அட்வான்ஸா? இந்தா ஒரு சவரன்!
1965-ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் அதிகாலையில் 5 மணிக்கு நடிகை சரோஜாதேவி வீட்டுக்குக் காரை ஓட்டிச் சென்றார் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நாகிரெட்டி. அப்போது நடிகை சரோஜா தேவியின் வீட்டு கேட் திறக்கப்படவில்லை. எனவே காரை வெளியே நிறுத்திவிட்டு ஸ்டீரிங்கில் கைகளை வைத்துச் சாய்ந்திருந்தார்.
6 மணி அளவில் வெளியே வந்த நடிகை சரோஜா தேவியின் தாயார் வெளியே கார் நிற்பதைப் பார்த்தார். அவருக்கு அந்த ஹெரால்ட் காரை அடையாளம் தெரியும். உள்ளே ஓட்டுநர் ஆசனத்தில் ரெட்டிகாருவைப் பார்த்த அவர்,""சார் நீங்கள் இப்படி வெளியே இருக்கலாமா? இது உங்கள் வீடு அல்லவா? காலிங் பெல் அடித்திருக்கலாமே'' என்றார். ""அம்மா எனக்கு அதிகாலையில் எழுந்து பழக்கம். அதனால் புறப்பட்டேன். உங்களை சிரமப்படுத்த வேண்டாம் என்று இப்படி இருந்துவிட்டேன்'' என்று சொன்னார்.