maalaimalar.com oct 2009

டி.ஆர்.சுந்தரம் டைரக்ஷனில் எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபா" தமிழில் முதல் வண்ணப்படம்

இந்தியாவின் முதல் டெக்னிக் கலர் படம் திலிப்குமார் _ நிம்மி நடித்த "ஆன்". மெஹ்பூப் தயாரித்த இப்படம் இந்தியிலும், தமிழிலும் ஒரே நேரத்தில் (1952) வெளியிடப்பட்டது. அதன்பின் சில படங்களில் நடனக்காட்சிகளும், கனவுக்காட்சிகளும் மட்டும் கலரில் எடுக்கப்பட்டன.தமிழில் முதல் முழு நீள வண்ணப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார், டி.ஆர்.சுந்தரம். இதற்காக அவர் தேர்ந்தெடுத்த கதை "அலிபாபாவும் 40 திருடர்களும்." காலத்தை வென்று, உலக நாடுகள் அனைத்திலும் இன்றும் படிக்கப்பட்டு வரும் அரபுக்கதை. இதே "அலிபாபாவும் 40 திருடர்களும்" கதையை 1941_ம் ஆண்டில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தயாரித்தார். என். எஸ்.கிருஷ்ணன்தான் அலிபாபா! டி.ஏ.மதுரம் அவருடைய காதலி மார்ஜியானா! கலைவாணர் அவருக்கே உரித்தான பாணியில், அலிபாபாவை நகைச்சுவை கதாபாத்திரமாக மாற்றியிருந்தார். வீரதீரச் செயல்கள் கிடையாது; நகைச்சுவையுடன் கதை நகரும். இந்தப் படத்தில், கலைவாணர் நாடகக் குழுவைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ராமசாமி, அலிபாபாவின் தோழனாக நடித்தார். கனமான உடம்பைக் கொண்ட ராமசாமியை "புளி மூட்டை" என்று என்.எஸ்.கே. அழைப்பார். அதன்பிறகு, வெறும் ராமசாமி "புளிமூட்டை ராமசாமி" ஆனார். (பொன்னுசாமி பிள்ளையை "யதார்த்தம் பொன்னுசாமி" யாகவும், குப்புசாமியை "ஆழ்வார் குப்புசாமி"யாகவும் மாற்றியவர், கலைவாணர்தான்.) 

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "மந்திரிகுமாரி", "சர்வாதிகாரி" ஆகிய 2 வெற்றிப்படங்களில் நடித்திருந்த எம்.ஜி.ஆர். அலிபாபாவில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். கதாநாயகி பானுமதி. மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, கே.ஏ.தங்கவேலு, கே.சாரங்கபாணி, வித்யாவதி, எம்.என்.ராஜம் ஆகியோரும் இதில் நடித்தனர். "அலிபாபா" கேவா கலரில் தயாரிக்கப்பட்டது.

தமிழுக்கு கலர்ப் படம் புதிது என்பதற்காக, வெளிநாட்டில் இருந்து எந்த கேமராமேனையும் சுந்தரம் அழைக்கவில்லை. டபிள்ï ஆர்.சுப்பராவை கேமராமேனாக நியமித்தார். வசனங்களை ஏ.எல்.நாராயணன் எழுதினார். பாடல்களை மருதகாசி எழுத எஸ்.தட்சிணாமூர்த்தி இசை அமைத்தார். திரைக்கதை அமைத்து, படத்தை இயக்கி னார், டி.ஆர்.சுந்தரம். படத்தில் முக்கியமான காட்சி, 40 திருடர்களும் வசிக்கும் குகைதான். 40 திருடர்களும் குதிரையில் போகக்கூடிய அளவுக்கு, மைசூரில் பிரமாண்டமான 2 செட்டுகள் போடப்பட்டு இக்காட்சி படமாக்கப்பட்டது. இந்த குகை சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குவதற்கு மட்டும் 10 நாட்கள் பிடித்தன. திருடர்கள் ஒளிந்திருக்கும் பீப்பாய்களை, எம்.என்.ராஜமும், சாரங்கபாணியும் நீர்வீழ்ச்சியில் ஒவ்வொன்றாகத் தள்ளிவிட வேண்டும். இக்காட்சியைப் படமாக்க ஒகேனக்கல்லை தேர்ந்தெடுத்தார், சுந்தரம். சில பீப்பாய்கள் அங்கிருந்து, உருட்டி விடப்பட்டன. அக்காட்சிகளைப் படமாக்கியபின், பீப்பாய்கள் உருண்டோடுவது போன்ற காட்சிகள், ஸ்டூடியோவில் `செட்' போட்டு எடுக்கப்பட்டன. ஒரிஜினல் நீர் வீழ்ச்சி காட்சிகளுடன், செட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும் வித்தியாசமே தெரியாதபடி இணைக்கப்பட்டன. அந்த "கிளைமாக்ஸ்" காட்சி அருமையாக அமைந்தது. படம் 1956 பொங்கல் தினத்தன்று வெளிவந்து, வெற்றி வாகை சூடியது.

