத்தாயில் எம்.ஜி.ஆர். பிரமாதமா இங்கிலீஷ் டான்ஸ் ஆடியிருக்கார் பார்த்தியா? ஏன் நடிப்புக்கும் தான் என்ன குறைச்சல்?தனக்குக் கல்யாணம் ஆன மாதிரி சரோஜாதேவியோட நாடகம் ஆடறாரே, அந்த சீன்லே சிரிப்பை அடக்க முடியலே!
மாணிக்கம் - : அந்தக் காட்சி மட்டுமா, முதல்லருந்தே ஸ்கூட்டர் மாறிப் போறதும், போன்ல ரெண்டு பேரும் பேசிக்கறதும் ‘பார்க்லே’ சந்திக்கிறதும் எல்லா காட்சிகளும் நல்லாத்தான் இருந்தது.
முனுசாமி : - சரோஜாதேவியும் குறும்புக்கார பொண்ணா நல்லா நடிச்சிருக்காங்க. வெடுக்குப் பேச்சும், துடுக்குத்தனமும், பாட்டி மாதிரி இருமி நடிக்கிறதும் ரொம்ப ஜோர்.
‘இந்தப் புன்னகை என்ன விலை, வண்ணக்கிளி சொன்ன மொழி’ ரெண்டு டூயட்டும் கேட்க சுகமாயிருந்தது. எனக்கு ரொம்பப் பிடிச்சது.’
சமீபத்தில் சென்னையின் பிரபலமான பள்ளி ஒன்றில் நடந்த பல்சுவை நிகழ்ச்சிகளில் ‘கனெக்ஷன்’ என்கிற விளையாட்டும் ஒன்று. அதில் மூதறிஞர் ராஜாஜியின் முழு பெயரைக் கண்டு பிடிப்பதற்காகக் திரையில் காட்டப்பட்டவை சீட்டாட்ட ராஜா, புதிய பறவை சிவாஜி, சேலை ஆகியன.இமை மூடித் திறக்கும் நொடி நேரத்துக்குள் மாணவிகள் மிகச் சரியாக ராஜாஜியின் திருநாமத்தை ‘ராஜ கோபாலச்சாரி’ என்று கண்டுபிடித்துச் சொன்னார்களாம்! நீதிக்குப் பின் பாசம் படத்தில் கூட எம்.ஜி.ஆர். பெயர் கோபால்.‘வாங்க வாங்க கோபாலய்யா வழக்கு என்ன கேளுங்கய்யா... ’ என்று சரோவே நாயகனை வரவேற்றுப் பாடுவார்.பாரத விலாஸில் சிவாஜியும் - கோபால் தான். அப்படி எத்தனையோ ஹீரோக்கள் கோபால் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கே. பாக்யராஜூக்கும் கோபால் ராசியான திருநாமம். சின்ன வீடு படத்தில் அவரை கோவை சரளா கோவாலு என்று அழைக்கும் விதமே அலாதியாக இருக்கும். அரங்குகளில் அமர்க்களத்தை உண்டு பண்ணும்! சமூக சீர்திருத்த கருத்துகளைச் சொல்லி வெள்ளி விழா கொண்டாடிய, கே.பாக்யராஜின் இது நம்ம ஆளு படத்தில் அவரது பெயர் கோபால்.‘புதிய பறவை கோபால்’ மட்டும் இளங்குருத்துக்களின் மனத்திலும் பதியம் போட மிக முக்கிய காரணம் சரோ.
dinamalar.com 06 06 2016