சரோஜாதேவியின் கணவர் மரணம்: 52 வயதில் மாரடைப்பால் இறந்தார்

நடிகை சரோஜாதேவியின் கணவர் ஸ்ரீஹர்ஷா மாரடைப்பால் மரணம் அடைந்தார். சரோஜாதேவிக்கும், பி.கே.ஸ்ரீஹர்ஷாவுக்கும் 1967-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஹர்ஷா பி.ஈ. பட்டம் பெற்ற என்ஜினீயர். திருமணத்துக்குப்பின், கணவர் அனுமதியுடன் மீணஙடும் படங்களில் நடித்தார். அதன்பின் கணவருடன் பெங்களூரில் குடியேறினார். 1986 ஏப்ரல் 18-ந்தேதியன்று ஹர்ஷாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை, பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு, தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். ஏப்ரல் 21-ந் தேதி அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவரை காப்பாற்ற முடியவில்லை. பகல் 12-30 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

அவர் உடல், சதாசிவநகரில் உள்ள அவர் வீட்டுக்குக் கொண்டு போகப்பட்டது. அங்கு, கர்நாடக சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், கன்னட நடிகை மஞ்சுளா மற்றும் கலை உலகப் பிரமுகர்கள், கர்நாடக தகவல் துறை அமைச்சர் ஜீவராஜ் ஆல்வா உள்பட பிரமுகர்கள் பலர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். ஹர்ஷா மரணச்செய்தியைக் கேட்டு, முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். துயரம் அடைந்தார். சரோஜாதேவிக்கு அனுப்பிய அனுதாபச் செய்தியில், 'தங்கள் கணவர் மரணம் அடைந்த செய்தி கேட்டு, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

(சரோஜாதேவியின் கணவர் இறந்த அதே நாளில் இரவு 8 மணிக்கு, சென்னையில் நடிகை வைஜயந்திமாலாவின் கணவர் டாக்டர் பாலி, 60-வது வயதில் மரணம் அடைந்தார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், அதைக் குணப்படுத்துவதற்காக நடந்த ஆபரேஷனைத் தொடர்ந்து அவர் காலமானார்.) ஸ்ரீஹர்ஷாவின் உடல், கொடி கனஹள்ளி என்ற இடத்தில் உள்ள சரோஜாதேவிக்கு சொந்தமான தோட்டத்தில் மறுநாள் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

கணவர் இறந்த துயரம் தாங்காமல் சரோஜாதேவி அழுத வண்ணம் இருந்தார். ஒரு கட்டத்தில் கண்ணீர் முழுவதும் வற்றிப்போய், கண்களையே திறக்க முடியவில்லை. பிரபல கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் பத்ரிநாத் வந்து, கண்களை பரிசோதித்தார். 'இப்படி அடியோடு கண்ணீர் வற்றிப்போனால், கண் பார்வை போய்விடும்' என்று கூறி, உடனடியாக சிங்கப்பூரில் இருந்து மருந்து தருவித்தார். அந்த மருந்தை போட்டதும், கண்ணீர் ஊறத்தொடங்கியது. சரோஜாதேவிக்கு பார்வை சரியாகியது.

எம்.ஜி.ஆர். தன் மனைவி ஜானகி அம்மாளுடன் பெங்களூர் சென்று சரோஜாதேவிக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொன்னார். 'உனக்கு ஏற்பட்டுள்ள இழப்பு பெரியது. என்றாலும், எப்போதும் துயரத்திலேயே மூழ்கியிருப்பது ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். பொது வாழ்க்கையில் ஈடுபடுவதன் மூலம் துன்பத்தை மறக்கலாம். ராஜீவ் காந்தியிடம் சொல்லி, உன்னை 'எம்.பி' ஆக்குகிறேன்' என்று கூறினார். அதற்கு சரோஜா தேவி, 'அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. ஒரே குழப்பத்தில் இருக்கிறேன். எம்.பி. ஆவது பற்றி பிறகு யோசிக்கலாம்' என்று பதில் அளித்தார்.

சரோஜாதேவிக்கு ஆறுதல் கூறி, உலகம் முழுவதும் இருந்து அனுதாபச் செய்திகள் வந்து குவிந்தன. 'சிறு வயதில் கணவரை இழந்து விட்டீர்கள். அதே துயரத்தில் வாழ்நாளை கழிக்க நினைக்காதீர்கள். மறுமணம் செய்து கொள்ளுங்கள்' என்று பலர் எழுதியிருந்தார்கள். சில தொழில் அதிபர்களும், கோடீசுவரர்களும் சரோஜாதேவியை மறுமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். 'பண ஆசையால் உங்களை மறுமணம் செய்ய விரும்புவதாக நினைக்காதீர்கள். கோடிக்கணக்கில் எனக்கு சொத்து இருக்கிறது. தேயிலை எஸ்டேட்களும் இருக்கின்றன. என்னை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்' என்பதுபோல் எழுதப்பட்ட கடிதங்கள் ஏராளம். உறவினர்கள் சிலரும், சரோஜாதேவி மறுமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவர்களுக்கெல்லாம் சரோஜாதேவி சொன்ன உறுதியான பதில்: 'மறுமணம் செய்து கொள்ளும் உத்தேசம் எனக்கு இல்லை.'

Sarojadevi Most popular articles

Sarojadevi Articles list

Sarojadevi Gemeni you tube

Style Setting

Fonts

Layouts

Direction

Template Widths

px  %

px  %