இந்தப்படம் முடிவடையும் தருணத்தில் டைரக்டர் டி.ஆர். சுந்தரத்துக்கும், எம்.ஜி.ஆருக்கும் சிறு மோதல் ஏற்பட்டது. இதுபற்றி, டி.ஆர்.சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு புத்தகமான "முதலாளி"யில், எழுத்தாளர் ரா.வேங்கடசாமி எழுதியிருப்பதாவது:- "மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோவைப் பொறுத்தவரையில் யாருக்காகவும், எதற்காகவும் காத்துக்கொண்டு இருக்கும் பழக்கமே இல்லை. ஏற்கனவே, "சுலோசனா" படத்தில் பி.யு.சின்னப்பாவுக்கு பதில் டி.ஆர். சுந்தரமே இந்திரஜித்தாக வேடம் ஏற்றார். அப்படி ஒரு சம்பவம் அலிபாபா சமயத்திலும் நடந்தது. படம் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், ஒரு பாட்டும், ஒரு சண்டைக்காட்சியும் மட்டும் பாக்கி இருந்தன. பாட்டு டூயட். எம்.ஜி.ஆரும், பானுமதியும் சேர்ந்து நடிக்க வேண்டும். சண்டைக்காட்சியில் எம்.ஜி.ஆர். மட்டும் தேவை. ஆக, எம்.ஜி.ஆர். வந்தால்தான் படப்பிடிப்பு. நாள் குறித்தாயிற்று. அவர் படப்பிடிப்புக்கு வரவில்லை. படப்பிடிப்பை சுந்தரம் ஒத்தி வைத்துவிடுவார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. எம்.ஜி.ஆருக்கு பதிலாக ஒரு டூப் நடிகரைப்போட்டு, பாட்டையும், சண்டைக்காட்சியையும் டி.ஆர்.எஸ். எடுத்து படத்தை முடித்து விட்டார். இரண்டு மூன்று நாட்கள் கழித்து, எம்.ஜி.ஆர். படப்பிடிப்புக்கு வந்தார். படப்பிடிப்பு நடைபெறும் அறிகுறியே தெரியவில்லை. உண்மையைத் தெரிந்து கொள்ள டி.ஆர்.எஸ். எதிரில் போய் நின்றார், எம்.ஜி.ஆர். வேறு யாரும் வாயைத் திறக்க மாட்டார்கள் என்பதை அவரும் அறிவார். "என்ன ராமச்சந்திரன்? படப்பிடிப்பு முடிந்து விட்டது. முடிந்த படத்தை பார்த்து விட்டுப் போங்க" என்றார், டி.ஆர். சுந்தரம். எம்.ஜி.ஆர். படத்தைப் பார்த்தார். டூப் நடிகர் எங்கே நடித்திருக்கிறார் என்றே தெரியவில்லை. அவ்வளவு கச்சிதமாகப் படம் எடுக்கப்பட்டு இருந்தது.இந்த சம்பவம் காரணமாக, மாடர்ன் தியேட்டர்சுக்கும், எம்.ஜி. ஆருக்கும் உள்ள தொடர்பு விட்டுப்போயிற்று. மனக்கசப்புடன்தான் அவர் வெளியேறினார் என்றால், அதுதான் உண்மை. 

இதற்கு முன்னால் படப்பிடிப்பு சமயத்திலும் ஒரு சின்ன சிக்கல். அலிபாபாவில் ஒரு வசனம் "அல்லா மீது ஆணையாக" என்று ஆரம்பிக்கும். அந்த வசனத்தைப் பேசத் தயங்கினார், எம்.ஜி.ஆர். அவர் தி.மு.க.வில் சேர்ந்திருந்த காலம் அது. வசனகர்த்தாவிடம், "அம்மாவின் மீது ஆணையாக" என்று மாற்றித்தரச் சொன்னார். ஆனால், வசனகர்த்தா ஏ.எல். நாராயணன் அதற்கு உடன்படவில்லை. "முதலாளியைக் கேட்டுவிடுங்கள்" என்று கூறி நழுவி விட்டார். படப்பிடிப்பு தினம். எம்.ஜி.ஆர். நடிக்கத் தொடங்கியதும், "அம்மாவின் மீது ஆணையாக இந்த அலிபாபா......" என்று வசனத்தை ஆரம்பிக்க, டைரக்டர் டி.ஆர்.சுந்தரம், "கட்... கட்..." என்று சொல்லிவிட்டார். "இங்கே பேச வேண்டிய வசனம் அம்மாவில் ஆரம்பிக்காது. அல்லாவின்தான் ஆரம்பிக்க வேண்டும். அலிபாபாவுக்கு அல்லாதான் தேவை...... வசனத்தை மாற்றும் வேலை எல்லாம் இங்கே வேண்டாம்" என்று கூறிவிட்டார்."

_ இவ்வாறு டி.ஆர்.சுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. "அலிபாபா" படம், மாடர்ன் தியேட்டர்சுக்கு அகில இந்திய ரீதியில் புகழ் தேடித்தந்தது. தெலுங்கிலும் இப்படம் "டப்" செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.